வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீடிக்குமா? : நவ.1ல் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு
வன்னியருக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
சென்னை: வன்னியருக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு வரும் திங்கட்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது. இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், எம்பிசி பிரிவிலுள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. குறிப்பாக எம்பிசி வகுப்பில் உள்ள குலாலர் சமூகத்திற்கு 2.5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் எங்கள் சமூகம் உள்ளிட்ட பலதரப்பினருக்கான வாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாதி வாரி விபரங்கள் சேகரிப்பதற்காக ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் இருந்து எந்தவித அறிக்கை மற்றும் பரிந்துரைகள் பெறாமல் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 25 வழக்குகள் உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது எனவும், 20% ஒதுக்கீட்டில், 68 சாதிகள் கொண்ட சீர்மரபினருக்கு 7.5% வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5% வழங்கினால் எம்பிசியில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5% ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியவில்லை என 1989 ஆம் ஆண்டுகளில் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், வன்னியர்கள் உள்ளிட்ட 106 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரின் அறிக்கையின் அடிப்படையில், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு எனவும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வன்னியர் சாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்யவே அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளதாகவும், இதில் அரசியல் காரணங்களோ அவசரமோ ஏதுமில்லை எனவும் கூறப்பட்டது. மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என கூறுவது வெறும் கற்பனையே எனவும், அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரப்பட்டது.
வன்னியருக்கு மட்டும் 10.5% ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியர் பிரிவில் 7 சாதியினர் உள்ளதாகவும், இச்சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டுள்ளது. அனைத்து வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications