பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் வடக்கர்கள்! தவாக வேல்முருகனின் வார்னிங் ! அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை : தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பெரும்பாலோனோர் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், அந்தப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களே பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் ரயில்வே, பெட்ரோலியம், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட ஒன்றிய அரசு பணிகளில் ஏராளமான வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அஞ்சலகங்களில் பணியாற்றுவதற்காக எடுக்கப்பட்ட 946 பேரில், பெரும்பாலானவர்கள் வெளி மாநிலத்தவர்கள். திட்டமிட்ட முறையில், இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் இந்திய அரசால் தமிழ்நாட்டில் இவ்வாறு தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி
இத்தகைய போக்கு காரணமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை கிடைப்பதில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, தமிழ்நாடு வேலை தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இச்சூழலில், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பெரும்பாலோனோர் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

வெளிமாநில நபர்கள்
அதாவது, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர் பணியில், 1,060 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு டிசம்பரில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், இந்தாண்டு மார்ச் 8 இல் வெளியிடப்பட்டன. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில், ஆந்திரா,குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி கட்டாயம்
தற்போது அவர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் உள்ளது போன்று, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கவில்லை. இதன் காரணமாகவே, வெளி மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசு
எனவே, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்வதோடு, அப்பணிக்கான தேர்வை மீண்டும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வர வேண்டும். அத்தேர்வில், தமிழ்நாட்டு இளைஞர்களே பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் உள்ளது போன்று, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழ் மொழி பாடம் கட்டாயமாகி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications