தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக பெய்யும் சாரல் மழை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பங்குனி மாத வெயில் போல சூரியன் சுட்டெரித்து வரும் நிலையில் கோடை வெயிலுக்கு இதமாக சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை மேகமூட்டம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செமீ, மதுக்கூர் சிதம்பரம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. அதிராமபட்டினம் நெய்வாசல் தென்பாதி , அண்ணாமலை நகர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி , காரைக்கால், வேளாங்கண்ணி தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மழை பதிவு
நீடாமங்கலம் , நாகப்பட்டினம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, மஞ்சளாறு, திருவாரூர், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, கடலூர் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூண்டி, மரக்காணம், மகாபலிபுரம் , மணல்மேடு ,காட்டுமன்னார் கோயில் , நன்னிலம்,வலங்கைமான் , பெருஞ்சாணி அணை, புதுச்சேரி, திருக்கழுக்குன்றம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பட்டுக்கோட்டை, வனமாதேவி புத்தனார் அணை பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காற்று வீசும்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது. சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 280 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரடைஸ் பீச்
இந்நிலையில் புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் அமைத்துள்ள பாரடைஸ் பீச்சியில் காற்று பலமாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நிழல் குடை, கூடாரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் மேற்பரப்பில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications