டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது பற்றி பத்திரிகையாளர் ப்ரியன் பேசியுள்ளார்.
சென்னை : "இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால், பலம் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். பலமுனைப் போட்டி இருக்கும் சூழலில், காங்கிரஸ், ஈபிஎஸ் அணி, நாம் தமிழர் கட்சி, அடுத்து நான்காவது இடத்தில் பாஜக வந்தால், அது பாஜகவின் இமேஜை சரித்துவிடும். பாஜக வளர்ந்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் மாயை என்ற பேச்சு வரும். அதனால் தான் பாஜக தயங்குகிறது" என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும், இருவருமே இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக யாரை ஆதரிக்கப் போகிறது என்ற கேள்வியால் அதிமுக கூட்டணி பெரும் குழப்பத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இந்த குழப்பங்கள் பற்றியும் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில் தினகரன், ஓபிஎஸ்ஸை ஆதரிப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலும் பேசியுள்ளார் ப்ரியன். அவரது பேட்டி வருமாறு:

எடப்பாடி பலம் பெற விடுவார்களா?
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிக வாக்குகள் பெற, அவருக்கு எதிராக இருப்பவர்கள் விடுவார்களா? அதிமுகவோடு இணைய டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரின் ஒரே ஆயுதம் ஓபிஎஸ் தான் என்பதால், அவர்கள் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பலம் பெறச் செய்ய வாய்ப்பு இருக்கிறதா?
பதில் : எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக நிற்கும் நிலையில், ஈபிஎஸ்ஸின் வாக்குகளைக் குறைப்பதற்காக டிடிவி தினகரன் களமிறங்குகிறார். ஒருவேளை சுமார் 1 லட்சம் வாக்கு வங்கி கொண்ட முதலியார் வேட்பாளரை ஓபிஎஸ் களமிறக்கினால், அந்த சமூக வாக்குகள் கிடைக்கலாம், எனவே எடப்பாடிக்கு செக் வைக்க ஓபிஎஸ்ஸை ஆதரிக்கலாம் என தினகரன் முடிவு செய்தால் அது வேறு மாதிரியான ஒருங்கிணைவை ஏற்படுத்தும். ஓபிஎஸ், தினகரன் இருவரின் டார்கெட்டுமே எடப்பாடிக்கான வாக்குகளை குறைப்பதுதான்.

தினகரன் ஓபிஎஸ்ஸை ஆதரிப்பாரா
எடப்பாடிக்கு எதிரான வாக்குகள் தினகரனுக்குச் செல்லவும் கூடும். அதனால், ஓபிஎஸ் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படலாம். இந்த வாக்குகள் எப்படி பிரியும் என்பதைச் சொல்ல முடியாது. பாஜகவும் இதில் களமிறங்கினால், எடப்பாடிக்கு செல்லும் வாக்குகள் இன்னும் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஒன்றாக இணைவது சாதி ரீதியான விமர்சனங்களை இன்னும் கூர்மைப்படுத்தும். எனவே, அதற்கான வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள், தனித்துப் போட்டியிடுவதே சரியானது எனக் கருதுவார்கள்.

இந்த காம்பினேஷன்
கேள்வி : எடப்பாடி பழனிசாமி + அண்ணாமலை.. ஓபிஎஸ் + டிடிவி தினகரன்.. இப்படியான காம்பினேஷனுக்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில் : அண்ணாமலை என்ற தனிப்பட்ட நபருக்கு சில விருப்பங்கள் இருக்கலாம். ஆனால், பாஜக கட்சி எடுக்கும் முடிவு அண்ணாமலையின் விருப்பமாகவே இருக்கும் என்பது இல்லை. அது மேலிடம் எடுக்கும் முடிவு. மேலிடத்துக்கு பலவிதமான 'இன்புட்ஸ்' போகிறது. அவற்றையெல்லாம் ஆராய்ந்துதான் அவர்கள் யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுப்பார்கள். அவரகள் மோதிக் கொள்ளட்டும் நாம் வேடிக்கை பார்க்கலாம் என்று கூட மேலிடம் நினைக்கலாம். எப்படி ஓபிஎஸ் + டிடிவி தினகரன் இணைவு சாதி ரீதியான விமர்சனத்தைக் கொண்டு வருமோ, அதேபோலத்தான் எடப்பாடி + அண்ணாமலை காம்பினேஷனும் கொண்டு வரும். ஆனால், அண்ணாமலை முடிவை பாஜக தலைமை ஏற்கும் என்று சொல்ல முடியாது.

பாஜக - பல கோணங்கள்
பாஜக எடுக்கும் முடிவு 75% விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் முடிவாக இருக்கும். அடுத்த 25% என்பது, எடப்பாடி பழனிசாமி எவ்வளவு ஓட்டு வாங்குவார், எவ்வளவு வாங்கினால் அது கண்ணியமான அளவாக இருக்கும்? தேர்தலுக்குப் பிறகு இந்த மோதல்கள் தொடருமா? என்பதற்கெல்லாம் பதில் தருவதாக இருக்கும். ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு பிரிவுமே ஏதோ ஒரு வகையில் பாஜகவை சார்ந்து இருக்கிறார்கள். இருவருமே நேரடியாக எதிர்க்கும் நிலையில் இல்லை. அண்ணாமலை ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுக்கலாம் என விரும்பினாலும், பாஜக பல ஆங்கிள்களை கவனத்தில் கொண்டு யோசிக்கிறது. அதனால், பாஜக, ஒருவரை விட்டு விட்டு ஒருவருக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து.

தூக்கி எறிய தயங்க மாட்டார்கள்
ஆனால், பாஜகவை நம்ப முடியாது. தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வரை கூடவே வைத்திருப்பார்கள். தங்களுக்கு அவரால் பயன் இல்லை என்று முடிவெடுத்து விட்டால் தூக்கிப்போடத் தயங்க மாட்டார்கள். அதனால், ஓபிஎஸ்ஸையும் தூக்கிப்போட முடிவெடுத்தால், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்து, அவருக்கே தங்கள் ஆதரவு என அறிவித்து விடுவார்கள். அப்படி நடந்தால் ஓபிஎஸ் அணியில் மிச்சம் மீதி இருப்பர்வகளும் எடப்பாடி அணிக்கே வந்துவிடுவார்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 தேர்தலை சந்திக்கலாம் என்ற ஒரு கணக்கை பாஜக போடலாம்.

பாஜகவின் அல்டிமேட் கோல்
பாஜகவை பொறுத்தவரை 2024ல் நம் கூட்டணி பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதுதான் அல்டிமேட் நோக்கம். இடைத்தேர்தலில் ஒரு ஸ்டேஜை செட் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலேயே முடிவுகட்டலாமா? 2024 தேர்தல் நெருக்கத்தில் பார்த்துக் கொள்ளலாமா, என்பது பற்றியெல்லாம் பாஜக தலைமையிடம் பலவிதமான யோசனைகளில் இருப்பதைப் பார்க்கிறோம். எனவே, பாஜகவின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்துத்தான் பாஜகவின் திட்டம் என்ன என்பது பற்றி நாம் பேச முடியும்.

அப்பவே அப்படி? இப்போ ஏன் தயக்கம்?
கேள்வி : பாஜக இந்தளவுக்கு களத்தில் இல்லாத காலகட்டங்களிலேயே இடைத்தேர்தல்களில் களமிறங்கி இருக்கிறது. இப்போது பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் சூழலில் பாஜக போட்டியிடுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறது?
பதில் : அதிமுக பிளவு ஏற்பட்ட காலத்தில் பாஜக வளர்ச்சி அதிகரித்துள்ளது. இன்று பாஜக நடத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அதையெல்லாம் பார்க்கும்போது பாஜகவுக்கு செல்வாக்கு வளர்ந்திருப்பதாகவே ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட்டால், பலம் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். பலமுனைப் போட்டி இருக்கும் சூழலில், காங்கிரஸ், ஈபிஎஸ், நாம் தமிழர் கட்சி, அடுத்து நான்காவது இடத்தில் பாஜக வந்தால், அது பாஜகவின் இமேஜை சரித்துவிடும். இன்னும் பாஜக வளரவேயில்லை, அண்ணாமலை தலைமையில் கட்சி வளர்ந்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் மாயை என்ற பேச்சு வரும். முன்பு பலமுறை போட்டியிட்டு தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், அப்போதெல்லாம் அக்கட்சி தாங்கள் வளர்ந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டதில்லை. ஆனால், இப்போது தாங்கள் பலமாக இருப்பதாகச் சொல்லும்போது அதற்குரிய வாக்குகளை வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் தான் பாஜக தயக்கம் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications