சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குவிந்த மக்கள்.. மாஸ்க் அணியாமல் திரண்டதால் அச்சம்
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் முழு ஊரடங்கு இல்லை என அறிவித்தவுடன் மெரினா, காசிமேடு கடற்கரைகளில் பொது மக்கள் மாஸ்க் அணியாமல் குவிந்துவிட்டனர். ஆனால் கடற்கரைகளுக்கு செல்ல நாளை வரை தடை இருந்து வரும் நிலையில் தடையை மீறி மக்கள் குவிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் முதல் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலானது. இரவு நேர ஊரடங்கு இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என வமிகர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதனிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால் அது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் 30 ஆயிரத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக குறைந்து காணப்பட்டது. இதனால் மற்ற மாநிலங்களை போல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று முழு ஊரடங்கை ரத்து செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

முழு ஊரடங்கு இல்லை
அதே போல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதால் இன்று முழு ஊரடங்கு கிடையாது. அதே போல் வழக்கம் போல் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரைகளில் மக்களுக்கு தடை
ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தினருடன் மெரினா, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் செல்வது வழக்கம். அது போல் காணும் பொங்கலின் போது நீர் நிலைகளில் மக்கள் கூடி பொழுதை கழிப்பது வழக்கம். ஆனால் கொரோனா கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலானது. அது போல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

கடற்கரைகளில் மக்கள்
இந்த நிலையில் இன்றைய தினம் முழு ஊரடங்கு ரத்தாகியுள்ளதால் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் குவிந்துள்ளனர். பலர் மாஸ்க் அணியாமல் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளதால் கொரோனா மேலும் பரவும் அபாயம் உள்ளது. ஏழை எளிய மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதை உணராமல் இப்படி சமூக இடைவெளியைக் கூட காற்றில் பறக்க விட்டுவிட்டு குவிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் காசிமேட்டிலும் மீன் வாங்குவதற்காக அதிகாலையிலேயே கூட்டம் அலைமோதியது.

தடை நீக்கம்
கடற்கரைகளுக்கு செல்ல நாளை ஜனவரி 31 ஆம் தேதி வரை தடை இருந்து வரும் நிலையில் தடையை மீறி மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் கூட்டம் கூடியது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னை கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications