சோஷியல் மீடியா சண்டை.. வார் ரூம் டார்கெட்.. வரிசையாக குமுறிய காயத்ரி ரகுராம்.. ரீவைண்ட்!
சென்னை: அதிரடிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர்போன காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டரில் அதிரடியாக அறிவித்து இருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜகவில் இணைந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே அவருடன் பனிப்போர் நடத்திவந்தார். இதனால், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த காயத்ரி ராகுராம் தற்போது விலகுவதாக அறிவிப்பை கொடுத்து தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
தமிழக பாஜகவின் அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போனவர் நடிகை காயத்ரி ரகுராம். நடிகையாகவும் நடன இயக்குனராகவும் தமிழ் துறையில் நன்கு அறியப்பட்டவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பிரபலமான திரை நட்சத்திரமாக அறியப்பட்ட காயத்ரி ரகுராமிற்கு தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி நிகழ்ச்சிகளிலும் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டங்களிலும் தீவிரமாக காயத்ரி ரகுராம் பங்கெடுத்து வந்தார்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக
தனது வழக்கான அதிரடி பேச்சுகள் மூலம் விரைவில் அரசியலிலும் பிரபலமாகத் தொடங்கிய காயத்ரி ரகுராம் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கத்தொடங்கினார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக காயத்ரி ரகுராம் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கடும் சர்ச்சைக்கு ஆளான அவர் சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.

6 மாதங்களுக்கு எந்த பதவியும் இன்றி
பின்னர் மறு பிரவேசம் செய்தது போல மீண்டும் தீவிர அரசியலில் காலடி வைத்தவர் சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கலாச்சாரப் பிரிவு அல்லாமல் கட்சியில் தனக்கு முக்கிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த காயத்ரி ரகுராமிற்கு அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே ஏமாற்றமே மிஞ்சியது. கலாசார பிரிவு பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட காயத்ரி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு எந்த பதவியும் இன்றி இருந்தார்.

அண்ணாமலை - காயத்ரி இடையே பனிப்போர்
தனக்கு பதவி இல்லை, எனக்கு போதிய ஆதரவு கட்சியில் இல்லை என்று காயத்ரி விமர்சனங்களை வைத்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அயலக தமிழர் மற்றும் பிறமாநில தமிழர் நலப்பிரிவின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அண்ணாமலை - காயத்ரி ரகுராம் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தபாடில்லை. காயத்ரி ரகுராம் கட்சி விவகாரங்கள் தொடர்பாக வெளிப்படையாக தனது ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.

தரக்குறைவாக பேசிய சூர்யா சிவா
இதற்கு இடையில், திருச்சி சூர்யா சிவா- டெய்சி சரண் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் டெய்சி குறித்து மிகவும் தரக்குறைவாக சூர்யா சிவா பேசியிருந்தார். பாஜக மூத்த நிர்வாகி ஒருவருடன் டெய்சியை சேர்த்து வைத்து பேசினார். மேலும் டெய்சிக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். இந்த 9 நிமிட ஆடியோவை கேட்கவே நாராசமாக இருந்தது. ஒரு பெண்ணை இப்படி தரக்குறைவாக பேசிய சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயத்ரி ட்வீட் போட்டார்.

வெளிப்படையாகவே விமர்சித்தார்
இதன் தொடர்ச்சியகாகவே கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசியதாக தமிழக பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். சஸ்பென்ட் செய்யப்பட்ட பிறகு அண்ணாமலையை மிகவும் வெளிப்படையாகவே காயத்ரி ரகுராம் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். சரவெடி போல தனது ட்விட்களில் அண்ணாமலை குறித்து தனது விமர்சனங்களை அடுக்கினார். குரங்கு கையில பூ மாலை. மோசமான நிலை" என்று கூட அண்ணாமலையை காயத்ரி ரகுராம் அட்டாக் செய்து இருந்தார். இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமிற்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த காயத்ரி ரகுராம்
இவ்வாறு தன்னை விமர்சனம் செய்யும் நபர்களை காயத்ரி ரகுராமும் தாக்கி ட்விட்டரில் பதிவுகள் செய்து வந்தார். இது ட்விட்டரில் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இது அண்ணாமலைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து காயத்ரி ரகுராம் மீது அண்ணாமலை நடவடிக்கை எடுத்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த காயத்ரி ரகுராம் தன்னிடம் விளக்கம் கேட்காமலே சஸ்பெண்ட் செய்து விட்டதாக விமர்சித்து இருந்தார்.

பெண்களைப் பற்றி அவதூறான கருத்து
அப்போதில் இருந்தே பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் அவரது ஆதரவாளர்கள் குறித்தும் ட்விட்டரில் காரசாரமாகவும் வெளிப்படையாகவும் காயத்ரி ரகுமராம் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக அண்ணாமலை தலைமையில் வார் ரூம் செயல்படுவதாகவும் அதில் இருந்து மிகவும் மோசமான கேவலமான தனிப்பட்ட தாக்குதல்களை நாங்கள் சந்திக்கிறோம். பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். தமிழக காவல்துறை இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காயத்ரி ரகுராம் அதிர வைத்தார்.

நீயும் திருடன்தான்
அது மட்டும் இன்றி , திருடனைப் பாதுகாத்தால் நீயும் திருடன்தான். ஒரு ஊழல்வாதியைப் பாதுகாத்தால், நீயும் ஊழல்வாதிதான். கொலைகாரனை பாதுகாத்தால் நீயும் கொலைகாரன் தான். ஒரு பெண் வன்கொடுமை செய்பவரைப் பாதுகாத்தால்? என ஒரு ட்விட் பதிவை இந்த மாத துவக்கத்தில் போட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார் காயத்ரி ரகுராம்.

தர்மத்தை பின்பற்றுவதில்லை
சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த போதும் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை காயத்ரி ரகுராம் கூறி வந்தார். ரபேல் வாட்ச் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் அண்ணாமலை சிக்கிய போது கூட அவருக்கு எதிராகவே காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாகக் கூட அண்ணாமலை தலைமையின் கீழ் செயல்படும் பாஜகவில் அண்ணாமலையுடன் இருக்கும் யாரும் தர்மத்தை பின்பற்றுவதில்லை. அண்ணாமலையும் தர்மத்தை பின்பற்றுவதில்லை என்று விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படி அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்த காயத்ரி ரகுராம் , தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications