ரேஷன் நிவாரண பொருட்களுக்கான பையிலும் முதல்வரின் படம், பெயர் இல்லை.. மக்களை கவரும் மு.க. ஸ்டாலின்!
சென்னை: தமிழக அரசு சார்பாக 13 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தகவல் வரும் நிலையில், இந்த பொருட்கள் வழங்கப்பட உள்ள பையில் முதல்வர் ஸ்டாலின் படமும் இல்லை, பெயரும் இல்லை.
Recommended Video
தமிழகத்தில் அறுதி பெரும்பான்மை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது தி.மு.க. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நல்ல அணுகுமுறை
தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் பல நல்ல அணுகுமுறைகளை கடைபிடித்து வருகிறது. பொதுவாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய அரசின் திட்டங்களை, முந்தைய அரசு திட்டங்களுக்கு வைத்த பெயர்களை மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா உணவகத்தின் பெயர் இதுவரை மாற்றாமல் அந்த பெயரிலேயே தொடர அனுமதித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தி.மு.க.வினர் நீக்கம்
சென்னையில் திமுகவினர் சிலர் அம்மா உணவகத்தை சூறையாடி அங்கிருந்த அம்மா உணவகம் பேனரை கிழித்த விஷயம் ஸ்டாலினுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பேனரை அங்கு உடனடியாக வைக்கச் செய்த ஸ்டாலின், திமுகவினர் 2 பேரையும் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கினார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ரசிக்க தொடங்கிய மக்கள்
அடுத்ததாக சட்டமன்ற கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைக்கச் செய்தது. சட்டமன்றத்தில் தனது படத்தையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தையும் அகற்ற செய்தது என்று ஸ்டாலின் செய்து வரும் செயல்களை மக்கள் ரசிக்க தொடங்கி விட்டனர். தொடர்ந்து சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

அ.தி.மு.க.வினரும் பாராட்டு
புதிதாக தேர்ந்தெடுக்கப்ட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பதவியேற்றபோது, ''ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பது நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. மக்களின் துயர் துடைக்க இருவரும் இணைந்து நிற்க வேண்டும். கருத்துக்களை, கருத்துக்களால் எதிர்கொள்வோம் . ஆளுங்கட்சி என்ற ஒரு ஆணவம், கோபம் எங்களுக்கு துளியும் இருக்காது'' என்று ஸ்டாலின் பேசிய பேச்சு தி.மு.க.வினர் மட்டுமில்லாது அ.தி.மு.க.வினரின் பாராட்டுகளையும் அள்ளியது.

முதல்வர் படம், பெயர் இல்லை
இது தவிர தற்போது தி.மு.க ஆட்சியில் புதிதாக தொடங்கப்படும் திட்டங்களில் கடைபிடிக்கப்படும் நடைமுறை மக்களை ''இதுதான்யா மக்களுக்கான ஆட்சி'' என்று பேச வைத்துள்ளது. உதாரணமாக பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்று தொடங்கிய திட்டத்தை கூறலாம். இந்த திட்டம் எந்தவித ஆடம்பரமும் இன்றி மிக எளிமையாக தொடங்கப்பட்டது. இது தவிர அரசு நகர பேருந்துகளின் முகப்பு கண்ணாடியில் 'பெண்களுக்கு இலவச பயணம்' என்று ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் முதல்வர் படம், பெயர் ஏதும் இல்லை. திமுக அரசு என்ற பெயரும் இல்லை. 'தமிழ்நாடு அரசு' என்ற பெயர் மட்டுமே உள்ளது.

ரேஷன் கடைகளில்
இது தொடர்பாக அரசிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அந்த 13 மளிகை பொருட்கள் வைக்கப்படும் பைகள் தொடர்பான படங்கள் வெளியிடப்படுள்ளன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த பையின் வெளிப்புறத்தின் ஒரு பக்கத்தில் தமிழ்நாடு அரசு என்ற பெயருடன், அரசின் சின்னத்துடன், அரிசி குடும்ப அட்டைதரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண பொருட்கள் என்றும் '' நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம். தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம்'' - தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மக்கள் மனதில் இடம்பிடித்த ஸ்டாலின்
அந்த பையின் மறு பக்கத்தில் 13 வகையான மளிகை பொருள்களின் விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரண பையில் தமிழக முதல்வரின் படமும், பெயரும் இடம் பெறவில்லை. இந்த பையின் படம் சமூக வலைத்தங்களில் பகிரப்பட்டு வருகிறது. ''இந்த நடைமுறைதான் ஆட்சிக்கான சிறந்த இலக்கணம்'' என்று நெட்டிசன்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். பதவியேற்ற சில நாட்களிலேயே தனது அருமையான அணுகுமுறையின் மூலம் மக்களின் மனதில் முதல்வர் ஸ்டாலின் இடம்பிடித்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. இதேபோல் விடாமல் துரத்தும் கொடிய கொரோனாவில் இருந்து தமிழக மக்களை ஸ்டாலின் விரைவில் மீட்பார் என்ற நம்பிக்கையும் அதிகமாக துளிர் விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications