பிரிவினையை வேரறுக்குமா விளையாட்டு? இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அரசியல்.. எப்போது முடிவு?
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த சோகம் தான் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணமாகவும் இருக்கிறது.
சாதி, மதம், மொழி, இனம் என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து மக்களை ஒருங்கிணைக்க கூடிய சக்தி விளையாட்டிற்கு மட்டுமே உண்டு. தென் ஆப்பிரிக்கா அதிபராக முதல்முறையாக நெல்சன் மண்டேலா பதவியேற்ற போது கருப்பின மக்கள் - வெள்ளை இன மக்களிடையே இருக்கும் இன மற்றும் நிறவெறியை களைய ரக்பி போட்டியை பயன்படுத்திக் கொண்டார்.
ரக்பி உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியதன் மூலம் இனவெறியையும், நிறவெறியையும் மக்கள் மத்தியில் முதல்கட்டமாக தகர்த்தார் என்றே கூறலாம். இதன் மூலம் அனைத்து வேறுபாடுகளையும் களையும் சக்தி விளையாட்டிற்கு உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான சண்டைகள், செஸ் போட்டிகள் மூலமாக நடந்த வரலாறு இருக்கிறது.
5 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை! சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பின் உள்ள மாஸ்டர் மைண்ட்! ஐயோ அவரா

ஏன் பாக். வீரர்களுக்கு தடை?
அதுபோல தான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி, இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இவ்வளவு ஏன் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடவே தடை விதிக்கப்பட்டது.

சாதனை
இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ரொம்பவே சோர்ந்துபோயினர். இதுதான் ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடக்கும் போட்டிகளுக்கு அதிக வியூவர்ஷிப்களுக்கு காரணமாக அமைந்து வருகிறது. இந்த இரு அணிகள் மோதும் போட்டிகளுக்கு, பெரும் வியாபாரமும் சந்தையும் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

விளையாட்டில் அரசியல்
அதுமட்டுமல்லாமல் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக செயல்பட்டு வரும் பிசிசிஐ, இந்தியா - பாகிஸ்தான் தொடரை ஏன் நடத்த முயற்சிக்காமல் இருக்கிறது என்பதும் அறிந்துகொள்ள முடியவில்லை. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசியப் கோப்பை தொடரில் இந்தியா அணி கலந்துகொள்ளாது என்று அறிவித்துள்ளதும், பதிலுக்கு இந்தியாவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பும் ரசிகர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல.

விராட் கோலி ரசிகர்கள்
சமீபத்தில் இங்கிலாந்து போன்ற பொதுவான நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடத்த ஒரு திட்டம் முன் வைக்கப்பட்ட போது கூட, இந்தியா அதை மறுத்து விட்டது. விளையாட்டில் அரசியல் கலக்கப்படும் போது அது எவ்வளவு நல்ல விசயங்களை எல்லாம் கெடுத்துப் போடும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு இந்தியாவிலும், இந்தியாவின் விராட் கோலி, பும்ராவிற்கு பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் சோகம்
உலகின் அனைத்து நாட்டு கிரிக்கெட் மைதானங்களிலும் கொடி நாட்டியுள்ள விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருப்பது எவ்வளவு பெரிய பேரிழப்பு. சர்வதேச கிரிக்கெட் வீரர்களை யார்க்கர்களால் நொறுக்கும் ஷாகின் அப்ரிடி இந்திய மைதானத்தில் விளையாடாமல் இருப்பதன் இழப்பு இந்திய ரசிகனுக்கு நன்றாக தெரியும்.

முயற்சி இல்லை
இதே சென்னை மைதானத்தில் பாகிஸ்தான் போராடி இந்தியாவை வீழ்த்தியதற்கு கைதட்டி பாராட்டிய பெருமை தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. வாசிம் அக்ரமிடம் இருந்து ஜாகீர் கானும், முகமது ஷமியும் கற்றுக் கொண்ட வித்தைகள் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். ஜாகீர் கான், முகமது ஷமி ஆகியோர் அக்ரமிடம் பயிற்சி பெற அச்சாரமாய் இருந்த கங்குலி, பிசிசிஐ தலைவராக இருந்தபோதும் இருதரப்பு கிரிக்கெட் தொடருக்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

எப்போது முடிவு?
இன்னும் 4 நாட்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க இருக்கிறது. அதற்கான வியூவர்ஷிப் ஹாட்ஸ்டார் செயலியிலும், தொலைக்காட்சியிலும் சாதனை படைக்கும். அந்தப் போட்டியில் இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களின் போராட்டமும், வரலாற்றில் அச்சிடப்படும். ஆனால் அதன்பின்னர் மீண்டும் அடுத்ததாக எப்போது இரு நாடுகளும் மோதப் போகிறார்கள் என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்குவார்கள். இதற்கான முடிவு எப்போது எட்டப்படும் என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.