11 மணி.. 2 பெண்கள்.. ஓஎம்ஆர் சாலையில் இரவில் நடந்த "பதைபதைக்க" வைக்கும் சம்பவம்.. பரிதாபம்
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் சொகுசு கார் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இருவரும் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், பணி முடித்து திரும்பிக்கொண்டிருந்தபோது தறிகெட்டு ஓடிய கார் மோதியதால்தான் உயிரிழந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண் பொறியாளர்கள்
சென்னையில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு பழைய கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் இரு வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் பொறியாளர்கள் உயிரிழந்துள்ளனர். பாலக்காட்டை சேர்ந்த லட்சுமி, சித்தூரை சேர்ந்த லாவண்யா ஆகியோர் சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

விபத்து
இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் பணி முடித்துவிட்டு நடந்தவாறு தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். இருவரும் வெவ்வேறு மாநிலத்தவர் என்பதால் தங்கள் கலாச்சாரம், பண்பாடு, உணவு முறை உள்ளிட்டவை குறித்து சிலாகித்து பேசி வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் சத்தமில்லாமல் வந்த சொகுசு கார் இருவர் மீதும் மோதியுள்ளது. இதனால் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பாலக்காட்டை சேர்ந்த லட்சுமி துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு
விபத்து ஏற்பட்டதையடுத்து உயிருடன் இருந்த லாவண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர். விபத்து காரணமாக ரத்தம் அதிகம் வெளியேறியிருந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், சிறிது நேரத்திலேயே லாவண்யாவும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்திற்கு தறிகெட்டு வந்த கார்தான் காரணமாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த காரை ஓட்டி வந்த மோதீஸ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புள்ளிவிவரங்கள்
இந்தியாவில் கடந்த 2021ல் மட்டும் சுமார் 4.03 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்திருக்கின்றன. இதில் 1.55 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 426 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒரு மணி நேரத்திற்கு 18 ஆக உள்ளது. மட்டுமல்லாது கடந்த காலகட்டங்களில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல ஆண்டுக்கு 3.71 லட்சம் பேர் இந்த விபத்துகளால் படுகாயமடைவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications