மருமகன், அப்பாவை கூறுபோட்டு.. புதுச்சேரி பிசியோதெரபிஸ்ட் ஞாபகமிருக்கா? ஹைகோர்ட் தந்த உத்தரவு பாருங்க
சென்னை: மருமகன், அப்பாவை கொன்ற குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.. அதுவும் அவரது ஆயுள் தண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏன்? என்ன காரணம்?
புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ்.. 75 வயதாகிறது.. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.. இவரின் மனைவி பெயர் வசந்தா.. 65 வயதாகிறது.. இவர்களது 43 வயது மகள் ஷகிலா.. 42 வயது மகன் சிவக்குமார்.

இதில் சிவக்குமார் ஒரு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்தார்.. ஷகிலாவின் 14 வயது மகன் பரத்குமார், தாத்தா செல்வராஜ் வீட்டிலேயே தங்கி படித்து வந்தார்.
பேரன் மீது தாத்தாவுக்கு கொள்ளை பிரியம். அதுவும் இல்லாமல், தன்னுடைய மனைவி வசந்தா பெயரில் உள்ள வீட்டை, பேரன் பரத்குமாருக்கு எழுதி வைக்கும்படி, வசந்தாவிடம் சொல்லி கொண்டேயிருந்தாராம்.
பேரனுக்கு சொத்து: ஆனால், இதனை வசந்தாவும் ஏற்கவில்லை.. சிவக்குமாரும் ஏற்கவில்லை.. எக்காரணம் கொண்டும் வீட்டை, தன்னுடைய அக்கா மகனுக்கு எழுதி வைக்க முடியாது என்று உறுதியாக சொன்னாராம் சிவக்குமார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறும் நடந்துள்ளது..
கடந்த 2017 ஏப்ரல், 15ல் இந்த தகராறு மீண்டும் வெடித்தபோது, அப்பா செல்வராஜ், அக்கா மகன் பரத்குமாரை, சிவக்குமார் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார்.
2 சடலங்கள்: பிறகு, அப்பா, மருமகனின் சடலத்தை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார் சிவக்குமார். பிறகு 2 நாட்களுக்கு பிறகு மறுபடியும் வீட்டுக்கு வந்து, 2 சடலங்களையும் துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பிறகு 7 சாக்கு பைகளை வாங்கி, தமிழகத்தின் பூத்துறை பகுதியில் வீசிவிட்டு போயிருக்கிறார்.
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, புதுச்சேரி போலீசார் சிவகுமார், அவரது அம்மா வசந்தா ஆகியோரை கைது செய்திருந்தனர்.. இந்த வழக்கு அப்போது தமிழகமெங்கும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆயுள் தண்டனை: இறுதியில் இந்த கொலை வழக்கை விசாரித்த புதுச்சேரி கோர்ட், சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2019 டிசம்பர், 12ல் உத்தரவிட்டு, வசந்தாவை விடுதலை செய்ததது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட்டில் சிவகுமார் அப்பீல் செய்தார்... இந்த மனுவானது, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சிவகுமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ''வழக்கின் முதல் சாட்சியான மனுதாரரின் சகோதரியும், மற்ற சாட்சிகளில் ஓரிருவரும் பிறழ் சாட்சிகளாக மாறியிருக்கிறார்கள்.. அத்துடன், சாட்சிகளின் வாக்குமூலத்திலும் குளறுபடிகள் உள்ளன.. பல சாட்சியங்கள் நம்பும்படியாகவும் இல்லை, என்று வாதிட்டார்.
அதிரடி தீர்ப்பு: இதையடுத்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சொன்னதாவது: "இந்த வழக்கில் மனுதாரர் மீது அதிக சந்தேகங்கள் இருந்த போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர்.. கொலைக்கான நோக்கத்தை நிரூபிக்க, பக்கத்து வீட்டாரின் சாட்சியம் மட்டும் போதுமானதாக இல்லை.. மற்ற காரணங்களையும் உறுதியாக போலீசார் நிரூபிக்கவில்லை. அதனால், விசாரணை நீதிமன்றம், 2019ல் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications