சீமான் சொன்னதால்தான் விஜய் கட்சி ஆரம்பிச்சாரா? வந்து விழுந்த கேள்வி! புஸ்சி ஆனந்த கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜயின் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என சீமான் கூறியிருந்தார். இது தொடர்பாக விஜய் கட்சியின் புஸ்சி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு புஸ்சி ஆனந்த் அளித்த பதிலை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். நடக்கின்ற லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என்று விஜய் அறிவித்து இருந்தார். தொடந்து கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பட்டினி இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதின் அடிப்படையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தென் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்யாண மண்டபத்தில் பார்த்தீர்கள் என்றால், ஒரு 1500 பேருக்கு சாப்பாடு தயார் பண்ணுவார்கள். இதில் 800 முதல் 1000 பேர் சாப்பிடுவார்கள். எப்படியும் 200 பேருக்கான சாப்பாடு மீதி வந்துவிடும். இனி இப்படி கல்யாண மண்டபத்தில் மீதும் சாப்பாடுகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முதியோர் இல்லம், ஆசிரமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துவிடுவார்கள்.
கல்யாண மண்டபத்தின் மேலாளர்களை தொடர்பு கொண்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவர்களிடம் தங்களது போன் நம்பர்களை கொடுத்துவிடுவார்கள். சாப்பாடு மீதம் வரும் பட்சத்தில் இவர்களுக்கு ஒரு போன் செய்தால் போதும், சாப்ப்பாடை பார்சல் செய்து நேரடியாக முதியோர் இல்லம், ஆசிரமத்தில் கொண்டு சேர்ப்பார்கள்.
எல்லாரும் பிறந்தநாளை 1 நாள் முதல் 5 நாள் வரை கொண்டாடுவார்கள். ஆனால் தளபதி விஜயின் பிறந்தநாளை மட்டும் வருஷத்தின் 365 நாட்களும் கொண்டாடுகிறோம். நீங்கள் சொல்கிறது போல் வரும் ஜூன் 22 ஆம் தேதி மிக சிறப்பாக எல்லாருக்கும் நலத்திட்ட உதவிகளை செய்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
சிக்ஸர் விளாசிய விஜய்.. இன்று உலக பட்டினி தினம்.. தமிழகம் பூராவும் அன்னதானம்.. கவனித்த திராவிட கட்சி
அப்போது ஜூன் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நடக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த புஸ்சி ஆனந்த், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இதனை அறிவிப்பார். எதுவாக இருந்தாலும் தலைவர் அவர்கள் அறிவிப்பார்கள்" என்றார்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்குமா? சீமான் சொன்னதால் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதா என்று பரவும் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த புஸ்ஸி ஆனந்த், இது எல்லாம் தலைவர் தான் முடிவு எடுப்பார்" என்றார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் செய்தியாளர்களை சந்திக்கும் போது, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் செல்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications