ஓபிஎஸ் எடுத்த ‘சரவெடி’ அஸ்திரம்.. உக்கிரமடைந்த வார்த்தைப் போர்.. “தனிக்கட்சி?” ஆஹா.. அடுத்து என்ன?
சென்னை : ஓபிஎஸ் அணியின் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்பட்ட அதிரடி கருத்துகள் மூலம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே இனி சமரச முயற்சிகளுக்கு பலன் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.
சென்னையில் ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவருமே எடப்பாடி பழனிசாமியை விளாசினர்.
உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு விசாரணை தாமதமாவதால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பாஜகவின் சமரச முயற்சிகள் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த யூகங்களை உடைத்துள்ளது ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக் கூட்டம்.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எந்த நிலையிலும் அந்த மகாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இரு பதவிகள்
அதிமுகவில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஜூன் மாதம் தீவிரமடைந்த இந்தப் பூசல் காரணமாக ஈபிஎஸ் அணியினர் பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அதேசமயம், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். இருப்பினும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று அவரது ஆதரவாளர்களும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இணைப்பு சாத்தியமாகவில்லை
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று கூறி வந்தாலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓபிஎஸ்ஸுக்கு சம அதிகாரம் கொடுப்பதை ஏற்க மறுத்தார். பாஜக தலைமை சில சமரச முயற்சிகளை மேற்கொண்டாலும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்புமே பிடிகொடுக்கவில்லை. ஓபிஎஸ் முன்வைக்கும் சம அதிகாரப் பகிர்வை எடப்பாடி துளியும் ஏற்கவில்லை. அதிமுக ஒற்றுமையாக இருப்பது தேர்தலின்போது அவசியம் என்பதை உணர்ந்துள்ளதால் பாஜக தீவிரமாக முயற்சி எடுத்துப் பார்த்தும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு சாத்தியமாகவில்லை.

போட்டா போட்டி
அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அக்கட்சி எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதாகவே கருதப்படுகிறது. காரணம், கடைசியாக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பே கிடைத்தது. அதிமுக தலைமை அலுவலகமும் ஈபிஎஸ் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் விடாமுயற்சியுடன் போட்டி போட்டு வருகிறார். அந்தவகையில் ஓபிஎஸ் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளையும், அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளையும் தனியாக நியமித்துள்ளார்.

மா.செக்கள் ஆலோசனை
மேலும், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சென்னை வேப்பேரி ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 88 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

அவ்ளோதான்
எனினும், உச்ச நீதிமன்றத்தில் கடந்த விசாரணை அமர்வின்போது, இரு தரப்புமே கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டதால், பாஜக தலைமை, ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே சமரச தீர்வை எட்டவைக்கும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எழுந்த கருத்துகள், சமரசம் ஏற்படுவதற்கு மீண்டும் வழி இல்லை என்பதையே உணர்த்தியுள்ளன.

சமரசம் - வாய்ப்பே இல்லை
அதிமுகவின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனே, எடப்பாடி பழனிசாமியை ‘தற்குறி' என்ற வார்த்தையால் சாடினார். இடைச்செருகலான எடப்பாடி பழனிசாமியை அகற்றி கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினார். அதே நூலைப் பிடித்துத்தான் மற்றவர்களும் பேசினார்கள். ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து நிர்வாகிகளும், சமரசத்திற்கான எந்த மூவையும் நேற்றைய கூட்டத்தில் நகர்த்தவில்லை. அதிமுகவை கைப்பற்றுவதே தீர்வு என்ற நோக்கிலேயே பேச்சுகள் அமைந்திருந்தன.

தனிக்கட்சி - சீறிய ஓபிஎஸ்
எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம். பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. கட்சியை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. எங்கள் உயிரே போனாலும் தலைமையை தேர்வு செய்யும் தொண்டர்கள் உரிமையை போக விட மாட்டோம். தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குவேன் என எடப்பாடி சொல்லிப் பார்க்கட்டும், எங்கே போவார் என்றே தெரியாது எனச் சீறினார் ஓபிஎஸ். மனோஜ் பாண்டியன் பேசியபோது, அதிமுகவை பிடித்திருக்கும் நோய் எடப்பாடி, அதற்கான மருந்து தான் ஓபிஎஸ் என்றார்.

கடுமையான வார்த்தைகள்
விமானத்தைக் கூட்டிப் பெருக்குகிறவன், பைலட் இருக்கையில் அமர விரும்பிய கதை என்றும், கூவத்தூரில் குப்பை பொறுக்கியவர் என்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தனர். மேலும், கூவத்தூரில் நடந்தது பற்றி தனி விசாரணை கமிஷனே அமைத்து, தவறு செய்தவர்களை உள்ளே தள்ள வேண்டும் என்று பேசினார் மனோஜ் பாண்டியன். எடப்பாடியோடு இணைந்து செல்ல தயாராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரே இப்படி கடுமை காட்டினார்கள் என்றால், டிசம்பர் 27ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்தவிருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்னும் கூடுதல் கடுமையான தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்.

அடுத்தகட்டம் என்ன?
சமரசத்திற்கு இடமில்லை என்பது தெளிவாகத் தெரிவதால், அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன என்ற மிகப்பெரிய கேள்வி இன்னும் பூதாகரமாகி இருக்கிறது. ஓபிஎஸ் அணியில் எடப்பாடி பழனிசாமிக்கோ, எடப்பாடி பழனிசாமி அணியில் ஓபிஎஸ்ஸுக்கோ எந்த வாய்ப்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டு இருப்பதால், அதிமுக, ஓபிஎஸ் அணியின் கீழ் வருமா? எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்குமா? இரட்டை இலை யாருக்கு? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஜனவரி 4
வரும் ஜனவரி 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்கு, அதிமுக பொதுக்குழு பற்றியது மட்டும் தான். தேர்தல் ஆணையமே, கட்சியின் அதிகாரம், பொதுக்குழு விவகாரம் என அனைத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் செலுத்தக்கூடியதாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்னரே, தங்களுக்கு ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் உண்மையான நபர்கள் தானா? என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யக்கூடும்.

இழுத்துக்கொண்டே போகும்
தேர்தல் ஆணையத்தில் 2016ஆம் ஆண்டில் இருந்து இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலை வைத்து இதனைச் சரிபார்க்கலாம். அதேசமயம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே தொடர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தையும் தாக்கல் செய்யலாம். பொதுக்குழு உறுப்பினர்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்தைச் சேரும். எனவே, இது இழுத்துக்கொண்டே போகுமே தவிர தீர்வு உடனடியாகக் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா - ஜானகி
ஜெயலலிதா - ஜானகி அணிகள் பிளவின்போது ஓராண்டுக்கும் மேல் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல், தேர்தல் வந்ததும், ஆவணங்களை அலசிப்பார்த்து முடிவெடுக்க நீண்ட காலம் ஆகும் எனக் கூறி இரட்டை இலையை முடக்கியது. பின்னர் தேர்தலை இரு அணிகளும் வெவ்வேறு சின்னங்களை முன்வைத்து சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தலுக்குப் பிறகு, ஜானகி விட்டுக்கொடுத்து, வெளியேறியதால் தான் இரட்டை இலை சின்னம் ஜெயலலிதாவுக்கு மீண்டும் கிடைத்தது. தேர்தல் ஆணையத்தின் முடிவால் அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்சி விதி
பின்னர், ஜெயலலிதா - திருநாவுக்கரசர் இடையே பிளவு ஏற்பட்டபோது இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவைக் கூட்டினர். அதிகமான எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆதரவு திருநாவுக்கரசருக்கு இருந்தபோதும், நீதிமன்றத்தில், அதிமுக உட்கட்சி விதிப்படி, அடிப்படைத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே பொதுச் செயலாளர் எனத் தீர்மானிக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அடுத்து வந்த தேர்தலில், அதிகமான தொகுதிகளை ஜெயலலிதா கைப்பற்றியதால், திருநாவுக்கரசருக்கு பின்னடைவு ஏற்பட்டது. கட்சியையும் முழுமையாக தனது வசமாக்கினார் ஜெயலலிதா.

டோட்டல் விளாசல்
பழைய நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால், அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல்களே பிரச்சனைகளை முடித்து வைத்து தலைமையைத் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் யார் கட்டுப்பாட்டில் அதிமுக என்பதைத் தீர்மானிக்க 2024 வரை காத்திருக்க வேண்டும். அதுவரை இரு தரப்பினருமே, தாங்கள் தான் தலைமை எனத் தொடர்ந்து பேசலாம். இரு தரப்புக்கும் இடையே சமரசம் இல்லை என்பதே தற்போதைய சூழலில் உறுதியாகி இருக்கிறது. குறிப்பாக நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமியை டோட்டலாக விளாசி இருப்பது, சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை எனக் காட்டுகிறது.

பாஜக ஆதரவு?
தங்கள் அணிக்கு பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவே ஓபிஎஸ் அணியின் இந்தச் செயல்பாடுகள் இருக்கக்கூடும் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக ஓபிஎஸ் எதிர்க்கிறார் என்றால், பாஜகவின் துணை அவருக்கு இருப்பது உறுதிதான் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஓபிஎஸ் தரப்பு களமிறங்கி இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும், குஜராத்தில் ஓபிஎஸ்ஸுக்கு பிரதமர் மோடி அளித்த முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுவதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications