படாரென திரும்பிய ‘டாப்’ லீடர்.. மீண்டும் விசிட்.. 2 சீட் டார்கெட்! பெரிய தலைகள் இறங்குவது உறுதியா?!
சென்னை : பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார். கோவைக்கு வருகை தரும் நட்டா, 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நீலகிரியில் அமைச்சர் ஒருவரும், கோவையில் முன்னணி தலைவர் ஒருவரும் பாஜக சார்பில் இந்த முறை களமிறங்கப்போவதாகச் சொல்லப்படும் நிலையில், நட்டா, இந்த இரு தொகுதிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பது அரசியல் நோக்கர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
கோவையில் நடைபெற உள்ள பாஜகவின் அமைப்பு ரீதியான நிகழ்ச்சிகளில் ஜேபி நட்டா பங்கேற்க உள்ளார். அப்போது, தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நிலையில், 3 மாதங்களில் மீண்டும் தமிழகம் வந்துள்ளார் நட்டா. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து தமிழகம் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

பாஜக வோட் பேங்க்
தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாகக் காலூன்ற வைக்க வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது. பாஜக தலைமையின் விருப்பப்படி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்றும் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க பாஜகவுக்கு மட்டும் தான் தைரியம் உள்ளது எனவும் பல்வேறு மேடைகளில் பேசி வருகிறார் அண்ணாமலை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை பாஜக ஏற்படுத்தும் என்றும் கூறி வருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கியை பெருமளவுக்கு உயர்த்துவதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது.

பாஜக தீவிரம்
வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. மேலும், மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் எம்.பி சீட்களை கைப்பற்ற திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கிவிட்டது பாஜக. கடந்த சில மாதங்களாகவே பாஜகவினர் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் பணியாற்றி வருகின்றனர்.

மோடி அமித்ஷா அமைச்சர்கள்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட நூறு முறை மத்திய அமைச்சர்கள் வந்து சென்றுள்ளனர். பிரதமர் மோடி சமீபத்தில் கூட திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து சென்றார்.

நட்டா தமிழக வருகை
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதற்காக ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். வரும் டிசம்பர் 27-ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வர இருக்கிறார் நட்டா. அங்கு அவருக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். கோவையில் இருந்து கார் மூலம் காரமடை சென்று, அங்கு நடைபெறும், பாஜகவின் நீலகிரி, கோவை நாடாளுமன்ற தொகுதிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.

தேர்தல் வியூகங்கள்
இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜகவினருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தொகுதிகளில் பூத் கமிட்டியின் நிலை, மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறுவது உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோவை வர இருப்பதால் கட்சியினரிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் 2 நாள் விசிட்
டிசம்பர் 27ஆம் தேதி கோவை வரும் ஜேபி நட்டா, 2 நாள் தமிழகத்தில் தங்கி கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதற்கு முன்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 2 நாள் பயணமாக நட்டா, தமிழகம் வந்திருந்தார். மதுரை விமான நிலையம் வந்த நட்டா, அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்குச் சென்று பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்திலும், பின்னர் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். அடுத்த நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பாஜக மாநில நிர்வாகிகளுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கிவிட்டுத் திரும்பினார்.

2 தொகுதிகள் குறி
இந்நிலையில் அடுத்த 3 மாதங்களில் மீண்டும் தமிழ்நாட்டுக்கு விசிட் அடிக்கிறார் நட்டா. கடந்த முறை தமிழக வருகையின்போது சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளை குறிவைத்திருந்த நட்டா, இந்த முறை நீலகிரி, கோவை தொகுதிகளை டார்கெட் செய்துள்ளாராம். நீலகிரியில் அமைச்சர் ஒருவரும், கோவையில் முன்னணி தலைவர் ஒருவரும் பாஜக சார்பில் இந்த முறை களமிறங்கப்போவதாகச் சொல்லப்படும் நிலையில், நட்டா, இந்த இரு தொகுதிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பது அரசியல் நோக்கர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

பொறுப்பாளர்கள் நியமனம்
ஜே.பி.நட்டா வருகை மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பாளர்களாக சி.பி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பொறுப்பாளர்களாக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கனக சபாபதி, எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 15 பேரை நியமனம் செய்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு
2024 தேர்தலுக்கு பாஜக - அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி சூழ்ந்துள்ளது. ஒருபக்கம் அண்ணாமலை, தனித்துப் போட்டியிடுவோம் என நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினரும், பாஜக கூட்டணியை விரும்பாமல் பேசி வருகின்றனர். இதனால், நட்டாவின் தமிழக வருகைக்குப் பிறகு இந்தப் போக்கில் ஏதேனும் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications