"கொங்கு.." அத்தனை கட்சிகளும் குறி வைப்பது ஏன்? அரசியல் மட்டுமில்லை.. வேறு "விஷயமும்" இருக்குதாம்
சென்னை: கொங்கு மண்டலத்தை குறி வைத்து அத்தனை பெரிய கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன.
Recommended Video
அமைச்சர் பதவி, கட்சித் தலைவர் பதவி, கட்சித் தலைவர்களின் சுற்றுப் பயணம், புதிதாக கட்சியில் ஆள் சேர்ப்பது என ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வகையில் கொங்கு பகுதியை மட்டுமே குறி வைப்பதை கவனித்திருப்பீர்கள்.
சென்னையை மட்டுமே அனைத்து கட்சிகளும் குஷிப்படுத்துகின்றன.. வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என தமிழ்நாட்டுக்குள்ளேயே அதிருப்தி குரல்கள் இருந்த காலம் உண்டு. ஆனால் இப்போது மேற்கு உயர்கிறது.. மற்ற பகுதிகள் ஏங்குகிறது. ஏன் இப்படி என்று தெரிந்து கொள்ளும் முன்பாக, சமீப காலத்தில் கொங்குவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்க்க வேண்டும்.

அதிமுகவின் கோட்டை
அந்த கட்சி இந்த கட்சி என்று கிடையாது. இந்த விஷயத்தில் எந்த கட்சியும் விதி விலக்கு கிடையாது. அதிமுகவையே எடுத்துக் கொள்ளுங்களேன். தெற்கு சீமையை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்துவிட்டு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியைத்தானே சிஎம் ஆக்கினார்கள். எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் அவர் ஆட்சி காலத்தை பூர்த்தி செய்து காட்டினாரே. அவரது ஆட்சி காலத்தில், சேலம் நகரம் பாலம் நகரம் என்று பெயரெடுக்கும் வகையில் கட்டுமான பணிகள் நிறைவேறியதை பார்க்க முடிந்தது. அத்திக்கடவு-அவினாசி உட்பட கொங்கு சார்ந்த பல திட்டங்களுக்கு அவரது ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது. இப்போதும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார், கட்சி கொறடாவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரேதான்.

ராகுல் காந்தி சுற்றுப் பயணம்
மாநில கட்சிதான் இப்படி என்றால், தேசிய கட்சி காங்கிரசும் இதில் விதி விலக்கு இல்லை. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்து, தொழிலதிபர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதிக காலத்தை அங்கேயே செலவிட்டார். ராகுல் காந்தியின் இலக்கு, வழக்கமான காங்கிரஸ் கோட்டையான கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்து பார்த்தால், கொங்கு மண்டலமாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் அங்கு காங்கிரசுக்கு இதுவரை சொல்லிக்கொள்ளும் செல்வாக்கு இல்லை.

பாஜக பிளான்
பாஜக பற்றி கேட்கவே வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக, அந்த கட்சி தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைப்பது கொங்கு மண்டலத்தைதான். குமரி மாவட்டம், நாகர்கோவில், கொங்கு மண்டலத்தின் கோவை தெற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜக வென்றது இதற்கு நல்ல உதாரணம். நெல்லையில், நயினார் நாகேந்திரனின் தனிப்பட்டச் செல்வாக்குதான் அவரை வெற்றிபெற வைத்தது.

திடீர் சர்ப்ரைஸ்
கொங்குவை குறி வைப்பதை போன வருடமே துரிதப்படுத்தியது பாஜக. அக்கட்சி தலைவராக யாராலும் நினைத்து பார்க்க முடியாத சர்ப்ரைசாக திடீரென நியமிக்கப்பட்ட எல்.முருகன், கொங்கு மண்டலத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த முருகன் பாஜகவில் சேர்க்கப்பட காரணமும் அவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் மற்றும் அந்த மண்டலத்தின் பெரும்பான்மை ஜாதி பிரிவைச் சேர்ந்தவர் என்பதும்தான் என்று கூறப்பட்டது. இதோ.. இப்போது முருகன் திடீரென மத்திய இணை அமைச்சராக்கப்பட்டுள்ளார், அண்ணாமலை, தமிழ்நாடு, பாஜக தலைவராக்கப்பட்டுள்ளார்.

தெற்கை புறக்கணித்த பாஜக
அடுத்த பாஜக தலைவராக, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. அவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர். தற்போது சட்டசபை பாஜக குழு தலைவராக இருக்கிறார். ஒருவேளை ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை இதில் இடையூறாக வந்தால், திமுகவிலிருந்து பாஜகவிற்கு வந்த முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் பாஜக தலைவர் பதவிக்கு காய் நகர்த்தியாக கூறப்பட்டது. ஆனால், திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த இவர்களை தலைவர் ஆகாமல் கொங்கு மண்டலத்துக்கு மறுபடி முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாஜக.

கன்னியாகுமரி மாவட்டம்
பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது, பிறகு ஆளுநர் ஆக்கப்பட்டது, மேலும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்தது என கன்னியாகுமரி மாவட்டத்தை குறிவைத்து முன்பு காய் நகர்த்தியது பாஜக. ஆனால் இப்போது மொத்தமாக தனது ஃபோக்கஸை, கொங்கு மண்டலத்திற்கு ஷிப்ட் செய்துள்ளது அந்த கட்சி. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட கோவைக்குதானே வந்தார்.

தெற்கே தேய்கிறது ஏன்?
பாஜக, காங்கிரஸ், அதிமுக என அத்தனை கட்சிகளும் கொங்குவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், திமுக நான் மட்டும் குறைச்சலா என்ற அளவுக்கு கொங்கு மீது குறி வைத்துள்ளது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் கொங்கு மண்டலம் பலம் என்பதால் கூடுதலாக கவனம் செலுத்துகின்றன. எனவே மற்ற பகுதிகளை புறக்கணிக்கின்றன. குறிப்பாக பாண்டிய மண்டலத்தை கண்டுகொள்வதில்லை. திமுகவுக்கு கொங்குதான் பலவீனம். எனவே அதைப் பலப்படுத்த, பிற மண்டலத்தை விட கொங்குவிற்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டது.

கொங்கு மக்கள் குஷி
கொங்கு மண்டலத்திற்கு இது குஷியான செய்திதான். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லா கட்சியும் இப்படி விழுந்து விழுந்து கவனிப்பதால் இயல்பாகவே அவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதிக ஆதரவு கொண்ட கட்சி அதை தக்க வைக்கவும், ஆதரவு குறைவாக உள்ள கட்சி அதைப் பெருக்கவும் போட்டி போட்டு ஒரே இடத்திற்கு குறி வைத்தால் மற்ற இடங்கள் புறக்கணிக்கப்படுமே. அரசியல் பிரதிநிதித்துவம், அதிகார பிரதிநிதித்துவம் போன்ற எதுவும் இல்லாமல் போய் விடுமே.

திமுகவில் கொங்கு ஃபோகஸ்
ம.நீ.மவிலிருந்து வந்த மகேந்திரன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் திமுகவில் இணைவதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால் பாண்டி மண்டலத்திலிருந்து எத்தனையோ பிற கட்சியினர் சேர்ந்தபோது இத்தனை வெளிச்சம் கிடைக்கவில்லையே. கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு உடனே கிடைத்த "பூஸ்ட்" வேறு மண்டலத்திலிருந்து திமுகவில் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கவில்லையே.

அரசியல் மட்டும் காரணம் இல்லை
இது அரசியல் வளர்ச்சிக்கான போட்டியா என்றால், அது மட்டுமே இல்லை என்கிறார் இடதுசாரி சிந்தனையாளர் சிலம்பரசன். அவர் வேறு ஒரு கோணத்தில் இதை பார்க்கிறார். கொங்கு மண்டலத்தில், தொழில்கள் குவிந்து உள்ளன. முதலாளிகள் அதிகம். ஒவ்வொரு கட்சிக்கும் முதலாளிகள்தான் நிதி ஆதாரம். எனவே, இதில் முதலாளித்துவ நோக்கம் உள்ளது என்கிறார் அவர். அண்ணாமலையை பாஜக தலைவராக்கியதன் மூலம் கொங்கில் முதலாளிகளாக உள்ளோரை பிரதிநிதித்துவம் செய்கிறது பாஜக, தெற்கில் நாடார்களை பாஜக பிரதிநிதித்துவம் செய்யும். ஏனெனில் இவ்விரு ஜாதிகள்தான் தமிழகத்தில் பெரு முதலாளிகளாக உள்ளனர் என்கிறார் சிலம்பரசன்.

வீங்க கூடாது
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வளர்ந்தவை. எனவே மற்ற கட்சிகளின் கொள்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட கட்சிகளின் அடிப்படை கொள்கையாக இருக்கவேண்டும். அரசியல் என்பது ஒரு வியாபாரம் கிடையாது. கால்குலேஷன் பார்த்து காலடி எடுத்து வைக்க கூடாது. "கடையனுக்கும் கடைத்தேற்றம்" என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதை திமுக மற்றும் அதிமுக மனதில் வைத்தால் தெற்கே பாண்டிய மண்டலம், டெல்டா பகுதி, தொண்டை மண்டலம் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவமும், அதிகாரமும் கிடைக்கும், அல்லது ஒரு பிராந்தியத்தில் மட்டும் மொத்த வளர்ச்சியும் ஏற்படும். அது வளர்ச்சியல்ல, வீக்கம்.












Click it and Unblock the Notifications