5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. விஜய் அவசரமாக கோர்ட்டுக்கு போகிறாரே ஏன் தெரியுமா? எக்ஸ்க்ளூசிவ் தகவல்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை நடத்துவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கும் நிலையில், ஏன் இப்போதே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார் விஜய்? இதன் பின்னணியில் முக்கியமான காரணம் இருப்பதாக நமக்கு எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் கிடைத்துள்ளன. அதை பற்றி இங்கே பார்ப்போம்..!!
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அதில் முதல்வர் விஜய் வெற்றிபெற்றுப் பிறகு ராஜினாமா செய்துவிட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் வெற்றியை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட செப்டம்பர் 8ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இந்தத் தடை உத்தரவுக்கான அவகாசம் முடிய இன்னும் 11 நாள்தான் இருக்கிறது. அதேசமயம், இடைத்தேர்தல் நடத்த நவம்பர் 4-ம் தேதி வரை அவகாசம் உண்டு.
இப்படிப்பட்ட சூழலில், இடைத்தேர்தல் அறிவிப்பதற்கான தேதியைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவில்லை; அதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. ஆனாலும், முதல்வர் விஜய்யே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
தவெக விஜய்
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "தேர்தல் நடைமுறைகளுக்கு குறைந்தபட்சம் 28 நாட்கள் தேவைப்படுவதால், நவம்பர் 4ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கக் கணக்கிட்டால் வெறும் 30 முதல் 35 நாட்கள்தான் கையில் இருக்கின்றன. இதனால் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி செப்டம்பர் 8-ந்தேதி மீண்டும் சில வாரங்களுக்கு 5 தொகுதிகளின் இடைத்தேர்தலை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தால் அது தவெகவுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படும்.
தேர்தல் ஆணையம் முடிவு
ஒருவேளை இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேதியை அறிவிக்கும் நாள் வரை, தடை உத்தரவு நீடித்தபடியே இருந்தால், தேர்தல் வழக்கு இல்லாத காலியாக இருக்கும் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்குத்தான் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன் வரும்.
ஆனால், இந்த 2 தொகுதிகளை விட , தான் வெற்றிப்பெற்ற திருச்சி கிழக்கு மற்றும் தவெகவில் இணைந்து விட்ட அதிமுகவின் வி.வி.ஐ.பி. என வர்ணிக்கப்படும் கரூர் விஜயபாஸ்கர், விராலி மலை விஜயபாஸ்கர் ஆகியோரின் தொகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் இடைத்தேர்தல் நடந்தாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்யிடம் அதிகமாக இருக்கிறது.
ஆனால், தேர்தல் வழக்கை காரணம் காட்டி எங்கே இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வராமல் இருந்து விடுமோ என ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில் தான் விஜய் பெயரிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அவசரமாக கோர்ட்டுக்கு போக காரணம்?
முதல்வரின் நேரடி தலையீட்டை வெளிப்படுத்தும் வகையிலும் அவரது பெயரில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், செப்டம்பர் 8-ந்தேதி தேர்தல் வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்காது என்றே முதல்வரும் அமைச்சர்களும் கருதுகிறார்கள்" என்கிற தகவல்கள் தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைக்கின்றன.
இதற்கிடையே, விஜய்யின் மனுத்தாக்கலை கவனித்துள்ள அதிமுக வழக்கறிறிஞர்கள் டீம், "தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பது ஒருபுறம் என்றால், குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எங்கள் தரப்பில் (அதிமுக) தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
அதாவது, ராஜினாமா செய்த 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள் தகுதி நீக்க வழக்கு முடியும் வரை அந்த 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்கிற எங்க ளின் வழக்கும் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு ஆணையம் முயற்சித்தால் அதற்கு எதிராக சட்டரீதியான வழிகளை அதிமுக ஆராயும். திருச்சி கிழக்கில் இடைத் தேர்தல் நடத்த எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்கிறார்கள்.
- நமது சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
