மின்வாரிய புகார்கள் தீர்க்கப்படுகிறதா?.. லிஸ்ட் போட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.. அதிமுகவுக்கு பதிலடி
சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சென்னை வடக்கு, தெற்கு மண்டலங்களிலுள்ள உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். இதில் மின்சாரத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவு அலுவலகங்கள் முதல் மண்டல அலுவலகங்கள் வரை தினசிரி வரும் புகார்கள், அவற்றில் சரிசெய்யப்பட்ட புகார்களின் நிலை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

98% புகார்களுக்கு தீர்வு
நிலுவையில் உள்ள புகார்களை உடனடியாக சரிசெய்து மேலும் புகார்கள் ஏற்படாதவண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலினால் 20.06.21 அன்று மின்னக நுகர்வோர் சேவை மையம் துவங்கப்பட்டது. சுமார் 3.16 கோடி மின் பயனீட்டாளர்கள் புகார் தெரிவிக்க மின்னகம் மின் நுகர்வோர் சேவை மூலம் 98% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.

புகார்கள் குறைகின்றன
சென்னையிலுள்ள 2 மண்டலங்களில் 75% புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன, மற்ற மண்டலங்களில் 20% புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. சென்னையில் புகார்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 6-ம் மாதத்தில் 28 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. 7-ம் மாதத்தில் 97 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. 8-ம் மாதத்தில் 70 ஆயிரம் வந்துள்ளன. 9-ம் மாதத்தில் 60 ஆயிரம் வந்துள்ளன. மின்வாரிய நடவடிக்கைகள் காரணமாக புகார்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது பருவமழைக்காலம் துவங்கவுள்ளது சென்னையில் 1,400 தரைமட்ட மின் பாக்ஸ் ஒரு மாத காலத்தில் தரம் உயர்த்தப்பட உள்ளது..

24 மணி நேரமும் பணி
சென்னையில் 800-க்கும் மேற்ப்பட்ட மின் மாற்றிகள், 332 புதிய மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மின் கம்பம் 250 கி.மீ மின் வயர் தயாராக உள்ளது. மின் கட்டணம் தொடர்பாக புகார்கள் குறைவாக தான் உள்ளது.. பராமரிப்பு பணிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும் போது புகார் தெரிவிக்கிறார்கள், அலுவலர்கள் மீது வரும் புகார்களை விஜிலென்ஸ் விசாரிக்கிறது..
தொழிற்சங்கம் சார்ந்த ஊழியர்கள் பணிக்கு முறையாக வரவில்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தவேண்டாம்.. அனைத்து தொழிற்சங்கங்களும் சிறப்பாக தங்கள் பணிகளை செய்கிறார்கள்.. மின்சார துறை 24 மணி நேரமும் பணி செய்யும் துறையாகும்.

வாட்ஸ்-அப் குழு
10 நாட்கள் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டன, தகவல் தெரிவிக்கும் 44 அலுவலகங்களின் பத்திரிக்கையாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கியுள்ளோம் , இதில் வரும் புகார்களை சரிசெய்கிறோம். இதில் ஈரோடு அலுவலகம் சிறப்பாக செயல்படுகிறார்கள் .
உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்களை உள்ளிட்ட அலுவலர்களை உள்ளடக்கிய வாட்ஸ்-அப் குழுக்களும் ஆரம்பிக்க உள்ளோம் இதுவும் புகார்களை தீர்க்க உதவும்.

அ.தி.மு.க மீது குற்றச்சாட்டு
4-5 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. இப்போதைய நிலைமையில். 58% விழுக்காடு இருந்த அனல் மின் நிலைய உற்பத்தி 70% ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் நிலக்கரி மாயமானது குறித்த முழுமையான அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடந்த ஆட்சியிலிருந்த நிலுவைத்தொகைகள் தற்பொழுது வரப்பட்டதன் அடிப்படையில் தான் பணிகளை துறையில் மேற்கொள்கிறோம் என்ற குற்றச்சாட்டுகளை எதன் அடிப்படையில் கூறுகிறார்கள். அ.தி.மு.க.வினர் வாக்குகளை பெற இவ்வாறு கூறுகிறார்கள். அ.தி.மு..க.வினர் மக்களால் புறக்கணிப்பட்டவர்கள். தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் 5 மாதத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications