‛துணிவு‛ ரிலீஸ்: பலியான அஜித் ரசிகரின் உருகவைக்கும் பின்னணி.. ரசிகர்களுக்கு குடும்பத்தினர் அட்வைஸ்!
சென்னை: எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 'துணிவு' திரைப்படம் இன்று வெளியானது. சென்னையில் இந்த படத்தை பார்க்க வந்த 19 வயது அஜித் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்தபோது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் தான் அவரது குடும்பத்தினர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ள நிலையில் குடும்பத்தினர் கதறி அழுது சோகமான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்தது.
அதிகாலை 1 மணிக்கு தமிழகம் முழுவதும் துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதலே தியேட்டர்கள் முன்பு திரண்டு பட்டாசு வெடித்தும், நடனமாடியும் துணிவு படத்தை வரவேற்று கொண்டாடினர்.

அஜித் ரசிகர் கொண்டாட்டம்
அதேபால் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோகிணி தியேட்டர் உள்ளது. இங்கும் துணிவு திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் நேற்று இரவே குவிந்தனர். மேலும் அஜித், விஜய் ரசிகர்கள் மத்தியில் சிறு தகராறு ஏற்பட்ட நிலையில் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க லாரி மீது ரசிகர்கள் நடனம் ஆடினர். அப்போது சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (வயது 19) என்பவர் லாரியில் இருந்து கீழே குதித்தார்.

சிகிச்சை பலனின்றி பலி
இந்த வேளையில் அவர் கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்தார். இதனால் அவர் எழுந்திருக்க முடியாமல் அப்படியே வலியில் அலறி துடித்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரத்குமார் இறந்தார். இதுபற்றி கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பரத் குமார் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

குடும்ப பின்னணி?
பரத் குமார் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்தார். இவரது தந்தை பெயர் ஜானகி ராமன். தாய் பெயர் லலிதா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்த நிலையில் மூத்தவர் தான் பரத் குமார். தாய் லலிதா வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். மேலும் பரத் குமாரும் இரவில் உணவு டெலிவரி செய்து குடும்பத்துக்கு உதவி செய்து வந்த நிலையில் சமீபத்தில் படிப்பை கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் இறந்துள்ளார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
மேலும் துணிவு படத்துக்கான டிக்கெட்டை அவர் அதிக விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பரத் குமாரின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்த துயரத்திலும் கூட அவர்கள் நடிகர்களின் ரசிகர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛ நடிகர்களுக்காக இனியும் யாரும் உயிரை விடவேண்டாம். நடிகர்கள் யாரும் வரமாட்டார்கள். பெற்றோர்கள் தான் ஹீரோக்கள். மற்றவர்களுக்காக உயிரை இழக்காதீர்கள். படங்கள் பாருங்கள். ஆனால் அப்பா அம்மாவை விட பெரிய ஹீரோ யாரும் கிடையாது. ஹீரோக்களும் இதுபற்றி ரசிகர்களிடம் தெரிவிக்க வேண்டும்'' என கதறி அழுதபடி கூறினர்.












Click it and Unblock the Notifications