செங்கோட்டையனுக்கு டிடிவி தினகரன் கொடுத்த மெசேஜ்.. அமித் ஷா சந்திப்புக்கு இடையே கூட்டணிக்கு தூதா?
சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுகள் மும்முரமாக நடந்து வரும் சூழலில் டிடிவி தினகரனின் இந்த வாழ்த்து, அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமமுக ஆதரவின்றி எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என டி.டி.வி. தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்துக்கு எது நல்லதோ, அந்த முடிவை எடுப்போம். எந்தக் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுக தான் எனக் கூறி வருகிறார் தினகரன்.

தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி முடிவுகளை அறிவிப்போம். வரும் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி. எங்களுக்கு புனித பூமியாக திகழ்வது ஆண்டிபட்டிதான். ஆகவே, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டியில் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அண்மையில் கூறினார் டிடிவி தினகரன்.
அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணையக்கூடும் என்ற பேச்சுகள் உலவி வருகின்றன. ஆனால், அமமுகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. தவெக உடனும் அமமுக பேசி வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெக உடன் பேசி வருவதாக செங்கோட்டையன் கூறி இருந்தார்.
அண்மையில் தஞ்சையில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது இயற்றப்பட்ட ஒரு தீர்மானம் கவனம் பெற்றது. திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் உறவினர்களாகவும், சகோதரர்களாகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் மதத்தின் பெயரிலோ, ஜாதியின் பெயரிலோ, கடவுளின் பெயரிலோ பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால், கூட்டணி நிலைப்பாட்டில் டிடிவி தினகரன் வேறு முடிவை எடுக்கக்கூடுமோ என்ற பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் டெல்லியில் நேற்று அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். அதிமுக - பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள் என கூறியிருந்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் தொடர்பான கூட்டணி கேள்விக்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. இதே நேரத்தில், டெல்லியில் அமித் ஷாவை தினகரன் நேரில் சந்தித்ததாகவும், கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் தனது எக்ஸ் தள பதிவால் பரபரப்பைக் கிளப்பி உள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். தினகரனுடன் பேசி வருகிறோம் என செங்கோட்டையன் கூறி வந்த நிலையில், செங்கோட்டையன் பிறந்தநாளையொட்டி இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். இது கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
"எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications