2 வாரம் கொடுங்க.. டைம் கேட்ட விஜய்.. கடிதத்திலேயே தவறு.. திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்லேகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பைக் கண்டுள்ளது. 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் சில ஊடகங்களிடம் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஆளுநரின் நிபந்தனை: வெறும் வாக்கு சதவீதம் மட்டும் போதாது

சென்னை ராஜ் பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் கூறுகையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்னைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், இதுவரை அவருக்கு நான் அனுமதி வழங்கவில்லை. அவர்களின் ஆரம்பகட்டத் கடித்ததில், தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு சதவீத விவரங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போதைய சூழலில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் துல்லியமான எண்ணிக்கையை சமர்ப்பிக்குமாறு நான் கேட்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.

TN Election 2026 Governor Seeks Proof of MLA Support from Vijay s TVK to Form Govt

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய் தரப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ள இந்த "எண்ணிக்கை விவரம்" அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

விஜய்யின் உரிமை கோரல்: 108 இடங்களுடன் ராஜ் பவனுக்கு கடிதம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் 118 என்ற பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. எனினும், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், மிக வலுவான நிலையில் உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு விஜய் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் எங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசம் தேவை," என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), கோட்டையை எட்டிப்பிடிக்க இன்னும் 11 படிகள் (விஜய் 1 தொகுதியை ராஜினாமா செய்வார்) ஏற வேண்டிய கட்டாயத்தில் தவிக்கிறது. இது விஜய்க்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல் நிலைத்தன்மைக்கும் விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சவால்.

அரசியல் சதுரங்கத்தில் 'கிங்' யார்?

தவெக 108, திமுக 73, அதிமுக 53 எனப் பிரிந்து கிடக்கும் இந்தத் தீர்ப்பு, வாக்காளர்கள் யாருக்கும் முழுமையான அதிகாரத்தைக் கொடுக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 118 என்ற மந்திர எண்ணைத் தொட முடியாமல் விஜய் தவிப்பதும், தலா 5 மற்றும் 4 இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸ் மற்றும் பாமக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகள் 'கிங் மேக்கராக' உருவெடுத்திருப்பதும் தற்போதைய கள யதார்த்தம்.

சிறுபான்மை அரசாங்கம் சாத்தியமா? - அரசியல் நிபுணர்கள் பார்வை

தற்போதைய சூழல் குறித்து அரசியல் ஆய்வாளர் சுமந்த் ராமன் தனது 'X' தளத்தில் பதிவிடுகையில், "விஜய் உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைத்து, பின்னர் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லலாம். தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் அவரைப் பதவியிலிருந்து இறக்கத் துணியுமா என்பது சந்தேகமே. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தாலோ அல்லது வாக்களிக்காமல் தவிர்த்தாலோ, விஜய் ஒரு சிறுபான்மை அரசைத் தடையின்றி நடத்த முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் வாழ்த்தும் காங்கிரஸின் ஒப்புதலும்

மறுபுறம், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யைத் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். "இந்த வெற்றி இளைஞர்களின் குரலைப் பிரதிபலிக்கிறது" என்று அவர் பாராட்டியுள்ளார். அதேசமயம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர், தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று ஒப்புக்கொண்டுள்ளார். "எங்கள் முதலமைச்சர் வேட்பாளரே தோற்றது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் விஜய்யின் பின்னால் அணிவகுத்துள்ளனர் என்பது இந்த முடிவுகளில் தெளிவாகத் தெரிகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தது என்ன?

ஆளுநர் தற்போது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், மிகப்பெரிய கட்சிக்கு வாய்ப்பு தருவதா அல்லது கூட்டணிக் கணக்குகளைக் கவனிப்பதா என்பதில் ஆளுநரின் முடிவு மிக முக்கியமானதாக இருக்கும். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் விஜய்யின் தலைமையில் அமையுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+