தமிழக "தலைமறைவு" கழகம்.. பொதுச்செயலாளர் முதல் நிர்வாகிகள் வரை.. ஒரே ரூட்டில் செல்லும் தவெக!
சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தவெகவின் பொதுச்செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அத்தனை பேரும் தலைமறைவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தை தமிழக தலைமறைவு கழகம் என்று கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்டக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை நீதிமன்றம் கடுமையாக சாடி இருக்கிறது. தவெகவை நேரடியாக இது என்ன மாதிரியான கட்சி என்று சாடிய நீதிபதி செந்தில் குமார், விஜய்க்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பே இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

அதேபோல் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியதோடு, வழக்குப்பதிவும் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் கரூர் சம்பவம் நடந்த சில நேரங்களில் தவெகவினர் மறைந்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்தார். இதையெல்லாம் விடவும் கரூர் சம்பவம் மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு என்றும் கூறியது தவெகவுக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்க்கு இன்னும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் தவெக சார்பாக நேற்று முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றம் முன் ஜாமின் மறுத்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் ஆகிய 3 பேருக்கும் முன் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே தலைமறைவாக உள்ளனர். அதிலும் புஸ்ஸி ஆனந்த் கரூர் சம்பவத்திற்கு பின் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் எதற்காக தலைமறைவாக இருக்கிறார் என்பதும் அக்கட்சியினருக்கே குழப்பமாக அமைந்துள்ளது.
தற்போது நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் தான் கரூர் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் என்று தவெக தலைமை நீதிமன்றத்தில் கோர்த்துவிட்டது.
இதனால் காவல்துறை கைகளில் சிக்கக் கூடாது என்பதற்காக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரும் தலைமறைவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது. தவெகவின் பொதுச்செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் தலைமறைவாகி இருக்கின்றனர். இதனால் தமிழக வெற்றிக் கழகம் என்பதை தமிழக தலைமறைவு கழகம் என்று பலரும் கிண்டல் செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications