சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்கிறது அண்ணாமலை தலைமையிலான பாஜகவில்..? திசைக்கொரு கோஷ்டி.. தினம் தினம் ஒரு சர்ச்சை!

Google Oneindia Tamil News

சென்னை: 'ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே ரேஷன் கார்டு' இவை எல்லாம் பாஜகவின் தேசிய கொள்கை. அப்படிப்பட்ட தேசிய கட்சியில் உள்ள மாநில நிர்வாகிகள் மட்டும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தினம் தினம் ஒரு பூகம்பம்... தினம் தினம் ஒரு ஆடியோ... இப்படி பதற்ற நிலையில் இருக்கிறது தமிழ்நாடு பாஜக.

பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவர் திருச்சி சூர்யா, தன் சக கட்சியைச் சார்ந்த சிறுபான்மை அணித் தலைவர் டெய்சி சரணை அதிகாலையில் தொலைப்பேசியில் அழைத்து தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார். அந்த ஆடியோ லீக் ஆகிறது. அதேவேகத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

பிரச்சினைக்கு முக்கிய காரணமான சூர்யாவை விட்டுவிட்டு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை,'கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாலும் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்' என அறிக்கை வெளியிட்டது எரியும் தீயில் எண்ணையை ஊற்றிவிட்டது.

கட்சிக்குக் களங்கம் எது? ஒரு பெண் தலைவரை ஆபாசமாகப் பேசுவதா? அல்லது அதைக் கண்டித்து பொதுவெளியில் கருத்திடுவதா? என்ற சந்தேகம் பாமர மக்களுக்கு எழும். ஆனால் அண்ணாமலை அந்த கோணத்தில் யோசிக்கவில்லை. எனவே, திருச்சி சூர்யா பக்கம் அண்ணாமலை இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. திருச்சி பக்கம் திரும்ப வேண்டிய புயல் கோடம்பாக்கம் பக்கம் மையம் கொண்டது ஏன் என பாஜகவிலேயே பலருக்கும் புரியவில்லை.

சில வாரங்கள் முன்னால் திமுகவின் மேடைப்பேச்சாளர் சைதை சாதிக், பெண்களை ஆபாசமாகப் பேசிவிட்டார் என கோபமாக கருத்துக்களை தெரிவித்த குஷ்பு கூட, சூர்யா விவகாரம் குறித்தும், டெய்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்தும், சக பெண்ணாக பெரிய ரியாக்ஷனை கொடுக்கவில்லை. தலைமை எடுத்த நடவடிக்கை சரியானது என ட்வீட் போட்டு அமைதியாகிவிட்டார். 'திமுகவினர் யாரும் பெண்களுக்கு மரியாதை தரவில்லை. ஆகவே வெளியே வந்தேன்' என வாதிட்டவர் இன்று என்ன ஆனார் என ஊடகங்கள் தேடும் அளவுக்கு மௌனமாக இருக்கிறார்.

 புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை புண்படுத்திட்டாங்க..பாஜக சூர்யா சிவா மீது போலீசில் புகார்! அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இரு பாஜக தொண்டர்களின் ஆடியோ

இரு பாஜக தொண்டர்களின் ஆடியோ

சூர்யா ஆடியோ வெளியான அதே வேகத்தில் இரண்டு பாஜக தொண்டர்கள் உரையாடுவதாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், 'அண்ணாமலை கட்சிக்கு வந்த சில மாதங்களில் தலைவராகவிட்டார். ஆனால் எட்டு வருடங்களாகக் கட்சிக்காக உழைத்த எனக்குச் சரியான அங்கீகாரம் இல்லை'என்ற கோபத்தில் காயத்ரி ரகுராம்தான் சூர்யாவின் ஆடியோவை பொதுவெளிக்குக் கொண்டு வந்துவிட்டார் எனப் பதிவாகி உள்ளது. இதே ஆதங்கத்தை ஒரு யூடியூப் சானலுக்கு பேட்டி அளித்த காயத்ரி ரகுராம் பட்டும் படாமல் பேசி இருக்கிறார். அதாவது '2014 ஆம் ஆண்டு, ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை பாஜக தேசிய அளவில் அறிமுகப்படுத்திய போது நட்சத்திரங்களின் தயவு தேவைப்பட்டது. அதற்காகவே நான் அழைக்கப்பட்டேன். ஏறக்குறை 8 ஆண்டுகளாக இக்கட்சிக்காக உழைத்து வருகிறேன்" என்று சொல்கிறார் காயத்ரி. மேலும் ஆன்லைனில் இவரை வசைபாடுவதற்காகவே கட்சிக்காக உள்ள 'வார் ரூமை' அண்ணாமலை தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படித்தான் அண்ணாமலைக்கு 4 ஆயிரம் லைக்ஸ் வருகின்றன என்று போட்டு உடைத்துள்ளார். காயத்ரி ரகுராம் பேச்சிலிருந்து அண்ணாமலைக்கு ரைட் ஹேண்ட் ஆக அமர் பிரகாஷ் ரெட்டி, திருச்சி சூர்யா எல்லாம் ஆன்லைன் யுத்தத்தில் செயல்படுகிறார்கள் என்ற பேச்சு பாஜகவிற்குள் உள்ள ஒரு பிரிவில் எழுந்துள்ளது.

சூர்யா மீது காட்டும் மறைமுக பாசம்

சூர்யா மீது காட்டும் மறைமுக பாசம்

ஆகவேதான், காயத்ரியைக் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்த அண்ணாமலை, சூர்யா செய்த தவறை விசாரிக்கக் குழு அமைத்திருக்கிறார். அதுவரை அவர் கட்சிக் குறித்த கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என விநோதமாக ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறார். இந்த அண்ணாமலைதான் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணை தவறாகப் பேசினால் அவர்கள் அங்கு நடமாடவே முடியாது. அதுதான் யோகி ஸ்டைல் ஆட்சி. அதுபோல ஆட்சி நடத்த வேண்டும்' என்று கூறினார். இன்று அவரது கட்சியின் பெண் தலைவரான டெய்சி, கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அண்ணாமலை யோகி ஸ்டைலில் தண்டனை தராமல் 'யோக' நிலையில் உள்ளார். தமிழக பாஜகவில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து அக்கட்சியில் ஆறு ஆண்டுக்காலம் பணியாற்றிய வழக்கறிஞர் ஐசக், பேசுகையில், "அண்ணாமலை பொறுப்புக்கு வந்த அந்தக் காலகட்டத்தில்தான் கே.டி.ராகவன் வீடியோவில் நேரடியாக ஒரு பெண்ணை தவறான செய்கைக்கு அழைத்த சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் இவர் என்ன நடவடிக்கை எடுத்துவிட்டார்? மவுனமாகத்தானே இருந்தார்" எனக் கேள்வி எழுப்புகிறார்.

வாய் திறக்காத வானதி சீனிவாசன்

வாய் திறக்காத வானதி சீனிவாசன்

மேலும் ஐசக் கூறுகையில், "பாஜக கட்சியில் உள்ளவர்கள் யாரும் அவரது உறவினர்களைக் கட்சிக்குள் கொண்டுவர மாட்டார்கள். ஏனென்றால் ஏகப்பட்ட பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் நிறைந்த கட்சி என்பதை அவர்கள் அறிவார்கள். காலங்காலமாகவே அப்படித்தான். அவர்கள் நம்பும் பழமைவாதம் பெண்களை போதைப் பொருளாகவே பார்க்க கற்றுத் தந்துள்ளது" என்கிறார். இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் தியாகி இமானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சசிகலா புஷ்பா, சக கட்சியினரால் சீண்டலுக்கு உட்படுத்தப்படுவதாக ஒரு வீடியோ வைரலானது. இதற்காக அண்ணாமலை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக நிர்வாகி பால கணபதிக்கு ஒரு விசாரணைக் குழுவில் பொறுப்பு வழங்கியுள்ளார் அண்ணாமலை. கேள்வி எழுப்பினால் மீடியாவை விமர்சிப்பார். இதுவும் யோகி ஸ்டைல் என்பார் என்று அங்கலாய்க்கின்றனர் சில பெண் நிர்வாகிகள்.

 காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம்

கடந்த சில மாதங்களாகவே தமிழக பாஜகவில் இப்படி பல்வேறு சர்ச்சைகள். யாரும் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரியவில்லை. 'சத்திய மூர்த்தி பவன்'தான் கோஷ்டி பூசலுக்குப் பெயர் போனது. ஆனால் இப்போது அந்தப் புயல் 'கமலாலயம்' பக்கம் மையம் கொண்டுள்ளதோ எனச் சந்தேகம் எழச் செய்கிறது. ஏனெனில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த 'காசி தமிழ்ச் சங்கமம்' விழாக் குழுவில் காயத்ரி ரகுராம் இருக்கிறார். ஆனால் அவர் அழைக்கப்படவில்லை. மாறாகச் சர்ச்சையில் தொடர்ந்து தலைகாட்டும் சூர்யா, காசி ரயில் பயணத்தில் அண்ணாமலையுடன் கூலாக செல்ஃபி எடுத்து வெளியிடுகிறார். காசி விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொன். ராதாகிருஷ்ணன், எல். முருகன் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆனால் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரை அப்படியே விழுங்கி விடுகிறார். ஒரு மாநிலத் தலைவரை எளிதாக மோடியால் மறந்துவிட முடியுமா எனச் சந்தேகம் வலுக்கிறது. அவரது கட்சிக்காரர்களே அண்ணாமலைக்கு இது மறைமுகமான எச்சரிக்கை என்றே கூறுகிறார்கள்.

 தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்

தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்

இதே போல் கால்பந்தாட்ட வீராங்கனை வீட்டுக்கு துக்க விசாரிக்க அண்ணாமலை போனபோது மாநில இளைஞரணித் தலைவரான வினோஜ் பி செல்வம் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதனிடையே ஒரு சர்ச்சை பேசப்படுகிறது. டெய்சி விவகாரத்தில், அந்த ஆடியோவை வானதி சீனிவாசனுக்குத்தான் முதலில் அனுப்பியதாக காய்த்ரி ரகுராம் வாக்குமூலம் கொடுக்கிறார். ஆனால் மகளிரணி தேசியத் தலைவியான வானதி சீனிவாசனோ மவுனமாக இருக்கிறார். வானதி சார்பாகக் கோவை மண்டலத்தில் பந்த் அறிவிக்கப்பட்டால் அதற்கு அண்ணாமலை பாஜக பந்த் நடத்தவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கிறார். இதேபோல் இல.கணேசனுக்கு எதிராகச் சமீபத்தில் வதந்திகளைப் பரப்பியது அந்த 'வார் ரூம்'தான் என்கிறார் காயத்ரி. இப்படி பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம். எல். முருகன் ஒரு பக்கம். வானதி சீனிவாசன் வேறு ஒரு பக்கம். குஷ்பு மற்றொரு பக்கம். தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா பக்கம், சி.பி.ராதாகிருஷ்ணன் கோயமுத்தூர் பக்கம், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பக்கம் எனத் திசைக்கு ஒருவராக உடைந்து, பல கோஷ்டிகளாக உருக்குலைந்து போய் நிற்கிறது தமிழக பாஜக.

English summary
Annamalai vs Gayathri Raghuram: One country One language; One ration card is all BJP's national policy. But state executives in such a national party are not the same. An earthquake every day... an audio every day... Tamilnadu BJP is in such a state of tension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X