என்னப்பா.. இங்க இருந்த ஆட்டை காணோம்.. பல்பு வாங்கிய Village Cooking Channel டீம்.. சுவாரஸ்ய சம்பவம்!
சென்னை: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற VILLAGE COOKING CHANNEL குழுவினர், சமையல் வீடியோ எடுக்கும்போது சொதப்பிய தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM 2024) நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். மேலும், கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில், கிரியேட்டிவ் எக்கானமி பற்றிய கலந்துரையாடலில் சமையல் கலை விடீயோக்கள் மூலம் பிரபலமாகியுள்ள வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking channel) யூடியூப் சேனல் குழுவினர் கலந்து கொண்டனர். 2.33 கோடி சப்ஸ்கிரைபர்களை கொண்ட இந்த சேனல், சமையல் கலை யூடியூப் பிரியர்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வருகிறது.
புதுக்கோட்டையில் உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தில் இருந்து வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை நடத்தி வரும் பெரியதம்பி, அய்யனார், முத்துமாணிக்கம், முருகேசன், தமிழ் செல்வன், சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டனர். அப்போது சுப்பிரமணியன், தாங்கள் சொதப்பிய தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

"ஆரம்ப நாட்களில் சமையல் செய்யும்போது நிறையவே சொதப்பி இருக்கிறது. ஒருமுறை அரேபியன் பிரியாணி செய்யும்போது 2 ஆடுகளை மசாலா தடவி குழியில் இறக்கி, அதன் மேல் தகரம் வைத்து, அதன் மேல் ஒரு வண்டி விறகுகளை கொட்டி தீ மூட்டி வேக வைத்தோம். பொதுவாகவே ஆட்டுக்கறி வேக 1 மணி நேரம் ஆகும், இதில் தீ மேலே போகிறது என்பதால் 2 மணி நேரம் எரிய விடுவோம் என எரிய வைத்தோம்.
அதன் பிறகு நெருப்பு அணைந்ததும் தகரத்தை திறந்து பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை. ஆட்டை காணோம். 2 ஆடுகள் இருந்த தடம் மட்டும்தான் இருந்தது. 2 ஆடுகளும் அதிகமாக தீயை எரித்ததால் பொசுங்கி சாம்பலாகிவிட்டன. எலும்பு கூட மிஞ்சவில்லை. அதில் இருந்து கற்றுக்கொண்டு, மீண்டும் வெற்றிகரமாக அதே வீடியோவை போட்ட்டோம். ஒவ்வொரு முறையும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு முறை சமையம் செய்யும்போதும் 100 பேருக்கு சாப்பாடு போடுவோம். ஒரு வீடியோ எடுப்பதற்கு ரூபாய் 3 லட்சம் வரை செலவாகிறது. ஆரம்பத்தில் ஊரில் கிடைக்கும் மீன், நண்டு, கோழி ஆகியவற்றை வைத்து செய்தோம். அப்போது அவ்வளவாக செலவாகவில்லை. இப்போது பெரிய அளவில் செய்வதால் செலவும் அதிகமாகிறது. அதற்கேற்ப மக்களின் ஆதரவும் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications