இந்தியாவுக்கு 25% வரி.. மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் டிரம்ப்.. அமெரிக்கா போடும் பகீர் திட்டம்
வாஷிங்டன்: இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தொழில் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமெரிக்க பிஸ்னஸை பாதிப்பதாக கூறி, இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. அதேநேரம் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்த வரியை 17%ஆக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு ஏகப்பட்ட வரிகளை விதித்து வருகிறது. இது சர்வதேச வர்த்தகத்தை மிக கடுமையாக பாதிப்பதாக இருக்கிறது. டிரம்ப் அரசு இஷ்டத்திற்கு வரி விதிப்பதால் பிஸ்னஸ் செய்வது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் தான் டிரம்ப் அரசு வரிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா
USTR எனப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் டிரம்ப் அரசு, 1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301ன் கீழ் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது விசாரணை நடத்தியது. இந்த நாடுகளின் அளவுக்கு அதிகமான உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி தொடர்பான கொள்கைகள் அமெரிக்க பிஸ்னஸை பாதிப்பதாக கூறி இந்த விசாரணை நடத்தப்பட்டது.
25% வரி
இந்தியாவின் சில நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை என்றும் அவை அமெரிக்க வர்த்தகத்தை பாதிக்கின்றன என்றும் விசாரணையின் முடிவில் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.. அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஏற்கெனவே உள்ள வரிகளை கணக்கில் கொண்டு, கூடுதலாக அதிகபட்சம் 25 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் முன்மொழிந்துள்ளார். அதேநேரம் மருந்து உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்றே தெரிகிறது.
இந்தியா
இந்தியாவை பொறுத்தவரை நிதித்துறை சார்ந்த கட்டுப்பாடுகள் முக்கிய சிக்கலாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதாக இந்திய சந்தையை அணுக முடிவதில்லை என்றும் வெளிநாட்டு நிறுவனங்களை தடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சந்தை பொருளாதார முறையை பின்பற்றாத நாடுகளிலிருந்து நாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்கள் வருவதையும் வெளிநாட்டு முதலீடுகள் வருவதை இந்தியா கட்டுப்படுத்த தவறியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் இந்த கொள்கைகள் அமெரிக்க நிறுவனங்களை பாதிப்பதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுவதாக கூறியுள்ளது. குறிப்பாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார துறை, ஸ்டீல், சூரிய மின்சக்தி மற்றும் ஐடி துறைகளில் இந்த பாதிப்பு அதிகம் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரி விதிக்க வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது.
குறைக்கப்படலாம்
அதேநேரம் இந்தியா அமெரிக்கா இடையே பரஸ்பர வரி தொடர்பாக நீண்ட காலமாகவே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த அறிக்கை சீக்கிரம் இறுதியாகும் என அமெரிக்கா சொல்லி வந்தாலும் கூட பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் பரஸ்பர வரி விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டால் இந்த 25% வரியை குறைப்பது குறித்து பரிசீலனை செய்வோம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதர நாடுகள்
இந்தியா மட்டுமின்றி சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது. இவற்றில் சீனாவுக்கு 20 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுக்கு 15 சதவீதம், வியட்நாமுக்கு 35 சதவீதம் கூடுதல் வரி விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வங்கதேசம், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இது இறுதி முடிவு இல்லை. இதை பரிந்துரையாக மட்டுமே USTR வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கு அடுத்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை காலஅவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பிறகே அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்.




Click it and Unblock the Notifications
