"கிறித்தவர்" கோரிக்கை வைத்த திருமா! சங்மாவுக்கு ஓட்டு போட்டீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட பாஜக!
சென்னை : குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் பொது வேட்பாளராக கிறித்தவர்களை நியமிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கிறித்தவர் பி.ஏ.சங்மா அவர்கள் 2012 ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் சங்மாவுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
குடியரசு ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 'கிறித்தவர் ஒருவரை' நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமாவளவன் கோரிக்கை
இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட அவர், "எதிர்வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறித்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை." என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த கோரிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

பாஜக நாராயணன் திருப்பதி
இந்நிலையில் கிறித்தவர் பி.ஏ.சங்மா 2012 ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் அவர்கள் சங்மா அவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி,"பாஜகவை பொறுத்தவரை அனைத்து மதத்தினரையும் இந்தியர்களாக மட்டுமே எண்ணுகிறது.

கடும் கண்டனம்
ஆனால், ஒரு மதத்தை சார்ந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறுவதன் மூலம், தான் ஒரு மதவாதி என்பதை திருமாவளவன் நிரூபித்து விட்டார். இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு கிறித்தவர் இது வரை இல்லை என்று மதரீதியாக பிரித்து பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படி பார்ப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்றால், நம் மக்களின் உரிமையை பறித்து 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தியவர்கள் அதே கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்ற உண்மையை மக்கள் மறந்து விட மாட்டார்கள் என்பதை திருமாவளவன் அவர்கள் உணர வேண்டும்.

கிறித்தவர் பி.ஏ.சங்மா
மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் மதவாத சக்திகளை அடையாளம் கண்டு அடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 2012ல் அதே வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த கிறித்தவர் பி.ஏ.சங்மா அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் அவர்கள் சங்மா அவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? ஆதரவு தர மறுத்தது ஏன்?

திருமாவுக்கு கேள்வி
அப்போது ஒரு கிறித்தவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று உருகவில்லையே, ஏன்? இப்போது கிறித்தவர்கள் மீது வந்துள்ள பாசம் அப்போது இல்லாமல் போனது ஏன்? அரசியலில் மதத்தை கலக்கும் திருமாவளவனின் அறிக்கை கிறித்தவ மதத்தின் மீதான அவரின் போலி பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.அரசியலில் மதத்தை கலக்கும் அநாகரீக அரசியலை திருமாவளவன் அவர்கள் கைவிட வேண்டும் திருமாவளவன் அவர்கள் 2012ல் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்காதது ஏன்? " என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications