சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நூறு ஸ்டாலின் தேவை.. 35 ஆண்டுக்கு முன் அடையாளம் கண்ட அன்பழகன்! கருணாநிதியின் காவிய நட்பு - முரசொலி

Google Oneindia Tamil News

சென்னை: மு.க.ஸ்டாலின் வளர்வதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வேண்டும் என்றும், திறமையால் தகுதி பெற்று, உழைப்பால் முன்னேறியவர் மு.க.ஸ்டாலின் எனவும் பேசியவர் பேராசிரியர் அன்பழகன் என முரசொலி தலையங்கம் வெளியிட்டு உள்ளது.

"எனது கொள்கையைக் காக்கும் கழகமே எனக்கு எப்போதும் முக்கியம்" என்று வாழ்ந்த பேராசிரியப் பெருந்தகை அன்பழகனாரின் பிறந்தநாள் இன்று. அவரது நூற்றாண்டு நிறைவு நாள் இன்று!

வாழ்ந்தால் மக்களுக்காக வாழ்வேன், தமிழினத்துக்காக வாழ்வேன், தாழ்ந்து போன தமிழினம் தலைநிமிர வாழ்வேன், உரிமை இழந்த இனம் உரிமை பெற வாழ்வேன் - என்று சொன்னவர் மட்டுமல்ல, அப்படியே வாழ்ந்தவர்தான் இனமானப் பேராசிரியர் அவர்கள்!

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்! நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு! பெருமை சேர்த்த முதல்வர் ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்! நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு! பெருமை சேர்த்த முதல்வர் ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகன்

பேராசிரியர் அன்பழகன்

"என்னுடைய வாழ்நாள், அகில இந்தியாவில் தமிழன் எவருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை நிலைநாட்டுவதற்குப் பயன்பட்டால் போதும்" என்பதை தனது வாழ்க்கையில் இலக்காகவும் முழுமுதல் கொள்கையாகவும் கொண்டு வாழ்ந்தவர் அவர். அரசியலில், கட்சியியலில், ஆட்சியியலில் மிக உயர்ந்த பதவிகளை அவர் பெற்றதுண்டு. ஆனாலும், "நான் அரசியல்வாதி அல்ல, கழகக் கலம் கடலில் செல்ல ஆற்றல் தரும் துடுப்பில் ஒன்று நான்" என்று தன்னடக்கத்துடன் சொல்லிக் கொண்டவர் அவர். "நான் எதையும் விரும்பியது இல்லை, ஆனால் எல்லாம் எனக்கு வாய்த்திருக்கிறது" என்பதை தத்துவம் போலச் சொன்னவர் அவர்.

மனிதனாக உணர்ந்தது பெரியாரால்

மனிதனாக உணர்ந்தது பெரியாரால்

என் தாய்மொழி தமிழ். என் இனம் தமிழினம். நான் போற்றுகின்ற இலக்கியம் சங்க இலக்கியம். என் வழிகாட்டி திருவள்ளுவர். நான் மனிதனாக உணர்ந்தது பெரியாரால். அறிவோடு செயல்பட்டது அண்ணாவால். இந்த உணர்வில் பிறக்கும் எண்ணங்களினால்தான் எனக்கு மனநிறைவு என வாழ்ந்தார். அந்த எண்ணம் - பேச்சு - எழுத்து ஆகிய யாவும் தமிழாக வேண்டும் என்றே செயல்பட்டார்.

பெரியார், அண்ணாவிடம் பயின்றவர்

பெரியார், அண்ணாவிடம் பயின்றவர்

அவரைத் தொடக்கத்தில் பயிற்றுவித்தவர்கள் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும். சுயமரியாதை உணர்வுகளையும், தமிழ்ப் பற்றையும் உருவாக்கி அதனை எந்த வகையில் தமிழ்ச்சமுதாயத்தில் விதைப்பது என்பதை அவரை பயிற்றுவித்தவர்கள் பெரியாரும், பேரறிஞரும். அதற்கான இயக்கத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதை தமிழினத் தலைவருக்கு துணையாக இருந்து செயல்படுத்திக் காட்டினார் பேராசிரியர் அவர்கள்.

அண்ணா, கருணாநிதி பற்றி அன்பழகன்

அண்ணா, கருணாநிதி பற்றி அன்பழகன்

"திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை நோக்கினால், அறிஞர் அண்ணா அவர்கள் மட்டும் நாட்டுக்காக ஓர் அரசியல் இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால் தமிழ்மொழி உரிமை உணர்வு வளர்ந்திருக்காது. தமிழ் மறுமலர்ச்சி பெற்றிருக்காது. இன்னும் சொன்னால் ஒரு கலைஞர் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்" என்று சொன்னார் பேராசிரியர்.

காவிய நட்பு

காவிய நட்பு

அந்தளவுக்கு கலைஞர் மீது நம்பிக்கை வைத்திருந்தார் பேராசிரியர் அவர்கள். அரசியலில் இத்தகைய நட்பைக் காண்தல் அரிது. அதுவும் சமகால - சமவயது மனிதர்களிடம் அரிது. ஆனால் கலைஞர் - பேராசிரியர் நட்பு என்பது காவிய நட்பாக இருந்தது. ஒருவரை ஒருவர் புரிந்தும் அறிந்தும் தெளிந்தும் உண்மையாக இருந்தார்கள்.

நூறு மு.க.ஸ்டாலின் வேண்டும்

நூறு மு.க.ஸ்டாலின் வேண்டும்

இவை அனைத்துக்கும் மேலாக தங்களுக்குப் பின்னால் இயக்கத்தை வழிநடத்தும் ஆற்றல் யாருக்கு இருக்கிறது என்பதை மிக நீண்ட காலத்துக்கு முன்பே அடையாளம் கண்டு, "மு.க.ஸ்டாலின் வளர்வதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வேண்டும்" என்று 1987 ஆம் ஆண்டே சொன்னவர் பேராசிரியர் அவர்களே!

ஸ்டாலினை பாராட்டிய அன்பழகன்

ஸ்டாலினை பாராட்டிய அன்பழகன்

"திறமையால் தகுதி பெற்று, உழைப்பால் முன்னேறியவர் மு.க.ஸ்டாலின்'' என்று மேடைகள்தோறும் பேசியவர் பேராசிரியர் அவர்கள். தன் மனதுக்குப் பட்டதை யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சொல்லும் மனிதராக அவர் இருந்ததால்தான் இப்படிச் சொல்ல முடிந்தது. "தலைவர் கலைஞருக்கு அண்ணனாக விளங்கிய பேராசிரியப் பெருந்தகை அவர்கள் எனக்கு பெரியப்பாவாக இருந்து பொதுவாழ்வில் தொடர்ந்து வழிகாட்டினார்கள்.

பொறுமையான தலைவர்

பொறுமையான தலைவர்

முனைப்பான உழைப்பால் எதையும் அடைய முடியும் என்கிற உறுதியையும், அதற்குரிய காலம் வரை காத்திருக்க வேண்டும் என்ற பண்பையும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லிய சொல் என்பது கல்வெட்டுப் போன்றது. பொறுமையும், அடக்கமும் கொண்டவராகவும், அதே நேரத்தில் தெளிவும் துணிச்சலும் கொண்டவராக ஒருவர் திகழ வேண்டும் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார் பேராசிரியர் அவர்கள்.

இனமான பேராசிரியர்

இனமான பேராசிரியர்

எந்த மேடைகளாக இருந்தாலும் இனமானம் - தமிழ்மானம் -தன்மானம் குறித்தே பேராசிரியர் பேசுவார்கள். அத்தகைய இனமானம் - தமிழ்மானம் - தன்மானம் காக்கும் அரசாக மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இனமானம் - தமிழ்மானம் - தன்மானம் காத்தலின் அடையாளமாக பேராசிரியரின் சிலையை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். அந்த வளாகத்துக்கு 'பேராசிரியர் அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டினார்கள்.

அன்பழகன் பெயரில் திட்டங்கள்

அன்பழகன் பெயரில் திட்டங்கள்

பேராசிரியரின் நூல்களை நாட்டுடமை ஆக்கினார்கள். தமிழகப் பள்ளிகள் சீரமைப்புத் திட்டத்துக்கு 'பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கல்வித்துறை அலுவலக வளாகங்களுக்கு பேராசிரியர் பெயர் சூட்டப்பட உள்ளது.

தமிழன் எவருக்கும் தாழ்ந்தவனல்ல

தமிழன் எவருக்கும் தாழ்ந்தவனல்ல

இவை அனைத்துமே பேராசிரியரைப் போற்றுவதற்காக மட்டுமல்ல, அவரது கொள்கைகளைப் போற்றுவதற்காக! அவர் இருந்து ஆற்ற வேண்டிய பணிகளை நாம் ஆற்ற வேண்டும் என்பதற்காக! அவர் பேச வேண்டியதை நாம் பேச வேண்டும் என்பதற்காக! "என்னுடைய வாழ்நாள், அகில இந்தியாவில் தமிழன் எவருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை நிலைநாட்டுவதற்குப் பயன்பட்டால் போதும்" என்ற பேராசிரியரின் பெரும் பாதையில் நாம் அனைவரும் பயணிப்போம்!

English summary
Murasoli editorial has been published that Prof. Anbazhagan who said that there should be a hundred more Stalin. M.K.Stalin was qualified by talent and progressed by hard work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X