பிரதமர் மோடி தமிழகம் வரும் போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படவில்லை..அண்ணாமலைக்கு டிஜிபி பதிலடி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகையின்போது எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை நேற்று சந்தித்தார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோது, அவருக்கு பாதுகாப்பு குளறுபடிகள் செய்ததாகவும், ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே அது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் 2 மனுக்களை தனித்தனியாக ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய மாநில அரசு தன்னுடைய பணியில் இருந்து தவறியிருக்கிறது என்பதை ஆதாரத்தின் அடிப்படையில் மனுவாக ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்.
எப்படி இருக்கீங்க?.. இளையராஜாவின் கைகளை இறுக்க பற்றிய பிரதமர் நரேந்திர மோடி.. பூரித்து போன இசைஞானி

பழுதடைந்த உபகரணங்கள்
பிரதமர் வந்தபோது, நேரு உள்விளையாட்டு அரங்கில் 180 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அப்போது பிரதமரின் பாதுகாப்புக்கு முக்கிய உபகரணமாக இருக்கவேண்டிய மாநில அரசு வைத்திருந்த நிறைய 'மெட்டல் டிடெக்டர்' கருவிகள் வேலை செய்யவில்லை. குறிப்பாக கையில் வைத்திருக்கும் 'மெட்டல் டிடெக்டர்', 'டோர் மெட்டல் டிடெக்டர்' கருவிகள் பழுதடைந்து, பராமரிப்பு இல்லாததை பெயருக்காக போலீசார் சில இடங்களில் வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை
பிரதமரின் நிகழ்ச்சி முடிவடைந்ததும், மத்திய அரசின் பாதுகாப்பு ஏஜென்சி மாநில அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருந்தது. பிரதமரின் வருகையின்போது, அவருடைய பாதுகாப்பில் மாநில அரசு இவ்வளவு பெரிய குளறுபடியை செய்வதால், சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள்?. எனவே இதற்கு உடனடியாக மாநில அரசு பொறுப்பு ஏற்று, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உள்துறை தூங்குகிறது
கோவில்கள் உள்பட மாநிலத்தில் முக்கியமான இடங்களில் இருக்கின்ற 'மெட்டல் டிடெக்டர்' கருவிகள் சரியாக செயல்படுகிறதா? சுதந்திரமான தணிக்கை செய்வதற்கும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஒருபக்கம் கோவையில், மனிதவெடிகுண்டு தாக்குதல், கள்ளக்குறிச்சி கலவரம், 19 இடங்களுக்கும் மேல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மாநில உள்துறை தூங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

பாதுகாப்பு குளறுபடியில்லை
இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகையின்போது எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை என்று கூறினார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தரமான உபகரணங்கள்
தமிழகத்தில் காவல்துறைக்கு வழங்கும் உபகரணங்கள் தரமானதாக உள்ளதாக கூறினார். நவீன தொழில்நுட்பத்துடன் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவுக்கு தரமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மின்நுகர்வோர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை
மின்இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக வரும் தவறான குறுந்செய்தியை மக்கள் நம்ப வேண்டாம். ஆதார் எண்ணை இணைக்க 10 ரூபாய் கட்டுங்கள் என்று வரும் குறுந்செய்தியை நம்ப வேண்டாம். பொதுமக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்தாலோ, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணிலோ, தமிழ்நாடு காவல் உதவி செயலி மூலமோ புகார் தரலாம் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பாஸ்வேர்டை வங்கி கேட்காது
உங்களின் பாஸ்வேர்ட், ஒடிபி எண், வங்கி எண் குறித்த தகவல்களை வங்கிகள் ஒருபோதும் கேட்காது. அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.