"70% சரிவு.." குறைய ஆரம்பித்த தங்கம் விலை.. சரியாக ஆனந்த் சீனிவாசன் சொன்ன முக்கியமான மேட்டர்
சென்னை: தங்கம் விலை எந்தளவுக்குச் சரியும் என்பதே பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே வரலாற்று ரீதியாகத் தங்கம் விலை ஒரே முறையில் எந்தளவுக்குச் சரிந்துள்ளது... அப்போது தங்கம் விலை சரிய என்ன காரணமாக இருந்தது என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இவ்வாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக நின்று நிதானமாக மாற ஆரம்பித்துள்ளது. ஓரிரு வாரங்களாகத் தங்கம் விலை சரிந்தபோதிலும், பெரியளவில் ஏற்றம் இல்லை. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட ஒருவிதப் பயத்தையும் சேர்த்து ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் சீனிவாசன்
அதாவது தங்கம் விலை எங்கு ரொம்ப குறைந்துவிடுமோ என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் தங்கம் விலை இப்போதே வாங்கலாமா இல்லை காத்திருக்கலாமா என யோசிக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை மிகப் பெரியளவில் சரிய ஒரே ஒரு வாய்ப்பு தான் இருப்பதாகக் கூறியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது குறித்து விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "1951 முதல் 1970 வரை 20 வருஷம் வந்து கரன்சி மதிப்பு நிலையாக இருந்தது. அதாவது உலக நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்யும்.. டாலர் தங்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.. ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 36 டாலர் என நிர்ணயம் செய்திருந்தனர். அதாவது 36 டாலர் கொடுத்தால் அமெரிக்கா எனக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் தர வேண்டும்.
நடந்தது என்ன?
1951 முதல் 1971 வரை கையிருப்பில் எவ்வளவு தங்கம் இருக்கிறதோ.. அவ்வளவு தான் கரன்சி அடிக்க முடியும் என்று இருந்தது. 1971 ஆகஸ்ட் 15ம் தேதி அப்போது அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் இதை மாற்றினார். இனி தங்கம் எல்லாம் தர முடியாது என சொல்லிவிட்டார். அன்று தங்கம் விலை ஏற ஆரம்பித்தது. 36 டாலரில் இருந்து ஒன்பது வருடத்தில்.. 1980க்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் 800 டாலர் ஆனது..
அதன் பிறகு மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்கா ஒரு டீல் போட்டது. அதாவது கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு டாலர் தான் வாங்க வேண்டும் என சொன்னார்கள்.. அவர்களும் ஒப்புக்கொண்டனர். இதனால் எல்லா வர்த்தகமும் அப்போது டாலரில் நடந்து வந்தது. இந்தச் சூழலில் தான் 1973ல் கச்சா எண்ணெய் தொடர்பாகச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.
உயர்த்தப்பட்ட வட்டி
1980க்குள் வியட்நாம் போர் உள்ளிட்ட சில காரணங்களால் அமெரிக்காவில் பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்தது. இதையடுத்து அப்போது அதிபராக இருந்த ஜிம்மி கார்டர் என்பவர் பால் வோல்கரை அமெரிக்க பெடரல் வங்கி தலைவராக நியமித்தார். அவர் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இஷ்டத்திற்கு அமெரிக்க வட்டி விகிதத்தை ஏற்றினார்.
இன்று அமெரிக்க வட்டி விகிதம் 4%ஆக இருக்கிறது. இதை அவர் 20%ஆக உயர்த்திருந்தார். அதாவது அமெரிக்க அரசுக்கும் பிற அமெரிக்க வங்கிகளுக்கும் அமெரிக்க மத்திய வங்கிக் கடன் கொடுக்கும் விகிதத்தை 20%ஆக உயர்த்தினார். வட்டி விகிதம் ஜீரோவில் இருந்து 20%க்கு போனது. அப்போது உடனடியாகத் தங்கம் விலை 800 டாலரில் இருந்து 200 டாலராக சரிந்தது.
70% சரிவு
அதாவது 36 டாலரில் இருக்கிறது.. அடுத்து இஷ்டத்திற்கு நோட்டு அடிக்கிறீர்கள்.. ஆனால், தங்கம் அளவு அப்படியே இருக்கிறது. தங்கம் அதே அளவு இருந்து, டாலர் அதிகமாக பிரிண்ட் அடித்ததால் டாலர் மதிப்பு குறைந்து போனது. இதனால் தங்கம் விலை 800 டாலருக்கு போனது. அடுத்து வட்டியை உயர்த்தினார்கள்.. அப்போது புழக்கத்தில் இருக்கும் டாலர் அளவு குறைகிறது. இதனால் டாலர் மதிப்பு உயர்கிறது, தானாகத் தங்கம் விலை 70% வரை குறைந்துவிட்டது.
மீண்டும் நடக்குமா!
அதன் பிறகு மீண்டும் மெல்ல அதிக நோட்டுகளை அடிக்க ஆரம்பித்து 2000ல் தான் வட்டி விகிதத்தை ஜீரோவாக்கினார்கள். அப்போது ஏற ஆரம்பித்த தங்கம் இதுவரை உயர்கிறது. இன்னொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அதாவது ரூபாய் மதிப்பில் தங்கம் விலை எப்போதும் 7-8% தான் விழுந்து இருக்கிறது. 10%க்கு மேல் தங்கம் விலை ரூபாய் மதிப்பில் விழுந்ததே இல்லை" என்றார். வரலாற்றில் இதுபோல நடந்தாலும் கூட மீண்டும் இந்தளவுக்கு வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்துவது மிக மிக கடினம் என்றே அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications