சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது நம்ம போலீஸ்...பட்டி தொட்டி எங்கும் மக்கள் பாராட்டுகின்றனர் - முதல்வர் ஸ்டாலின்

‘இது நம்ம போலீஸ்’ என்ற உணர்வை, பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் உருவாக்கியுள்ளோம். ‘காவல்துறை நமது நண்பன்’ என்ற உணர்வை ஒவ்வொருவரிடமும் ஊட்டியிருக்கிறோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொடிய குற்றம் செய்தவர்கள், எளிதாக, பிணையில் வெளிவர இயலாத வகையில் பல்வேறு சட்டப்பிரிவுகளில் கைது செய்ய வேண்டும். குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் அவர்களை வைக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    CM Stalin Assembly Speech| காவல்துறையை கை நீட்டி குற்றம் சொல்லக்கூடாது

    'இது நம்ம போலீஸ்' என்ற உணர்வை, பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் உருவாக்கியுள்ளோம். 'காவல்துறை நமது நண்பன்' என்ற உணர்வை ஒவ்வொருவரிடமும் ஊட்டியிருக்கிறோம். மக்களுக்கும், காவல் துறைக்கும் நல்ல நட்பு இருப்பதால், குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன. அதனை மீறிக் குற்றங்கள் நடந்தாலும், அதற்குக் காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட பிறகு, அதைச் சமாளிப்பதைவிட முன்பே அப்படியொரு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே காவல் துறையினுடைய சிறந்த பணி என நம்புபவன் நான்.

    அதனால்தான் குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை என்று அறிவித்து, அதைச் செயல்படுத்தி இருக்கிறோம். தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மூலமாகத்தான் குற்றங்களைத் தடுக்க முடியும். அந்த வகையில், 761 ஆய்வுக் கூட்டங்களை எஸ்.பி.-க்கள் மாவட்ட அளவில் நடத்தி, இதுகுறித்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். சரக அளவிலே 470 கூட்டங்கள் நடத்தி டி.ஐ.ஜி.-க்கள் இதுகுறித்த ஆலோசனைகளை அளித்துள்ளார்கள். மாநகரங்களில் 60 கூட்டங்களைக் காவல் துறை ஆணையர்களும், மண்டல அளவில் 134 ஆய்வுக் கூட்டங்களை ஐ.ஜி.-க்களும், மாநில அளவில் டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளும் இதுபோன்ற ஆய்வு கூட்டங்களை நடத்தி, "குற்றத் தடுப்பு" முன்னுரிமை குறித்து அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.

    This is our police People everywhere in the menu tank appreciate - CM Stalin

    இத்துறையின் அமைச்சர் என்ற முறையில்நான் காவல் துறை உயரதிகாரிகளைக் கடந்த 6-5-2022 அன்று அழைத்து பேசி ஆலோசனை வழங்கியிருக்கிறேன். மார்ச் 10 முதல் 12 வரை என் தலைமையிலே நடைபெற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதுகுறித்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் திறந்த மனதோடு அதிகாரிகள் பங்கெடுத்துப் பல்வேறு கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதனை மனதில் வைத்துப் பல்வேறு திட்டங்களை அரசும் தீட்டி உள்ளது. "குற்றங்களைத் தடுப்போம் - தவிர்ப்போம்!" என்பதே இந்த அரசின் முழக்கமாக அமைந்திருக்கிறது.

    தொழிற்சாலைப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கத் தனி போலீஸ் படை உருவாக்கப்பட்டது. 3 ஆயிரத்து 632 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, அவர்கள் "முழுக் காலத்திற்கு" முன்பே வெளியில் செல்வது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 483 பேர் முழுக் காலமும் அனுபவிக்காமல், மிக விரைவிலேயே வெளியே வந்த அவல நிலை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. ஆனால், அந்த நிலை மாற்றப்பட்டு அப்படி வெளிவரும் எண்ணிக்கையையும் இந்த அரசு குறைத்திருக்கிறது. குற்றத் தடுப்பிற்கு இது ஒரு வகை.

    இப்படி அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலமாக இந்த "Preventive Policing" முன்னுரிமையால், இந்த அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக் காலத்தில் திருட்டு வழக்குகளில், 53 விழுக்காடு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 144 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 43 விழுக்காடு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி) உளவுத் துறை, மாவட்டத் தனிப் பிரிவு, மாநகர நுண்ணறிவுப் பிரிவு, உள்ளூர் காவல் துறையினர் அளித்த முன்னெச்சரிக்கை தகவலின் அடிப்படையில், கடந்த ஓராண்டில் 268 கொலைகள் நடைபெறாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

    இதுவரை நடைபெற்ற 185-க்கும் மேற்பட்ட முக்கிய விழாக்களில் பங்கேற்ற 1 கோடியே 8 இலட்சம் பேரின் பாதுகாப்பினை இந்த அரசு உறுதிசெய்து, அவர்கள் திருவிழாக்களைக் கண்டு களித்துவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப வித்திடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சில முக்கிய நிகழ்வுகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் நினைவு தினம், விநாயகர் சதுர்த்தி விழா, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், ரம்ஜான் போன்ற நிகழ்வுகளின்போது இந்த ஆட்சி மிகச் சிறப்பாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, சமூக நல்லிணக்கத்தை, சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டியிருக்கிறது.

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் போன்றவற்றை அமைதியாக நடத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய பாராட்டைப் பெற்றிருக்கிறது. இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் உள்ளிட்ட 12 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வேதனைக்குரிய நிகழ்வு நடைபெற்றது. அந்தத் துயரமான நிகழ்வில் நான் உட்பட தமிழகம் முன்னணியில் நின்று களப்பணியாற்றியதை நம் நாடே போற்றியது. நம் இராணுவ அதிகாரிகளே பாராட்டியிருக்கிறார்கள்.

    திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தொழிற்சாலை தொடர்பாக ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு அமைதி வழியில் ஆக்கப்பூர்வமான தீர்வு கண்டதை அண்டை மாநிலங்களில் தொழிற்சாலை வைத்திருப்போர்கூட பாராட்டினார்கள். இப்படி பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் தமிழ்நாடு காவல் துறை இந்த அரசின்கீழ், எனது தலைமையின்கீழ் மிகவும் திறமையாகச் செயல்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் இந்த அவையிலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். கொடுங்குற்றங்கள் தொடர்பாகவும் கூலிப்படைகள் விஷயத்திலும் ஈவு இரக்கமின்றி இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரை நடைபெற்ற கொலைகள் 1,695. கடந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்துள்ள கொலைகள் 1,558. கொள்ளை (Dacoity) அ.தி.மு.க. ஆட்சியில் 146. தற்போது அது 103 ஆகக் குறைந்துள்ளது. கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அ.தி.மு.க. ஆட்சியில் மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரை 30 கூலிப்படைக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த ஆட்சியில் அது 18-ஆகக் குறைக்கப்பட்டு கூலிப்படைகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் 16 போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம். ஆனால், தி.மு.க. ஆட்சியில் அந்த நிலை ஏற்படவில்லை. (மேசையைத் தட்டும் ஒலி) எங்கும் எந்தச் சூழலிலும் துப்பாக்கிச்சூடு என்பது ஏற்படவே இல்லை. காவல் நிலையங்களில் ஏற்படக்கூடிய மரணங்களைப் பொறுத்தவரையில் சில விளக்கங்களை திறந்த மனதோடு இந்த அவையில் நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

    என்னிடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, 2017 ஆம் ஆண்டு எட்டு பேரும், 2018 ஆம் ஆண்டு 12 பேரும், 2019 ஆம் ஆண்டு 11 பேரும், 2020 ஆம் ஆண்டு ஆறு பேரும், 2021 ஆம் ஆண்டு ஐந்து பேரும், 2022 ஆம் ஆண்டு இதுவரை நான்கு பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த மரணங்கள் எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்தக் கூடாது, நியாயப்படுத்தவும் முடியாது. காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்களில் விழிப்புடன் இருக்குமாறும், விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படக்கூடிய நபர்களைத் தேவையின்றி மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும்,

    வழக்குகளில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் எதிரிகளைக் காவல் நிலையத்திற்குக் கொண்டுவந்து விசாரிக்கும்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களைக் கையாளும்போது தனிப்பட்ட வெறுப்புணர்ச்சியைக் காட்டக் கூடாது. பெரும்பாலான குற்றங்கள் சந்தர்ப்ப சூழலால் செய்யப்படுவதாக இருக்கிற காரணத்தால், குற்றவாளிகளைத் திருத்தும் முயற்சியைக் காவல்துறையினர் செய்ய வேண்டும்.

    அதே நேரத்தில் கொடிய குற்றம் செய்தவர்கள், எளிதாக, பிணையில் வெளிவர இயலாத வகையில் பல்வேறு சட்டப்பிரிவுகளில் கைது செய்ய வேண்டும். குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் அவர்களை வைக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். வழக்குகளில் தேவையற்ற காலதாமதம் கூடாது. குறிப்பிட்ட காலத்திற்குள் புலன்விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம். இத்துடன், காவல் துறையினருக்கு உணர்திறன் பயிற்சி (Sensitization Training) மூலம் காவல் நிலையத்தில் குற்றவாளிகளைக் கையாளுவது குறித்தும்,

    அவர்களிடம் அறிவியல் அடிப்படையில் புலன்விசாரணை மேற்கொள்வது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு, அவ்வப்போது இப்பயிற்சிகளைக் காவல் துறையினருக்கு அளிக்க திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. (மேசையைத் தட்டும் ஒலி) ஒருவரைக் கைது செய்வது குறித்தும், அவரை விசாரணை செய்வது குறித்தும் காவல் துறையினருக்கு அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தபோதிலும், காலமாற்றத்திற்கு ஏற்றவாறு இத்திறன்களை மேம்படுத்தக்கூடிய வகையில், போலீஸ் கான்ஸ்டபில்களுக்கும், அதிகாரிகளுக்கும் காவல் உயர் பயிற்சியகங்களிலும், காவல் பயிற்சிப் பள்ளிகளிலும் கூடுதலாக உரிய விழிப்புணர்வும்,

    போதிய பணியிடைப் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. இப்போது நிகழ்ந்துள்ள லாக்-அப் மரணங்களில் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மன்ற உறுப்பினர்கள் நன்றாக அறிவீர்கள். இந்த அரசு எப்போதும் எதையும் மறைக்க முயலுவதில்லை. எங்களைப் பொறுத்தவரையில் லாக்-அப் குற்றங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில், குற்றங்கள் குறைந்துள்ளன என்பதற்கு இன்னொரு முக்கிய ஆதாரமாக ஒன்றைச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12 இலட்சத்து 74 ஆயிரத்து 36 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8 இலட்சத்து 66 ஆயிரத்து 653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன என்றால், (மேசையைத் தட்டும் ஒலி) இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கிறது அல்லது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். மாநிலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இக்குற்றங்களில் ஈடுபடுவோர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின்கீழும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வழக்குகளை விரைந்து நடத்தி முடித்து, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வாண்டு (2022) மார்ச் மாதம் வரை 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 3,441 வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் மானபங்கம் தொடர்பாக 1,053 வழக்குகளும், பெண் கடத்தல் தொடர்பாக 547 வழக்குகளும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக 416 வழக்குகளும், போக்சோ பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3,350 வழக்குகளும் தாக்கலாகியிருக்கின்றன. பெண்களுக்கெதிரான குற்றங்கள், குறிப்பாக வரதட்சணை சம்பந்தமான கொலைகள், பாலியல் கொடுமைகள், மானபங்க வழக்குகள் போன்றவை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் முன்வந்து புகார்களை அளித்து வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சி பெண்களுக்கெதிரான குற்றங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள் அச்சமின்றிப் புகார்களை அளித்து வருகிறார்கள். கிராமங்களில் விழிப்புணர்வு கமிட்டிகள்மூலம் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் முன்கூட்டியே தகவல் அறிந்து தடுக்கப்படுகிறது. போக்சோ சட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த ஒவ்வொரு வகுப்பறையிலும் 1098 என்ற சிறார் உதவி எண் ஒட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான குற்றத் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒலி, ஒளி கட்டமைப்போடு கூடிய இரண்டு பல்நோக்குப் பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு உதவிட போக்சோ சட்டத்தின்கீழ் நிதியும் உருவாக்கப்பட்டது. இதன் தாக்கம், குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளதில் எதிரொலிக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களைப் பொறுத்தமட்டில், போக்சோ சட்டத்தின்கீழ் 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    பதிவு செய்வது முக்கியமல்ல; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுதான் மிக முக்கியம். அந்த வகையில் பார்த்தால், பதிவி செய்யப்பட்ட வழக்குகளில், அதிகமான எண்ணிக்கையில், அதாவது, 3,441 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இன்றைக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிட்டது. பாலியல் குற்றங்களில் எடுக்கப்படும் விரைவான நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில் பெண் மருத்துவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவரம் வேறு ஒரு வழக்கு விசாரணையின்போது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து பீகாரில் உள்ள அந்தப் பெண்ணிடம் 22-3-2022 அன்று வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் மின்னஞ்சல் வாயிலாக புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றையதினமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட அவர்கள் 15-4-2022 அன்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள். குற்றவாளிகள் மீது 23-4-2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 4-5-2022 அன்று வழக்கு விசாரணையே துவங்கிவிட்டது. பாலியல் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 32 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை சாதனை படைத்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான மாவா, குட்கா, ஹன்ஸ் போன்ற பொருட்களைப் பதுக்கி வைத்து விநியோகம் செய்பவர்கள், கடைகளில் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோரைக் கண்காணித்து திடீர் சோதனைகளை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தொடர்புடையோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு காலங்காலமாக இருந்து வருகின்றபோதிலும், கடந்த சில ஆண்டுகளில் இவற்றைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதை அறிந்த இந்த அரசு, சட்டத்திற்குப் புறம்பாகக் குற்றங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்டவை கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஓராண்டு காலத்தில் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    கஞ்சா பயிரைப் பயிரிடுவது குறித்து, குறிப்பாக அண்டை மாநிலங்களில் இது அதிகளவு பயிரிடப்படுவதாகவும், தமிழ்நாட்டில் சில மலைப்பிரதேசங்களில் பயிரிடப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அம்மாநிலக் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அப்பயிர்களை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்குற்றத்தில் ஈடுபடுவோர்மீது தடுப்புக்காவல் சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அக்குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா பயிரிடுதல், கடத்துதல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவதைத் தவிர்க்கக்கூடிய வகையில், அவர்களுக்கு மாற்றுத் தொழிலில் ஈடுபட உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால், சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் எதிர்கால சந்ததியினருக்கு நேரக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, இக்குற்றங்களில் ஈடுபடுவோர், அவர்களது கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த 2021 ஆம் ஆண்டு மே முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக, 7,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,837 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுள் 648 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து, ரூபாய் 31 கோடியே 76 இலட்சத்து 89 ஆயிரத்து 140 மதிப்புள்ள 43 ஆயிரத்து 228 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோன்று, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக, 35 ஆயிரத்து 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 ஆயிரத்து 293 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுள் 720 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து, 66 கோடியே 67 இலட்சத்து 56 ஆயிரத்து 249 ரூபாய் மதிப்புள்ள 3 லட்சத்து 84 ஆயிரத்து 972 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மாநிலத்தில் முக்கிய நகரங்களில், குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கக்கூடிய கடைகளில் சரக காவல்துறையினர் அடிக்கடி சோதனைகள் மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.

    இத்துறைக்குப் பொறுப்பேற்றதும் கூறிய முதல் அறிவுரை - "பள்ளி, கல்லூரி வளாகங்களில் குட்கா, கஞ்சா விற்பனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறேன். தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு குட்கா, கஞ்சா என்ற நிலையை அறவே ஒழிக்க வேண்டும்!" என்பதுதான். அதன் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்வோரின் - சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நான் உத்தரவிட்டேன். குறிப்பிட்ட சில வழக்குகளை உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தேனி மாவட்டம் ஓடைப்பட்டிகாவல் நிலைய எல்லையில் கஞ்சா விற்ற பூபாலன் உள்ளிட்ட 8 பேரினுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லையில் கஞ்சா விற்ற ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரின் நிலத்துடன் கூடிய 4 வீடுகள், 2 இரு சக்கர வாகனங்கள், 29 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லை கஞ்சா வழக்கில் நவீன் குமார் உள்ளிட்ட 5 பேரின் நிலத்துடன் கூடிய 6 வீடுகள், 60 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. "ஒழிப்பு" ஒருபுறம், "விழிப்புணர்வு இன்னொரு புறம்" என்று குட்கா, கஞ்சா பற்றிய நடவடிக்கையை இந்த அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க 256 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

    உயர்கல்வித் துறையில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் "போதைத் தடுப்பு கிளப்" (Anti-Drug Clubs) அமைக்க ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, கல்வி நிறுவனங்கள் இருக்கக்கூடிய 200 மீட்டர் தொலைவிற்குள் போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கு 3 வருடம் முதல் 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும், ஒரு இலட்சம் முதல் 2 இலட்சம் வரை அபராதம் விதிக்கவும்,போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடைச் சட்டம், 1985-ல் உரிய திருத்தங்கள் செய்யத் தேவையான கருத்துருக்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்மீது ஒப்புதல் பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும் என்ற உறுதியை இந்த அவைக்குத் தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    English summary
    The perpetrators of heinous crimes should be easily arrested under various sections of the law so that they cannot be released on bail. They should be kept in remand custody under the Prevention of Thugs Act. Chief Minister MK Stalin has said that those arrested should be produced in court in a timely manner as per the court guidelines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X