“ரத்தீஷ் யார்? அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் ஏன் பார்த்தார்கள்?” சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி
சென்னை: "ரத்தீஷை அதிகாரிகள் பார்ப்பது, அமைச்சர்கள் பார்ப்பது, ஒரு 10 பேர் உட்கார்ந்து கொண்டு 10 டிபார்ட்மெண்டை பிரித்து வசூல் செய்வது இதெல்லாம் செய்தால் அரசு எப்படி நடந்திருக்கும்?" என விமர்சித்துள்ளார் தவெக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்.
தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "கடந்த 5 வருடங்களில் திமுக செய்த தவறுகளை சரி செய்து பழைய நிலைமைக்கு கொண்டு போராடி வருகிறோம். அவர்கள் மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முதல்வர் சட்டமன்றத்தில் ரத்தீஷ் என்ற நபரின் பெயரை சொன்னார். அரசை முதல்வர் நடத்தலாம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடத்தலாம், எம்.எல்.ஏக்கள் நடத்தலாம். ஆனால் ரத்தீஷ் என்ற ஒரு நபரும் மாப்பிள்ளை உடன் இருக்கிற நான்கு ஐந்து நபர்களும் அரசை நடத்தக்கூடாது.
ரத்தீஷை அதிகாரிகள் பார்ப்பது, அமைச்சர்கள் பார்ப்பது, ஒரு 10 பேர் உட்கார்ந்து கொண்டு 10 டிபார்ட்மெண்டை பிரித்து வசூல் செய்வது இதெல்லாம் செய்தால் அரசு எப்படி நடக்கும்? ரத்தீஷ் யார்? ரத்தீஷுக்கு அரசியல் தெரியாது, மக்களை பற்றி தெரியாது, மக்கள் கூட ஏதாவது போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறாரா? எதுவும் தெரியாது.
மாப்பிள்ளை கூட இருக்கிற 10 பேரும், ரத்தீஷ் கூட இருக்கிற 10 பேரும் அரசையே நடத்திருக்கிறார்கள். இப்படி புரையோடி இருக்கிற அரசை மாற்றுகிறோம் என மக்களிடம் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எதற்கு ரத்தீஷ் இன்று தலைமறைவாக இருக்கிறார்? அவர் மேல் ஏன் குற்றச்சாட்டு வருகிறது?
குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி உடன் 24 மணி நேரமும் இருந்த நபர் தான் ரத்தீஷ். அவர் தான் பவர் புரோக்கர். அவர் நான்கு ஐந்து துறையில் வசூல் செய்துக் கொண்டிருந்தார். அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. போலீஸ் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும்.
இந்த 100 நாட்களில் எவ்வளவு செய்ய முடியுமோ அதை முதல்வர் செய்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
தவெக அரசுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆதரவு நீடிக்குமா என்கிற உறுதி இல்லை என்ற கம்யூனிஸ்ட் கட்சியினரின் கருத்து பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், கம்யூனிஸ்டுகள் என்ன சொன்னாலும் சரி, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தவெக அரசிடம் எந்தவொரு தொய்வும் இருக்கப் போவதில்லை. இது முழுக்க முழுக்க எளிய மக்களுக்கான அரசு, இதனால் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள் முழு அளவில் தொடரும், அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
