இதுதான் விஜய்க்கு ரியல் சிக்கல்.. 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாமல்.. தவெகவின் அடுத்த திட்டம் என்ன?
சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கும் தவெகவுக்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களாக அறியப்பட்டவர்கள் பலரும் தலைமறைவாக இருக்கும் சூழலில், விஜய் அடுத்த என்ன செய்வார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அதேபோல் தவெகவைச் சேர்ந்த எந்த நிர்வாகியும் கரூர் பக்கமே செல்லவில்லை. தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை போலீசார் கைது செய்ததால், உடனடியாக பலரும் முன் ஜாமின் கோரி நீதிமன்றம் சென்றனர்.

குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ் மோகன் ஆகிய இருவரும் தலைமறைவாக இருக்கின்றனர். ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுவிட்ட நிலையில், சிடிஆர் நிர்மல் குமார் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் உள்ளது. இந்த சூழலில் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு முன் ஜாமின் கொடுக்கவும் நீதிமன்றம் மறுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய்யின் பிம்பத்தை நீதிமன்றம் சுக்குநூறாக உடைத்துள்ளது. விஜய்க்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை, கரூர் சம்பவத்திற்கு பின் உடனடியாக ஓடிவிட்டார் என்று சாடியதோடு, தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் கேள்வி எழுப்பி அக்கட்சியையும் சாடி இருக்கிறார். இதனால் தவெகவினர் சோகத்தில் இருக்கின்றனர்.
அடுத்தக் கட்டமாக புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டால், என்ன செய்வதென தவெக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டால், உடனடியாக சட்ட ரீதியாக எதிர்கொண்டாலும், விஜய் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாமல் எப்படி செயல்படுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏனென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே போலீஸ் அனுமதி தொடங்கி பல்வேறு பணிகளையும் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோரே செய்து வந்தனர். மற்ற எந்த நிர்வாகிக்கும் அந்தப் பணிகளை செய்த அனுபவம் இல்லை. தவெக சார்பாக விஜய்யின் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டாலும், அது இன்னும் கூடுதலாக ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
ஜான் ஆரோக்கியசாமியை மட்டுமே நம்பி விஜய் அரசியல் செய்து வந்த சூழலில், 2ஆம் கட்டத் தலைவர்கள் மிகப்பெரிய சிக்கலில் உள்ளனர். மாவட்டச் செயலாளர்கள் யாருக்கும் எந்த அனுபவமும் இல்லை என்பதால், விஜய் அமைதி காப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்று பார்க்கப்படுகிறது. அதுவரை வெறும் அறிக்கை மற்றும் வீடியோ மூலமாக மட்டுமே விஜய் செயல்படுவார் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் அரசியல் கூட்டங்கள் நடத்த புதிய நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் தவெக அடுத்தக் கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், கரூர் சம்பவத்தை காரணம் காட்டி அனுமதி கிடைக்காமல் போக வாய்ப்புகள் உள்ளது. இதனால் மீண்டும் தவெக நீதிமன்றத்தை அணுக வேண்டிய தேவை ஏற்படும்.
இதனால் கரூர் விவகாரத்தில் திமுகவுக்கு முதல் 2 நாட்கள் பின்னடைவு ஏற்பட்டாலும், அடுத்தடுத்து ஒவ்வொரு நாளாக விளக்கங்கள், வீடியோக்கள், நீதிமன்றத்தின் கண்டிப்பு உள்ளிட்டவை கை கொடுத்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications