ஜெ., என்ன சொன்னாங்க தெரியுமா? மரணத்துக்கு 8 நாளுக்கு முன் நடந்தது என்ன? உருகிய மாபா பாண்டியராஜன்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இறந்த ஜெயலலிதா தான் இறப்பதற்கு 8 நாட்களுக்கு முன்பு சொன்ன தகவல் பற்றி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறி உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். இவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 2016ல் மரணமடைந்தார்.
குஜராத் தேர்தல்:எனக்கு A ஃபார் ஆதிவாசிதான்-பழங்குடி ஓட்டுகளை டார்கெட் செய்து பிரதமர் மோடி பிரசாரம்!

ஜெயலலிதா மரண அறிக்கை
ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அதோடு அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம் தெரியாமல் அடிமட்ட தொண்டர்கள் வருத்தத்தின் உச்சத்துக்கு சென்றனர். இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையில் விபரம்
அறிக்கையில் பல்வேறு பரிந்துகைள் செய்யப்பட்டு இருந்தன. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படவில்லை. வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்த தேதியில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலா, டாக்டர் கேஎஸ் சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

மாபா பாண்டியராஜன் பேச்சு
இந்நிலையில் தான் ஜெயலலிதா இறப்பதற்கு 8 நாட்களுக்கு முன்பு அவர் என்ன கூறினார் என்பது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அதிமுகவின் 51வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்தது. இதில் மாபா பாண்டியராஜன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

8 நாட்களுக்கு முன்பு
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது மறைவுக்கு 8 நாட்களுக்கு முன்பு பூங்குன்றன்(ஜெயலலிதா உதவியாளர்) என்னிடம் பேசினார். ஆர்கே நகரில் உள்ள சவுந்தரபாண்டிய நாடார் பள்ளிக்கு சென்று பிள்ளைகளுக்கு சைக்கிள்கள் வழங்க கூறினார் என தெரிவித்தார். ஜெயலலிதா கூறிய உணர்வுடன் பள்ளிக்கு வந்து சைக்கிள் கொடுத்து சென்றேன்.

4 நாளில் மரணம்
சைக்கிள் கொடுத்துவிட்டு சென்ற 4 நாளில் ஜெயலலிதா தெய்வமாக நம்மை காக்க சென்றுவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொகுதியில் ஜெயலலிதாவின் ஆன்மா நின்று நிலைபெற்று இருக்குமேயானால் அது ஆர்கே நகர் எனும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி தான்'' என மாபா பாண்டியராஜன் கூறினார்.