உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு.. போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
டேராடூன்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக திரும்பி வரமுடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது தமிழக அரசு. தற்போது 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக, மீட்கப்பட்டவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த வழியாக திரும்பி வர இருந்த தமிழர்கள், நிலச்சரிவு காரணமாக கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருந்து வருவதால் அவர்கள் தொடர்ந்து வருவது பாதுகாப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டதால் திரும்பி வர முடியாமல் அப்பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் அவர்கள் தங்கியுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் உத்தரகாண்டில் சிக்கிய தகவல் அவர்களின் உறவினர்கள் மூலமாக கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசிய தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உடனடியாக தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மேலும், உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தமிழர்கள் அனைவரும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழக அரசு இமாச்சல பிரதேச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி இமாச்சல அதிகாரிகள் உடனடியாக ஈடுபட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அந்த மாநில அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு நிகழ்ந்த பித்தோர்கர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தமிழர்களை மீட்பது குறித்து பேசியுள்ளார்.
சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்ற 30 பேரும் பாதுகாப்பாக அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று வானிலையைப் பொருத்து அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 30 தமிழர்களையும் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
தற்போது வரை, சிதம்பரத்தைச் சேர்ந்த பராசக்தி (70), பார்வதி (70), மலர் (54), கோமதி (66), அலமேலு கிருஷ்ணன் (73) உட்பட 15 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தட்சுல்லா என்ற இடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும், எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்படும் தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
— M.K.Stalin (@mkstalin) September 15, 2024
அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப… pic.twitter.com/TEHjsiRvYT
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர். 30 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டது மீட்புக் குழு. மீட்கப்பட்ட 30 பேரும் தட்சுல்லா என்ற இடத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை இரவு சென்னை திரும்ப உள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications