நானும் ரவுடி தாங்க.. செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து எஸ்கேப்பான ராஜ்மோகன்! ஆனால்.. அங்க தான் ட்விஸ்டே!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், வழக்குக்கு சம்பந்தமே இல்லாத தவெக கொள்கை பரப்பு செயலாளரும், பேச்சாளருமான ராஜ்மோகன் தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் பேரதிர்ச்சியையும் பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு காவல்துறையால் த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் நெரிசல் பேரதிர்ச்சி
மேலும், கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அதேபோல், இந்தச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன் மற்றும் சரத்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய முக்கிய தலைவர்களான த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர்மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இருவரும் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
புஸ்ஸி ஆனந்த்
முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் தலைமறைவாகி விட்டனர். தற்போது, அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். தகவலின்படி, சென்னை, சேலம், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புஸ்ஸி ஆனந்த் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறப்பு போலீஸ் குழுக்கள் அந்தப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், புஸ்சி ஆனந்துக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்கள், உறவினர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் இருவரின் இருப்பிடத்தை அறிந்து கைது செய்ய முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிடிஆர் நிர்மல் குமார்
புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் பேரதிர்ச்சிக்குப் பிறகு தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பலர் தலைமறைவாகி விட்டனர்.
ராஜ்மோகன் தலைமறைவு
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் பிரபல பேச்சாளருமான ராஜ்மோகன் தலைமறைவாகி இருக்கிறார். கடந்த ஆறு நாட்களாக அவரது சமூக வலைதள பக்கங்கள் திறக்கப்படவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிடிஆர் நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் மீது தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் சமூக மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டதாக தனியாக ஒரு வழக்கு ஆதவ் அர்ஜுனம் மீது பதியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ராஜ்மோகன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தன் மீது வழக்கு பதிவு செய்து விடுவார்கள் அல்லது கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக ராஜ்மோகன் தலைமறைவாகி இருப்பதாகவும் நானும் ரவுடிதான் என்ற ரீதியில் ராஜ்மோகன் செயல்பட்டு வருவதாக விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications