எல்லாம் பதவி படுத்தும்பாடு... வேறென்ன சொல்ல... வாழ்க வசவாளர்கள்... யாரை சொல்கிறார் டிடிவி தினகரன்!
சென்னை: தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. வாழ்க வசவாளர்கள் என்றும் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர், தமிழக அமைச்சர்களை தாக்கி பேசும் வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

சசிகலா சென்னை வந்தார்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் 27-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கடந்த 8-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கார் மூலம் சென்னை திரும்பினார்.

வரலாறு காணாத வரவேற்பு
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அவர் சுமார் 23 மணி நேரம் பயணம் செய்தனர். சசிகலா வந்த வழியெங்கும் அவருக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து என சசிகலா வருகையை ஒரு திருவிழாபோல் கொண்டாடினார்கள். தொண்டர்களின் வரவேற்பில் சசிகலா திக்குமுக்கடிதான் போனார் என்று சொல்ல வேண்டும்.

அதிமுக கொடி பயன்படுத்தினர்
பெங்களூருவில் இருந்து வந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. தமிழக அமைச்சர்களின் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலும் அதிமுக கொடியுடன் சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்றும் கொடியை பயன்படுத்த்த தங்களுக்கு உரிமை உள்ளது என சசிகலா தரப்பினர் கூறி வருகின்றனர். சசிகலா அதிமுக உறுப்பினர் கூட கிடையாது. அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக மூத்த அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

ஒருவரை ஒருவர் தாக்கு
இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை சிலர் கைப்பற்ற நினைக்கிறார்கள். துரோகம் செய்தவர்களுக்கு அதிமுகவில் என்றும் இடம் கிடையாது என்று சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கடுமையாக தாக்கி பேசினார். இந்த நிலையில் முதல்வர், தமிழக அமைச்சர்களை தாக்கி பேசும் வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் பதிலடி
அதில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:- நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

வாழ்க வசவாளர்கள்
பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.