சண்டை போட்டுக்காதீங்க ஏட்டையா..ஆல்வேய்ஸ் வெல்கம்ஸ் யூ! வாரிசு படத்துக்கு அஜித் ரசிகர்களுக்கு அழைப்பு
சென்னை : நடிகர்கள் விஜய் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் அதிகரித்து இருக்கிறது அதே நேரத்தில் பட்டுக்கோட்டையில் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் ஒன்றை வழங்கி வருகிறார் விஜய் ரசிகர் ஒருவர்.
நடிகர் விஜய்யுடன் முதன்முறையாக இயக்குனர் வம்சி படிப்பள்ளி சேர்ந்திருப்பதும் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பினை கூட்டி இருக்கிறது.
இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் விஜய் நடிக்கும் 66வது படத்தினை விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அஜித் - விஜய்
இந்நிலையில், நடிகர் அஜித் நடித்த திரைப்படம் துணிவும் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு என்ற திரைப்படமும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது. துணிவு இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 3 வது படமாகும் இதே கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

துணிவு
இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா, காசேதான் கடவுளடா பாடல்களும் வெளியாக பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் திரைப்பட அப்டேட்டுகள் வரும்போது அஜித் ரசிகர்களும், நடிகர் அஜித்தின் திரைப்பட அப்டேட்கள் வரும்போது விஜய் ரசிகர்களும் கலாய்ப்பதும் வாடிக்கைதான். இந்நிலையில் தான் தற்போது விஜய் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரணம் நடிகர் அஜித் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இரு திரைப்படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.

ரசிகர்கள் மோதல்
அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வெடித்து போஸ்டர் யுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். இரு படங்கள் தொடர்பாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், போஸ்டருக்கு பெயர் போன மதுரையில் அஜித் குமார் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே போஸ்டர் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுமட்டுல்லாமல் யூட்யூப் சேனல்களிலும் மாறி மாறி தாக்கி பேசி வருகின்றனர். பல இடங்களில் கைகலப்புகள் நடந்ததாகவும் தகவல்கள் வருகிறது.

வித்தியாச முயற்சி
அதே நேரத்தில் பட்டுக்கோட்டையில் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ் ஒன்றை வழங்கி வருகிறார் விஜய் ரசிகர் ஒருவர். ஆதி ராஜாராம் என்பவர் பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க நகர தலைவராக பணியாற்றி வருகிறார். தற்போது வாரிசு துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களின் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வித்தியாசமான முயற்சி ஒன்றினை எடுத்து இருக்கிறார். அதாவது தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தைக் காண அல்டிமேட் ஸ்டார் அஜித் ரசிகர்கள் அனைவரும் வரவேண்டும் என அழைப்பிதழை தயார் செய்திருக்கிறார்.

பாராட்டு
அதுமட்டுமல்லாமல் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பது போல அழைப்பிதழ் உடன் வெற்றிலை பாக்கு பழம் ஆகியவற்றை தாம்பூலத்தில் வைத்து உறவினர்களைப் போல அஜித் ரசிகர்களை அவரவர் வீடுகளுக்கே சென்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போது அனைத்து தளங்களிலும் விஜய் அஜித் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் விஜய் ரசிகரின் இந்த வித்தியாசமான முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications