“பிஜேபி”ல சேருங்க.. வாழ்க்கையே வெறுத்துடும்! தமிழ்நாட்டில் “தாமரை” மலராதது ஏன்? குமுறும் சூர்யா சிவா
சென்னை: அரசியல்வாதி ஆக வேண்டும் என்று நினைப்பவர் யாராவது பாஜகவில் சேர்ந்தால் வாழ்க்கையே வெறுத்து ஓடிவிடுவார் என அண்மையில் பாஜகவில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யா சிவா தெரிவித்து உள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கு அக்கட்சியின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார் மாநில தலைவர் அண்ணாமலை.
இந்த நிலையில் கடந்த மாதம் சூர்யா சிவாவுக்கும், பாஜக சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியாகி கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பரபரப்பு ஆடியோ
டெய்சியை தரக்குறைவான அசிங்கமான வார்த்தைகளை கொண்டு திட்டிய திருச்சி சூர்யா, அவருக்கு கொலை மிரட்டலு விடுத்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பெயர்களையும் பயன்படுத்தினார்.

நடவடிக்கை
இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆணையிடுவதாகவும் தெரிவித்தார். அதேபோல் அந்த ஆடியோவை பகிர்ந்து விமர்சித்த அக்கட்சியை சேர்ந்த காயத்ரி ரகுராமை 6 மாதங்கள் கட்சியிலிருந்து இடைக்கால நீக்கினார் அண்ணாமலை.

சூர்யா தம்பி மாதிரி
சில நாட்கள் கழித்து சூர்யா சிவாவும் டெய்சி சமாதானமாக சம்மதம் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக பாஜக தலைமையகத்தில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய டெய்சி "சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி. எங்களுக்கு இடையே அக்கா - தம்பி போன்ற உறவு உள்ளது." என்றார். இதையடுத்து சூர்யா சிவாவை 6 மாதம் கட்சியில் இருந்து அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்.

கட்சியிலிருந்து விலகல்
இந்த நிலையில் கடந்த வாரம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் திருச்சி சூர்யா. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

கேசவ விநாயகம்
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி." என்று குறிப்பிட்டு உள்ளார்.

எல்.முருகனும் காரணம்
இதனை தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை பகிர்ந்த சூர்யா சிவா, அதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனையும் கேசவ விநாயகத்தோடு சேர்த்து குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் அடுத்து அவர் வெளியிட்ட பதிவில், அண்ணாமலைக்கு நெருக்கமான பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியும் தனது ராஜினாமாவுக்கு காரணம் என்று தெரிவித்தார்.

பாஜகவில் சேர்ந்தால்..
இந்த நிலையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த சூர்யா சிவா, "யாராவது அரசியல்வாதியாக வேண்டும் என்று நினைத்தால் அவர்களை பிஜேபியில் கொண்டுபோய் விடுங்கள். வாழ்க்கையே வெறுத்து ஓடிவிடுவார். மற்ற கட்சிகள் எதிரி யார் என்று முடிவு செய்துவிட்டு அவர்களை குறிவைத்து தாக்குவார்கள்.

தாமரை மலராதது ஏன்?
பாஜகவிற்குள் மட்டும் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்று, யாரையும் தலைதூக்க விடாமல் அடிப்பார்கள். இப்படி கட்சிக்குள் இருப்பவர்களையே காலி செய்வதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவால் வளர முடியவில்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறேன். இவர் இருந்தால் இப்படித்தான் ஆகும் என்று எனது அறிக்கையில் கூறியுள்ளேன்." என்றார்.












Click it and Unblock the Notifications