அண்ணாமலை பிளானே வேறயாம்.. ‘நோ ரிஸ்க்’! கூட்டணியை தீர்மானிக்கும் தீர்ப்பு.. பந்து அமித்ஷா கையில்! ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை : "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பாஜகவின் குறிக்கோள் முழுக்க முழுக்க 2024 மக்களவை தேர்தல்தான். தமிழ்நாடு பாஜகவில் குழப்பமான சூழல்கள் நிலவுவதால் அண்ணாமலை நிச்சயம் ரிஸ்க் எடுக்கமாட்டார்" என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் பா.கி.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் நிலவரம், அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல், திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு ஆகிய விவகாரங்கள் பற்றி ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் பத்திரிகையாளர் பா.கி.

இந்தப் பேட்டியில் பேசியுள்ள அவர், ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா கையில் தான் பந்து இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து மாநில அரசுடன் மோதல் போக்கை தொடரக்கூடாது என ஏதாவது சமிக்ஞை வந்தால் ஆளுநர் தனது பாணியை மாற்றிக்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் பா.கி. பேட்டி வருமாறு:

 பாஜக தனித்துப் போட்டியிடுமா?

பாஜக தனித்துப் போட்டியிடுமா?

கேள்வி : ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதா?

பதில் : இப்போது இருக்கும் சூழலில் அதற்கு சாத்தியம் இல்லை. ஏனெனில், தனித்து சட்டமன்ற இடைத்தேர்தலைச் சந்திக்கும் நிலைமையில் பாஜக இல்லை. ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணியில் தான் இருக்கவேண்டும். அது நிச்சயமாக அதிமுக தான். அதிமுக இப்போது இரண்டாகப் பிரிந்திருப்பதால் கூட்டணியை பாஜக விரும்புமா என்பது தெரியாது. பாஜக கட்சியை வலுப்படுத்தவே நினைக்கிறது. ஈரோடு கிழக்கில் சாதகமான சூழல் எதுவும் இல்லாததால், பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. திமுக அல்லது திமுக கூட்டணி கட்சி போட்டியிடும் சூழலில் பிரதானமாக அதிமுக அல்லது அதிமுக கூட்டணி கட்சி எதிர்த்துப் போட்டியிடும். இதுவரை அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வராத நிலையில், ஓபிஎஸ்ஸா, ஈபிஎஸ்ஸா என முடிவாகாத நிலையில், 2 தரப்புமே வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்பில்லை. எனவே, ஏற்கனவே அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமாகா யுவராஜ் தான் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

களத்தில் குழப்பம்

களத்தில் குழப்பம்

இப்போது இருக்கும் குழப்பமான சூழலில், சமரசமாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதே புத்திசாலித்தனம். அந்தவகையில், தமாகா போட்டியிடவே வாய்ப்பு அதிகம். அதிமுகவின் எந்த அணியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது, பாஜகவும் போட்டியிடாது. எனவே தமாகா வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஏற்கனவே தமாகா போட்டியிட்ட தொகுதி என்பது அவர்கள் சொல்வதற்கான காரணமாக அமைந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் போட்டியிட்டால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர் யாராவது போட்டியிட்டால் எடப்பாடி ஆதரவாளர்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால், தமாகா வேட்பாளர் போட்டியிட்டால் அவரை எல்லா தரப்பினரும் ஆதரிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

அண்ணாமலை போட்டியிடுவாரா

அண்ணாமலை போட்டியிடுவாரா

கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட இருப்பதாக பேச்சுகள் எழுந்தன. பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் கூட, அண்னாமலை இடைத்தேர்தலில் போட்டியிடட்டும், நானும் போட்டியிடுகிறேன் என சவால் விடுத்திருந்தார். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : தற்சமயம் அண்ணாமலை அப்படியான ‘ரிஸ்க்'கை எடுக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இன்று திமுக மீது அதிருப்தி இருந்தால் கூட, அதன் பலன் எந்தப் பக்கம் போய்ச் சேரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. எனவே அண்ணாமலை ரிஸ்க் எடுக்கமாட்டார். அண்ணாமலை, கட்சியின் மாநில தலைவராக இருந்து, மாநிலம் முழுவதும் கட்சியை பலப்படுத்தக்கூடிய வேலையில் தீவிரமாக இருக்கிறார். திமுகவின் சீனியரான துரைமுருகனே, பாஜக ராட்சசன் மாதிரி வளர்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்லிவிட்டார். அண்ணாமலையின் கவனம் முழுக்க தமிழ்நாடு முழுக்க வலுப்படுத்த வேண்டும் என்பதுதான். இரண்டாவது பாயிண்ட், பாஜகவின் குறிக்கோள் முழுக்க முழுக்க 2024 மக்களவை தேர்தல்தான். அதில் கணிசமான இடங்களைக் கைப்பற்றினால் தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக இருந்து, அடுத்தமுறை பேரம் பேசி, கூடுதல் இடங்களைப் பெற்று கூடுதல் தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும்.

ரிஸ்க் எடுப்பாரா?

ரிஸ்க் எடுப்பாரா?

இந்த இடைத்தேர்தலில் எல்லாம் அவர்களின் ஆற்றலை வீணாக்க மாட்டார்கள். இப்போது பாஜகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. திருச்சி சூர்யா, காயத்ரி ரகுராம் விலகல், சர்ச்சைகள் காரணமாக தமிழ்நாடு பாஜகவில் குழப்பமான சூழல்கள் நிலவுவதால் அண்ணாமலை ரிஸ்க் எடுக்கமாட்டார். எனவே இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்பது உறுதி. பாஜகவின் குறிக்கோள் முழுக்க முழுக்க 2024 மக்களவை தேர்தல்தான். அதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம் என்பதால் பாஜகவோ, அண்ணாமலையோ போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்றே நான் கருதுகிறேன்.

திமுகவா? காங்கிரஸா?

திமுகவா? காங்கிரஸா?

கேள்வி : திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, ஈரோடு கிழக்கில் திமுக களமிறங்குமா அல்லது ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை கொடுத்துவிடுமா?

பதில் : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்படாத சில முக்கியமான வாக்குறுதிகள் பற்றி மு.க.ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். இதனால், திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தும் முடிவை எடுக்கமாட்டார். மேலும், கூட்டணி கட்சி போட்டியிட்டு வென்ற தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அந்தக் கூட்டணிக் கட்சிக்கே வாய்ப்பு கொடுப்பதுதான் திமுகவின் அணுகுமுறை. வென்றால் மட்டுமல்ல, போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலே அங்கு இடைத்தேர்தல் வந்தால் கூட்டணிக் கட்சிக்கே வாய்ப்பு தருவதுதான் திமுகவின் வழக்கம். எனவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கே திமுக வாய்ப்பு வழங்கும் என நிச்சயமாக நம்புகிறேன்.

யாருடன் கூட்டணி?

யாருடன் கூட்டணி?

கேள்வி : இடைத்தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி எனச் சொல்கிறீர்கள். பாஜக, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரில் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது?

பதில் : உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இப்படியேதான் இருக்கும். இப்போது அதிமுகவின் எல்லா அணிகளும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் பாஜக, ஒருவேளை ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால், ஓபிஎஸ்ஸை அழைத்து, ஈபிஎஸ் தரப்போடு சமரசமாகச் செல்லுமாறு வலியுறுத்தும். அதன் மூலம், அதிமுக அணிகளுக்குள் இணக்கம் ஏற்பட்டு, அப்போது ஒன்றிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்கள். அந்த அணுகுமுறைதான் பொதுவாக அரசியலில் கையாளப்படும். கடந்த காலத்தில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது, பின்னர் சூழல் மாறியது. அப்போது ஒன்றிணைந்த அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அதேபோல, அதிமுக ஒருங்கிணைந்தபிறகு பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு அதிகம்.

திமுக அரசு vs ஆளுநர்

திமுக அரசு vs ஆளுநர்

கேள்வி : திமுக அரசு - ஆளுநர் இடையேயான மோதல் தொடர்கிறது.. திமுக குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் பற்றி முறையிட்ட நிலையில், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறைக்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்? ஆளுநர் மாற்றப்பட வாய்ப்பு உண்டா?

பதில் : நாகலாந்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியின் பெயர் அங்கு மிகவும் மோசமாகிவிட்டது. அதனால் தான் அவர் நீக்கப்பட்டார். நாகலாந்தில் பிரிவினைவாத குழுக்களோடு நடந்த பேச்சுவார்த்தையில் அவர் செய்த குளறுபடிகள், அங்கு அவர் நீக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு மோசமான சூழல் தமிழ்நாட்டில் இல்லை. வார்த்தைப் போர், சித்தாந்தப் போர் என்ற அளவில் தான் இருக்கிறதே தவிர, மாநிலத்திற்கே அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழல் இல்லை. அப்படியான நிலை வந்தால் தான் ஆளுநர் மாற்றம் எனும் அளவுக்கு போகக்கூடும். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் சங்கடங்கள் இப்படியே நீடித்துக் கொண்டிருக்கக்கூடும்.

அமித்ஷா கையில் பந்து

அமித்ஷா கையில் பந்து

1991ல் கருணாநிதி அரசைக் கவிழ்ப்பதில் ஒரு தர்மசங்கட சூழல் ஆளுநருக்கு ஏற்பட்டது. அதைப் போன்ற ஒரு இக்கட்டான சூழல் வந்தால் ஆளுநரை நீக்கியே தீரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாநில அரசாங்கம் இருக்கும். இன்றுள்ள சூழலில், ஆளுநர், மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான். இதற்குப் பின்னால் இருக்கும் அஜெண்டா என்ன என்பதைப் பார்க்க வேண்டும். குடியரசுத் தலைவர், உள்துறைக்கு ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆளுநருக்கு உள்துறை அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்பதாகவும் சொல்லலாம், நீங்கள் செய்தது தவறு, பதவி விலகுங்கள் என்றும் சொல்லலாம். நடவடிக்கை என்ன என்பது உள்துறையின் கையில் தான் இருக்கிறது. அமித்ஷா கையில் தான் பந்து இருக்கிறது. அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து மாநில அரசுடன் மோதல் போக்கை தொடரக்கூடாது என ஏதாவது சமிக்ஞை வந்தால் ஆளுநர் தனது பாணியை மாற்றிக்கொள்ளக்கூடும். இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார் பா.கி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+