“என்னை பற்றி என்னென்னமோ பொய்களை பரப்புகிறார்கள்.. செயல்களால் மட்டும் பதிலடி கொடுக்கிறேன்” - ஸ்டாலின்
சென்னை: "என்னைப் பற்றி என்னென்னமோ பொய்கள் பரப்பிப் பார்த்தார்கள். பரப்பி வருகிறார்கள். நான் எப்போதும் போல என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

"திராவிடர் கழகத்தினர் அனைவருக்கும் எனது சல்யூட். கலைஞர், பேராசிரியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் ஆசிரியர் கி.வீரமணி. திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கியது அல்ல திமுக. திராவிடர் கழகத்தின் நீட்சி தான் திமுக. 92 வயதிலும் இளைஞர் போல வீரமணி ஊர் ஊராக பரப்புரை செய்கிறார். அவதூறுகளுக்கு பதில் தருகிறார். உங்கள் பணி சுமையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
திமுக செல்ல வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னேன். உயிர் பிரியும் வரை மூத்திரச் சட்டியுடன் மக்களுக்காக போராடிய தந்தை பெரியாரின் உழைப்பு நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். பெரியாரின் சிந்தனை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் போற்றப்படுகிறது. பெரியார் உலகமயம் ஆக வேண்டும் என்று உழைத்த வீரமணிக்கு கிடைத்த பரிசு அது.
பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றியது திமுக. திருச்சியில் உருவாகும் பெரியார் உலகம் மிகச் சிறப்பாக உருவாக வேண்டும் என்று வீரமணி எவ்வாறு உழைக்கிறார் என்பது எனக்கு தெரியும். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பெரியார் உலகத்திற்கு திமுக பங்களிக்காமல் இருக்க முடியுமா? திருச்சியில் உருவாகும் பெரியார் உலகத்துக்கு எனது ஒரு மாத ஊதியத்தை கொடுக்க முடிவெடுத்தேன்.
இது தொடர்பாக டி.ஆர்.பாலு, துரை முருகன், ஆ.ராசா ஆகியோரிடம் சொன்னேன். உடனே அவர்கள் நீங்கள் அறிவியுங்கள் திமுகவின் 126 எம்.எல்.ஏக்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருக்கும் 31 எம்.பிக்கள் ஆகியோரின் ஒரு மாத சம்பளத்தை சேர்த்து கொடுப்போம் என்று சொன்னார்கள். எங்கள் எல்லோருடைய ஒரு மாத சம்பளம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய். அந்த பணத்தை பெரியார் உலகிற்கு கொடுப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.
அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகும் ஆணைகள் வழங்கி இருக்கிறோம். பெண்களையும் அர்ச்சகர்கள் ஆக்கியிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் நாம் மாற்றத்திற்கான விதைகளை விதைத்திருக்கிறோம். திராவிட மாடல் என்று சொல்வது சிலருக்கு எரிச்சலை தருகிறது. அதனால் தான் தொடர்ந்து அவர்களுக்கு எரியட்டும் என்று திராவிட மாடல் என்று சொல்கிறோம். அடுத்து திராவிட மாடல் 2.0 என்று சொல்ல போகிறோம். வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னை காத்துக் கொள்ளக்கூடிய சமுதாயத் தேர்தல்.
என்னைப் பற்றி பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதைப்பற்றி கவலையின்றி நான் எப்போதும் எனது செயல்களால் மட்டுமே பதிலடி கொடுக்கிறேன். நம் இனத்திலிருந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை. தமிழும் பிடிக்காது, தமிழர்களும் பிடிக்காது, நாம் தலைநிமிர்வதும் சிலருக்கு பிடிக்காது.
இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்துவதுதான் திராவிட மாடல். தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். அடுத்த தேர்தல் தமிழர்களை தற்காக்கும் தேர்தல். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதியேற்போம்." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications