அந்த 20 பேருக்கு அசைன்மென்ட் இதுதான்.. "பழைய மாதிரி இல்ல.. திட்டமே வேற"- உதயநிதியின் மாஸ்டர் பிளான்!
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடத்தப்படும் என சமீபத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் திராவிட பயிற்சி பாசறைகளை சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதற்கென 20 பேர் கொண்ட கருத்துரையாளர்கள் டீமையும் அமைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் தொடங்கி எம்.பி., எம்.எல்.ஏக்கள் வரை இந்த டீமில் இடம்பெற்றுள்ளனர். இன்று 20 பேராக தொடங்கும் பயிற்சி பாசறை, 200, 2000 கருத்துரையாளர்கள் என விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் உதயநிதி திட்டமிட்டுள்ளாராம்.

பயிற்சி பாசறை
தி.மு.க பயிற்சிப் பாசறைகளை நடத்துவது ஒன்றும் புதிதல்ல. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே ஊர்தோறும் பாசறைக் கூட்டங்களை நடத்தி வளர்ந்த இயக்கம்தான். ஆனால், அதில் சில ஆண்டுகளாகவே தேக்கம் விழுந்துவிட்டது. உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் முழுவதும் இளைஞரணி சார்பில் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. தேர்தல் பணிகள் காரணமாக பின்னர் அந்தக் கூட்டங்கள் நடத்துவதில் கேப் விழுந்துவிட்டது.

திராவிட மாடல் பயிற்சி பாசறை
இந்நிலையில்தான், பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே திராவிட மாடல் ஆட்சி பற்றிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், திராவிட மாடல் பற்றிய விவாதங்கள் எழுந்தன. இதை கட்சியை பலப்படுத்தும் வழியாக கைக்கொள்ளத் திட்டமிட்ட தலைமை, கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வைத்து திராவிட மாடல் பயிற்சி பாசறைகள் நடத்தப்படும் என அறிவித்தது.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயம் கலைஞர் அரங்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களும் பங்கேற்றனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். திராவிட மாடல் பயிற்சி பாசறையில் இளைஞர் அணி சார்பில் பங்கேற்கவுள்ள 20 கருத்துரையாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

100 பேர் போதும்
பயிற்சி பாசறையை உங்கள் பகுதியில் அரங்கத்தை ஏற்படுத்தி கூட்டம் கூட்டினால் போதும். இளைஞரணியினர் பெரிய அளவில் கூட்டங்களை நடத்தியாக வேண்டியதில்லை. வெறும் 100 பேரை வைத்து சிறிய அளவில் கூட்டங்களை நடத்தினால்தான் திமுகவின் கொள்கைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். கூட்டம் நடத்துவதன் உண்மையான பலன் கிடைக்கும். தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

யார் அந்த 20 பேர்?
தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பிலான பயிற்சி பாசறையில் பங்கேற்கவுள்ள 20 கருத்துரையாளர்கள் : பத்திரிகையாளர் கோவி. லெனின், எழுத்தாளர்கள் மதிமாறன், சூர்யா சேவியர், அசோக், பாலா, சூர்ய மூர்த்தி, கலாநிதி வீராசாமி எம்பி, திமுக வெளிநாடுவாழ் இந்தியர் நல அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்பி, இணை செயலாளர் தர்மபுரி செந்தில்குமார், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கனிமொழி எம்பி, மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ, திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் எம்எல்ஏ, டாக்டர் எழிலன் எம்எல்ஏ, பொறியாளர் அணி துணை செயலாளர் கே.பி.கருணா, தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர்கள் தமிழன் பிரசன்னா, ராஜீவ் காந்தி, துணை செயலாளர் அமுதரசன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் உமா, வழக்கறிஞர் கணேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விரைவில் விரிவுபடுத்தப்படும்
அடுத்த தலைமுறைக்கான திராவிடக் கருத்தியல் செறிவு மிக்க இளைஞர் படையை உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்றும், 20 பேரை பயிற்சியாளர்களாக வைத்து தொடங்கும் இந்த பயிற்சிப் பாசறை திட்டம் சில மாதங்களில் 200 பேர் பயிற்சி கொடுக்கும் அளவுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர் நம்மிடம் பேசிய இளைஞரணி நிர்வாகிகள். இந்தப் பயிற்சிப் பாசறை திட்டத்தை குறிப்பிட்ட கால வரையறையில் நிறுத்தி விடாமல் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.

முன்பு போல இல்லாமல்
வழக்கமான கட்சிக் கூட்டங்களைப் போலவோ, முந்தைய பாசறை கூட்டங்களைப் போலவோ இல்லாமல் இதில், சீரியஸாக செயல்பட வேண்டும். இது வரும் 2024 தேர்தலை மட்டும் குறிவைத்த பயிற்சி அல்ல. கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கானது என்றும், ஒவ்வொரு பயிற்சி முகாமின்போதும், திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு வர வேண்டும் என்றும், அவர்களே அந்தந்த வட்டாரங்களில் சிறிய அளவில் பயிற்சி கொடுக்கும் அளவுக்கு 'விஷயம்' பெறும் அளவுக்கு இந்த பயிற்சி முகாம்கள் அமைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications