வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இடி மின்னலுடன் ஜில் மழைக்கு வாய்ப்பு : வானிலை அறிவிப்பு
மன்னர் வளைகுடா மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பிப்ரவரி இறுதியில் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெப்பத்தின் வேகத்தை தாங்க முடியாமல் குளுகுளு பிரதேசங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். உதகை, கொடைக்கானல் என மலைப்பிரதேசங்களிலும் வறட்சி நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையோரப்பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மன்னர் வளைகுடா மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று முதல் 9 ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு
8,9,10ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ராதாபுரம், தக்கலை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மேலடுக்கு சுழற்சி
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 8 மற்றும் 9ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால்
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications