500.. 58.. 6.. வெளியே வந்து வணக்கம் போட்ட காமராஜ்.. எடப்பாடிக்கு "இதை" விட வேற சான்ஸ் கிடைக்காது!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இதை எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்பான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய ரெய்டு இன்றும், நாளையும் நடக்கும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. சென்னை, திருவாரூர், மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

58 கோடி ரூபாய்
01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி இவர் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து உள்ளார். தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும், பினாமி பெயரிலும் இவர் சொத்துக்களை குவித்து இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500%
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இவர் முறைகேடாக சொத்து சேர்த்து இருக்கிறார். 5 ஆண்டுகளில் இவரின் சொத்துக்கள் 500 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவருக்கு எதிராக சித்ரா என்ற நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வேட்பு மனுவில் 2016 மற்றும் 2021ல் இவர் கொடுத்துள்ள தகவலிலேயே இவரின் சொத்து மதிப்பு 500 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

6 பேர்
இந்த சொத்து குவிப்பு தொடர்பாக மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக காமராஜ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக அவரின் மகன் இனியன் சேர்க்கப்பட்டுள்ளார். இன்னொரு மகன் இன்பன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரெய்டுக்கு இடையில் நன்னிலம் வீட்டில் இருந்து காமராஜ் சில நிமிடங்கள் வெளியே வந்து தனது ஆதரவாளர்களுக்கு கும்பிடு போட்டார்.

எடப்பாடி
அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. எடப்பாடி ஆதரவாளரான காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருவது எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்த போது அதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனங்கள் வைக்கப்பட்டன. வேலுமணியை முன்னாள் அதிமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது வேலுமணிக்கு பெரிய ஆதரவு கிடைத்தது.

ஆதரவு
அவரின் வீட்டில் அமைச்சர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் அதிமுக தொண்டர்களும் போராட்டங்களை செய்தனர். ஆனால் அதற்கு முன் எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், தங்கமணி, வீரமணி உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட போது எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரிதாக மாஜிக்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. வெறுமனே அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது. மாஜிக்கள் ஆதரவு இன்றி தனித்துவிடப்பட்டனர் .

போராட்டம் இல்லை
அதோடு அந்த மாஜி அமைச்சர்களுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் போராட்டமும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி வெறுமனே அறிக்கையோடு நிறுத்திக்கொண்டது அப்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இக்கட்டான நேரத்தில் ஆதரவு தரவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடியின் இன்னொரு ஆதரவாளரான காமராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குறி வைக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடிக்கு சான்ஸ்
இப்போது காமராஜுக்கு நேரடியாக ஆதரவு தருவதன் மூலம் எடப்பாடி தன்னை வலுவான தலைவர் என்று நிரூபிக்க முடியும். அதிமுகவின் உண்மை தலைவர் யார் என்ற ஆளுமை யுத்தம் நடக்கும் நிலையில் எடப்பாடி தனது ஆளுமையை நிரூபிக்க முடியும். எனக்கு ஆதரவாக இருப்பவர்களுடன் நான் எப்போதும் உடன் இருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பது போல இருக்கும். வெறுமனே அறிக்கை மட்டும் வெளியிடாமல் காமராஜை நேரில் சந்திப்பது உள்ளிட்ட விஷயங்களை எடப்பாடி செய்தால் நிர்வாகிகள் மத்தியில் அவர் மீதான "கிரேஸ்" கூடும். அதிமுகவில் யாருக்கு அதிக ஆதரவு என்ற போட்டி நிலவும் நிலையில்.. எடப்பாடி இந்த சான்சை பயன்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது!












Click it and Unblock the Notifications