எடப்பாடியில் இரவோடு இரவாக விஜய்யின் தவெக அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்! பரபரப்பு
சேலம்: எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே நேற்றைய தினம் எடப்பாடி தவெக நிர்வாகிகள் கூட்டம் நடந்த நிலையில், அதில் விஜய் கட்சி நிர்வாகிகளும் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்காலம்!
தமிழ்நாடு தேர்தல் களத்தில் இந்த முறை விஜய்யின் தவெக முதல்முறையாக போட்டியிடுகிறது. இளைஞர்கள் ஆதரவு இருப்பதால் இந்த முறை ஒரு கை பார்த்துவிடாலம் என்ற நம்பிக்கையோடு தவெக களமிறங்குகிறது. முதலில் தவெக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முயன்ற நிலையில், பெரியளவில் எந்தவொரு கட்சியும் வராததால் தனித்து போட்டியிட்டது.

தவெக வேட்பாளர்
இருப்பினும், தேர்தல் யுத்தம் தொடங்கும் முன்பே எடப்பாடி தொகுதியில் தவெக போட்டி முடிவுக்கு வந்தது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான எடப்பாடியில் ஆரம்பமே பெரும் பின்னடைவாக அமைந்தது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் அருண் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பெரும் எதிர்பார்ப்புடன் அவர் தாக்கல் செய்த வேட்புமனு, சில காரணங்களால் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.
வழக்கமாக இது போன்ற சமயங்களில் கைகொடுக்கவே மாற்று வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்வார். அருண்குமார் மனைவி தான் மாற்று வேட்பாளராக இருந்த நிலையில், அவரது மனுவும் தள்ளுபடி ஆனது. அருண்குமார் வேட்புமனு பரிசீலனையின்போது மாயமாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பே எடப்பாடி களத்திலிருந்து தவெக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பகீர் குற்றச்சாட்டு
இந்த மனு நிராகரிப்புக்குப் பின்னால் அரசியல் பிரஷர் இருப்பதாக ஒரு பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது. அதிமுகவின் கோட்டையான எடப்பாடியில் விஜய் கட்சி வாக்குகளைப் பிரிப்பதைத் தவிர்க்கவே, தவெக வேட்பாளரை மிரட்டி மனுவைத் திரும்பப் பெற வைத்ததாகவோ அல்லது குளறுபடி செய்ய வைத்ததாகவோ பேச்சு பலமாக அடிபடுகிறது. இந்த விவகாரம் குறித்து தவெக-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா கூட கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதை மிக பெரிய நம்பிக்கை துரோகம் என்றும் தவெக வேட்பாளர் முதுகில் குத்திவிட்டார் என்றும் தனது ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார்.
அடுத்து என்ன
எடப்பாடியில் தவெக வேட்பாளர் இல்லாத நிலையில், வேறு ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவு அளிக்கலாம் என சொல்லப்பட்டது. இது தொடர்பாக சில சுயேச்சைகளிடம் பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக தெரிகிறது. இருப்பினும், அதில் சுமுகமான உடன்பாடு எதுவும் ஏற்படவில்லையாம். இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் எடப்பாடியில் தவெக நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினர்.
அதிரடி
அதில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தவெகவினர் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனராம். அதற்கு பதிலாக நோட்டா (NOTA) சின்னத்திற்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர். எனவே, எடப்பாடி தொகுதியில் நோட்டோ எவ்வளவு வாக்குகளை பெறுகிறது என்பது தவெகவின் பலத்தை ஓரளவுக்கு காட்டுவதாக இருக்கும்.
அதிமுகவை நேரடியாக பெயரை கூட குறிப்பிடாமல் மற்றும் பலர் என விஜய் சொல்லி வரும் நிலையில், சொந்தக் கட்சி நிர்வாகிகளே இப்படி செயல்படுவத அவருக்கு விழுந்த முதல் அடியாகப் பார்க்கப்படுகிறது. ஆட்டத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு தொகுதியில் 'அவுட்' ஆகியிருக்கும் தவெக, மற்ற தொகுதிகளில் என்ன செய்ய போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!














Click it and Unblock the Notifications