முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. கண்கலங்கி கையில் முத்தம் தந்த வீராங்கனை பிரியாவின் தந்தை..உருக்கம்
சென்னை: சென்னையில் அரசு டாக்டர்கள் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த வேளையில் பிரியாவின் தந்தை, முதல்வர் ஸ்டாலின் கையை பிடித்து முத்தம் கொடுத்து உருகிய சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (வயது 17). தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் கால்பந்து வீராங்கணையாக இருந்தார்.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது.

மாணவி மரணம்
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து இறுக்கமாக கட்டு போடப்பட்டதால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு வலி ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கால் அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரியா உயிரிழந்தார்.

முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
பிரியாவின் இறப்புக்கு தவறான சிகிச்சை முறையே காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதோடு பிரியாவுக்கு சிகிச்சை வழங்கி இறுக்கமாக கட்டு போட்ட 2 டாக்டர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று காலை சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சேகர்பாபு உடனிருந்தனர்.

நிவாரண உதவி, ஆணை வழங்கல்
பிரியாவின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, பிரியாவின் அண்ணனுக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் பிரியா பற்றிய விபரங்களை குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

உருகிய பிரியாவின் தந்தை
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியபோது பிரியாவின் தந்தை அவரது கையை பிடித்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கினார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் அவரை தேற்றி ஆறுதல் தெரிவித்தார். மகளை இழந்த துயரத்தில் இருந்த பிரியாவின் தந்தை முதல்வர் ஸ்டாலின் கையில் முத்தம் தந்தார். இது அனைவரையும் கண்கலங்க செய்தது. மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரியாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தார்.

நினைத்து பார்க்கவில்லை
இதுபற்றி பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறுகையில், ‛எனது குடும்பத்துக்கு தமிழக அரசு உதவிகள் செய்துள்ளது. முதல்வர் நேரில் வந்து ஆறுதல் கூறுவார் என நான் நினைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இருப்பினும் எனது மகள் தான் இப்போது இல்லை. எனது வீட்டை அமைச்சர் மா சுப்பிரமணியன், சேகர்பாபு வந்து பார்வையிட்டனர். மழை நீரால் ஒழுகியது. இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வீடு பெற்று தந்துள்ளனர். தமிழக அரசுக்கும், முதல்வருக்கு நன்றி'' எனக்கூறி கண்கலங்கினார்.












Click it and Unblock the Notifications