10 நாளில் நடந்த இரு ஷாக் சம்பவங்கள்! வயிற்றில் "நெருப்பை கட்டிக் கொள்ளும்" மணப்பெண்ணின் பெற்றோர்கள்
சென்னை: கல்யாண பெண்ணை காணோம் என சொல்லும் நிலை மாறி தற்போது மாப்பிள்ளையை காணவில்லை என சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக மணமேடைக்கு வந்துவிட்டு பின்னர் திருமணம் நின்று போவதால் பெண்ணும் பெண் வீட்டாரும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
கடந்த 10 நாட்களில் இருவேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் முதல் சம்பவம்- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி , மகாலட்சுமி ஆகியோரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் செங்கல்பட்டு மெய்யூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு- நிர்மலா ஆகியோரின் மகள் திவ்யாவுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து மாப்பிள்ளை சதீஷ்குமார் பெண்ணிடம் சரிவர பேசுவதில்லை, திவ்யாவே போன் செய்தாலும் போனை எடுக்காமலும் பட்டும் படாமலும் சதீஷ்குமார் பேசி வந்தது தெரியவந்தது.

திவ்யா
இது குறித்து தனது பெற்றோரிடம் திவ்யா கூறியதை அடுத்து அவர்களும் சதீஷ்குமாரின் பெற்றோரிடம், மாப்பிள்ளைக்கு திருமணத்தில் விருப்பமா என கேட்டுள்ளார்கள். அவர்களும் சதீஷுக்கு பூரண சம்மதம்தான், அவர் கூச்ச சுபாவம் கொண்டவர். திருமணத்திற்கு பிறகு சரியாகிவிடும் என கூறி சமாளித்துள்ளனர்.

பத்திரிகை
இதையடுத்து பத்திரிகை அடித்து ஊரார் , உறவினர்களுக்கு எல்லாம் கொடுத்தனர். இவர்களுக்கு திருப்போரூரை அடுத்த கொட்டமேடு பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டன. இருவிட்டார் உறவினர்களும் நேற்றுமுன் தினம் இரவு நடைபெற்ற பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

திருமண வீடு
திருமண வீட்டில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டியது. இந்த நிலையில் நேற்று காலை திருமண மேடையில் புரோகிதர் மந்திரங்களை முழங்கி பெண்ணையும் மாப்பிள்ளையையும் வர சொன்னார். அப்போது பெண் வந்தார். அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாப்பிள்ளை வரவில்லை. இதையடுத்து ரெடியாக தாமதம் என நினைத்து மீண்டும் அவரை அழைக்குமாறு புரோகிதர் சொன்னார்.

சதீஷ்குமாரை காணவில்லை
இதையடுத்து சதீஷ்குமாரை அவரது அறைக்கு போய் பார்த்தால் அவரை காணவில்லை. இதையடுத்த பாத்ரூம், மொட்டை மாடி என அனைத்து இடங்களிலும் தேடியும் அவரை காணவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டும் மாப்பிள்ளை எடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர்.

மாப்பிள்ளை
அப்போது மாப்பிள்ளையின் பெற்றோரிடம் விசாரித்த போதுதான் சதீஷ்குமாருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் , அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் திவ்யா வீட்டில் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட வரதட்சிணைக்கு ஆசைப்பட்டு மாப்பிள்ளை வீட்டார் அனைத்தையும் மூடி மறைத்ததாக தெரியவந்தது.

40 சவரன் நகை
40 சவரன் நகை, ஏசி, கட்டில், பீரோ, 1.50 லட்சம் மதிப்பில் 125 சிசி. பைக் உள்ளிட்ட திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வரதட்சணையாக பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது சம்பவம்
இரண்டாவது சம்பவம்- இதே போல் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் பீகாரில் திருமண மேடை வரை வந்த மணமகன் ஒருவர் திடீரென தாலி கட்டும் நேரத்தில் தப்பியோடுவதும் அவரை துரத்திக் கொண்டே பெண் ஒருவர் ஓடி வருவதும் போன்ற காட்சிகள் வைரலாகியுள்ளது. பைக் மற்றும் ரூ 50 ஆயிரம் ரொக்கம் கொடுத்து அந்நத மணமகன் திருமணம் செய்ய மறுத்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்மதம் முக்கியம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்ட போது இரு மனமும் இணைந்தால் மட்டுமே திருமணம் என்ற நிலை 100 சதவீதம் வர வேண்டும். சிலர் பெண்ணையும் மாப்பிள்ளையையும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய அழைத்து வருவதால்தான் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கும் தலைக்குனிவு என்றாலும் மேற்கண்ட இரு சம்பவங்களிலும் பெண்ணுக்கும் அவரது பெற்றோருக்கும் கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே இருவரது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது. இதனால் அனைவருக்கும் மனஉளைச்சல்தான் ஏற்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications