வாங்கியதை விட அதிகமாகவே கொடுத்திருக்கிறோம்.. தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி.. நிர்மலா சீதாராமன் விளக்கம்
சென்னை: கடந்த 2014 முதல் 2023ம் ஆண்டு வரை தமிழகத்திடமிருந்து பெற்ற வரியை விட கூடுதல் நிதி திரும்ப கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டின் இறுதி காலகட்டம் தமிழ்நாட்டிற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. இவர்களுக்கு நிவாரணமாக ரூ.6000-ஐ தமிழக அரசு வழங்கியது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு சவாலை தென் தமிழ்நாடு எதிர்கொண்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளம் புகுந்தது. உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என பேரிடரை இந்த இரண்டு மாவட்டங்களோடு சேர்ந்து தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளும் சந்தித்தன. இவர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் கொடுக்கப்பட்டது.
இந்த இரண்டு பேரழிவுகளையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், இதனை எதிர்கொள்ள தற்காலிகமாக ரூ.7,033 கோடியும், நிரந்தரமாக ரூ.12,659 கோடியும், உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். அடுத்த சில நாட்களில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பாதிப்புகளை 'தேசிய பேரிடராக' அறிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில்தான் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தவணையை மத்திய அரசு விடுவித்திருந்தது. அதாவது மொத்தமாக ரூ.72,961.21 கோடியை விடுவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக பாஜக ஆளும், பிரதமர் மோடியின் சொந்த தொகுதி அமைந்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடியை மத்திய அரசு பிரித்து கொடுத்திருந்தது. தமிழ்நாட்டிற்கு ரூ.2,976.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே புயல், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்து கூடுதல் நிதியை வழங்காமல் இருந்தது, இதன் தொடர்ச்சியாக வரிப்பகிர்வில் ஏமாற்றம் போன்றவை மத்திய அரசு மீது கூர்மையான குற்றச்சாட்டுகளை எழுப்பியது. இந்நிலையில் சென்னை மாம்பலத்தில் மத்திய அரசின் திட்டம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிர்மலா சீதாராமன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
அதாவது, "தமிழகத்திடமிருந்து வாங்கியதை விட அதிகமாக கொடுத்திருக்கிறோம். 2014-2023 மார்ச் வரை தமிழகத்திடமிருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6.96 லட்சம் கோடியை கொடுத்திருக்கிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.37,965 கோடியும், பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, ரூ.11,116 கோடியும், கிராமப்புறத்தில் வீடுகள் கட்டுவதற்காக ரூ.4,836 கோடியும் கொடுத்துள்ளோம்.
தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.36,350 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.37,370 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குதான் கொடுத்துள்ளோம். சொல்லப்போனால் மாதம் மாதம் கொடுக்க வேண்டிய இந்த தொகை பல நேரங்களில், தீபாவளிக்கு செலவு இருக்குமே, பொங்கலுக்கு செலவு இருக்குமே என்று சீக்கிரமாகவே கொடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications