"பயங்கரவாத இயக்கம்" பாஜக பேரணியை எதிர்க்காமல் ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்ப்பது ஏன்? திருமாவளவன் விளக்கம்
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும், மக்களிடையே மதவெறியை ஏற்படுத்தும் என்பதால் ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்ப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் விலையில்லாமல் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 32 பக்கங்கள் கொண்ட மனுஸ்மிருதி புத்தகத்தில், ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் கொள்கை அறிக்கை தான் மனுஸ்மிருதி என்ற அடிப்படையில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னுரை எழுதியுள்ளார்.
அந்த முன்னுரையுடன் சூத்திரர்கள், பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதையும் மனுஸ்மிருதி புத்தகத்தில் விசிக சார்பாக தொகுக்கப்பட்டுள்ளது. இதனை மக்களுக்கு வழங்கும் பணிகள் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மனுஸ்மிருதி புத்தகம்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மனுஸ்மிருதி புத்தகங்கள் மக்களுக்கு விலையின்றி வழங்கும் பணிகள் நடைபெறும். இந்து சமூகத்தின் நலன்களுக்காக, பெண்களின் விழிப்புணர்வுக்காக விசிக சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கை
சமூக கட்டமைப்பின் அடிப்படை கோட்பாடாக மனுஸ்மிருதி இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்து சமூகம் இயங்கி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் வந்தாலும் கூட, சமூக மற்றும் பண்பாட்டு தளத்தில் மனுஸ்மிருதி ஆளுமை செலுத்துகிறது. குடும்ப நிகழ்வுகள் அனைத்து அதனடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் வகையில் விநியோகம் செய்கிறோம்.

ஏன் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்?
அதற்கு முக்கிய காரணம் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவதுதான். மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதையே, தனது அரசியல் கொள்கையாக எடுத்து ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தான் பாஜக. பாஜக என்ற அரசியல் இயக்கம் இருக்கும் போது, தமிழ்நாட்டில் ஏன் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த வேண்டும்? எதற்காக தனியே ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த வேண்டும்.

நீதிமன்றத்தின் கேள்விகள்
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆர்எஸ்எஸ் பின்வாங்கி ஓட்டம் பிடித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்துகொள்பவர்கள் ஆதார் அட்டை, ஆர்எஸ்எஸ் உறுப்பினர் அட்டை, அலுவலகம் இல்லை, அடையாளம் இல்லை, பயங்கரவாத அமைப்பாக நீதிமன்றமே மக்களுக்கு அம்பலப்படுத்திவிட்டது. அவர்களால் நீதிமன்றம் கூறிய எந்த ஆதாரங்களையும் கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

சமூகநீதி மண்
தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வட இந்திய மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் கொட்டமடிப்பதை போல், தமிழ்நாட்டில் கொட்டமடிக்க விரும்புகிறார்கள். இது சமூக நீதிக்கான மண் என்பதை ஆர்எஸ்எஸ் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவை எதிர்த்ததில்லை
பாஜக அரசியல் ரீதியாக பேரணியை நடத்துவதையே நாங்கள் இதுவரை எதிர்த்ததில்லை. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என்ற அச்சத்தில் நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

பயங்கரவாத இயக்கம்
தொடர்ந்து புத்தகம் வெளியிடுவதால் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் ஆர்எஸ்எஸ்-க்கு இந்தியாவிலேயே இடமில்லை. அதுவொரு பயங்கரவாத அமைப்பு. படேல் தடை செய்திருக்கிறார். காந்தி கொலை செய்ததும், காமராஜரை கொலை செய்ய முயன்றதும் ஆர்எஸ்எஸ் அமைப்புதான். பாஜகவுக்கு என்று அரசியல் கோட்பாடு இல்லை. ஆர்எஸ்எஸ் கோட்பாடு தான் பாஜகவின் கோட்பாடு என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications