வில்லிவாக்கம்: சோஷியல் மீடியா vs களப்பணி.. வெற்றி யாருக்கு? கார்த்திக் மோகன் சொன்ன கணக்கு
சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில், திமுகவின் கார்த்திக் மோகனை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய கார்த்திக் மோகன், சோஷியல் மீடியா வேறு.. களப்பணி வேறு என்று விளக்கமளித்துள்ளார்.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, "வில்லிவாக்கம் தொகுதி எப்போதும் திமுகவின் கோட்டையாக இருக்கிறது. அடிமட்ட அளவில் மக்களுடன் உள்ள வலுவான தொடர்பு எனக்கு வெற்றியை தரும். சோஷியல் மீடியாக்களில் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டாலும், நான் நேரடியாக மக்களுடன் இருந்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று கூறியிருந்தார்.

நடிகர் விஜய்யின் தாக்கம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு, அத்தகைய பேச்சுகள் சமூக வலைதளங்களோடு சரி, களத்தில் தங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்து பேசிய அவர், "தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செய்த, தமிழகம் போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மாநிலத்தின் பங்கு எக்காரணம் கொண்டும் நீர்த்துப்போகக் கூடாது, என்ற தெளிவான உறுதிமொழியை மத்திய அரசிடம் எதிர்பார்க்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதால், நாங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் என்று பாஜகவின் குற்றச்சாட்டை வைக்கிறது. இதை கொஞ்சம் கூட ஏற்க முடியாது.
ஏனெனில், உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மத்திய அரசு இப்போது கொண்டு வரும் திட்டங்கள், ஏற்கனவே திமுக அரசால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டவை" என்று கூறியிருக்கிறார்.
தனது பிரச்சாரம் குறித்து பேசிய கார்த்திக் மோகன், "திமுக அரசின் சாதனைகளே எனது பிரசாரத்தின் பலம். பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்ட முக்கியத் திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசு, மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது" என்ற கூறியுள்ளார்.
தவெக வில்லிவாக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கார்த்திக் மோகன் தனது வெற்றி குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.














Click it and Unblock the Notifications