Beela Venkatesan death: கொரோனா காலத்தில் சுற்றி சுற்றி வேலை பார்த்த பீலா வெங்கடேசன் திடீர் மரணம்! என்ன காரணம்?
சென்னை: உடல்நிலை பாதிப்பு காரணமாக நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் இன்று மாலை காலமானார். மருத்துவமனையில் பல மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன், எதிர்பாராத வகையில் இன்று காலமானார். அவரது திடீர் மரணத்திற்கான காரணம் குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
2019- 2020 காலத்தில் கொரோனா பரவல் ஏற்பட்ட போது தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். கொரோனா பரவலுக்குச் சில காலம் மாதங்களுக்கு முன்பு 2019ல் தான் இவர் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது திடீரெனக் கொரோனா பரவல் ஏற்படவே அதைக் கையாள்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

பீலா வெங்கடேசன் மரணம்
கொரோனா குறித்துத் தெளிவு இல்லாத அந்தக் காலகட்டத்தில் பொதுமக்களிடையே குழப்பமும் பீதியும் தான் அதிகமாக இருந்தது. அப்போது ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்த இவர், கொரோனா பாதிப்புகள் குறித்துத் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களைக் கொடுத்தார். அது தமிழ்நாடு மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது.
அதன் பிறகும் கூட வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளர் உட்படப் பல்வேறு பொறுப்புகளில் பீலா வெங்கடேசன் மிக சிறப்பாக வேலை செய்தார். கடந்த 2022 நவம்பர் மாதம் தான் இவர் எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது.
என்ன காரணம்
இதற்கிடையே கடந்த சில காலமாகவே அவருக்குத் தீவிர உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. brain tumor எனப்படும் மூளைக் கட்டியால் நீண்ட காலமாகவே அவதிப்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தேனாம்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை தரப்பட்டது.
இருப்பினும், டியூமர் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதிலும், அவை காப்பாற்ற முடியவில்லை. இன்று மாலை பீலா வெங்கடேசன் உயிரிழந்தார். அவருக்கு வயது 56. உயிரிழந்த சமயத்தில், அவர் எரிசக்தித் துறையின் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
யார் இவர்
டாக்டர் பீலா வெங்கடேசன், சென்னை மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். ஒரு மருத்துவரான இவர், 1997ஆம் ஆண்டில் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார். முதலில் பீகார் மாநிலத்திலும், பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பணியாற்றினார். அதன் பிறகு பணியிடமாற்றத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத் துறை ஆணையர், நகர மற்றும் கிராம திட்டமிடல் ஆணையர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் போன்ற பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
இரங்கல்
நாகர்கோவிலைச் சேர்ந்த பீலா வெங்கடேசனின் தாயார் ராணி வெங்கடேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவரும் ஆவார். அவரது தந்தை எஸ்.என். வெங்கடேசன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பீலா வெங்கேடசின் இந்த திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications