எடப்பாடிக்கு டென்ஷன்.. 'மூல காரணம்' யாரு? ஓபிஎஸ் 2வது குறிதான்.. மெயின் டார்கெட் அவங்க தானாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பார்த்தால், ஓ.பன்னீர்செல்வத்தை இரட்டைத் தலைமையில் இருந்து நீக்க ஈபிஎஸ் திடீரென முடிவு செய்ததே, பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்காகத்தான் எனத் தெரிகிறது, ஓபிஎஸ்ஸை வெளியேற்றிய கையோடு, தனது மெயின் டார்கெட்டை நோக்கி எடப்பாடி நகர்ந்துவிட்டார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர விரும்பவில்லை, ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவை விடுவிக்க விரும்பவில்லை. இதுதான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான ஈகோ வாருக்கு பிரதான காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஓபிஎஸ் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை தான் கூட்டணி குறித்து சுயாதீனமாக முடிவெடுக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி நினைத்தது தான், நன்றாகப் போய்க்கொண்டிருந்த கட்சியில் திடீரென பிரச்சனையை ஏற்படுத்தி ஓபிஎஸ்ஸை வெளியேற்றி, ஒற்றைத் தலைமையைக் கொண்டு வரக் காரணம் என்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில நிகழ்வுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

அதிமுக - பிளவு

அதிமுக - பிளவு

கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் திடீரென ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினார். கடந்த ஆறு மாதங்களாகவே அதிமுக இரு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ், தனது தலைமையில் தான் அதிமுக செயல்பட்டு வருகிறது எனக் கூறி மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை புதிதாக நியமித்துள்ளார். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆதரவோடு பொதுக்கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறார்.

ஓபிஎஸ் அணியின் புகார்

ஓபிஎஸ் அணியின் புகார்

அதிமுக நான்காண்டு காலம் ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியை இழந்து ஓராண்டு காலமாகவும் நன்றாகச் சென்று கொண்டிருந்த சூழலில், கட்சியை உடைக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளாக கட்சியை இரட்டைத் தலைமை சிறப்பாக வழிநடத்தி வந்த சூழலில் இப்போது ஒற்றைத் தலைமைக்கு தேவை என்ன என ஓபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், தனது ஆதரவாளர்களே அனைத்து பொறுப்பிலும் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார், பதவி வெறியால் தான் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக நகர்வுகளைச் செய்தார் என ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 ஓபிஎஸ் + கூட்டணி

ஓபிஎஸ் + கூட்டணி

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் பூதாகரமானது ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரத்தில் தான். தனது ஆதரவாளருக்கு ஒரு சீட் வேண்டும் என ஓபிஎஸ் பிடிவாதமாக இருந்ததால், ஓபிஎஸ்ஸால் தனக்கு என்றைக்குமே சிக்கல் தான் என உணர்ந்து எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்கள் வாயிலாக ஒற்றைத் தலைமை விவாதத்தைக் கிளப்பினார் என்று சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் தனக்கு எதிரான நிலைப்பாடுகளையே கொண்டிருந்ததும் எடப்பாடியின் இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் முரண்பாடு

ஓபிஎஸ் - ஈபிஎஸ் முரண்பாடு

அதாவது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது பாஜகவின் தயவு தேவைப்பட்டாலும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பவில்லை என்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக + அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் துடைத்து எறியப்பட்டதால், 2021ல் பாஜக கூட்டணியை ஈபிஎஸ் விரும்பவில்லையாம். தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு வரை கூட, பாஜக கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு, தேர்தல் நெருங்கும்போது முடிவெடுப்போம் என்றுதான் ஈபிஎஸ் சொல்லி வந்தார். ஆனால், ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி உறுதி என ஓப்பனாகவே தெரிவித்தார்.

இதற்குதான் பாஜக சேர்த்து வைத்ததா?

இதற்குதான் பாஜக சேர்த்து வைத்ததா?

அப்போதே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை பாஜக இதற்காகத்தான் நம்முடன் சேர்த்து வைத்திருக்கிறது போல என தனக்கு நெருக்கமானவர்களின் கமென்ட் அடித்தாராம். அந்த தேர்தலின்போது, பாஜக அதிக சீட்களைக் கேட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தான் 20 சீட்களில் தொகுதி உடன்பாட்டை முடித்தார். கட்சிக்குள்ளேயே சீனியர் தலைவர்கள் மத்தியில் பாஜக உடனான கூட்டணி மீது விருப்பம் இல்லை என்றெல்லாம், சிலபல நிர்ப்பந்தங்களின் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்தாராம்.

சுத்தமா பிடிக்கல

சுத்தமா பிடிக்கல

2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு, வெளிப்படையாகவே சில அதிமுக தலைவர்கள், பாஜக உடன் கூட்டணி வைத்ததே தோல்விக்குக் காரணம் என்றும் பேசினார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமியின் எண்ணமும் அதுவாகவே இருந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடனான கூட்டணிக்கு கட்டையைப் போட்டதற்கும் ஈபிஎஸ்ஸின் அந்த எண்ணமே காரணமாம். ஆனாலும், ஓபிஎஸ், பாஜக உடனான கூட்டணியை விரும்பியுள்ளார். பாஜகவை ஓபிஎஸ் இழுத்துக்கொண்டே வந்தது எடப்பாடி பழனிசாமிக்கு சற்றும் உவப்பில்லை என்று கூறப்படுகிறது.

முக்கியமான காரணம்

முக்கியமான காரணம்

ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வரை பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட முடியாது என்பதை உணர்ந்ததும், ஓபிஎஸ்ஸை, எடப்பாடி பழனிசாமி வெளியேற்ற நினைத்ததற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதற்கு ஏதுவாக ராஜ்யசபா சீட் பிரச்சனை வந்தது. அதை வைத்தே தனது ஆதரவாளர்களுக்கு கண்ணசைத்து, ஆட்டத்தை ஆரம்பித்தார் எடப்பாடி என்கிறார்கள்.

டார்கெட் பாஜக தான்

டார்கெட் பாஜக தான்


எடப்பாடி பழனிசாமியின் டார்கெட் ஓபிஎஸ் கிடையாது, பாஜக தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. அப்போதெல்லாம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. அடுத்த தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. ஆனால், ஓபிஎஸ் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். தேர்தல் நேரத்தில் எடப்பாடி - ஓபிஎஸ் எதிரெதிராக இறங்கினால் சிக்கல் வரும் என்பதால், இப்போதே ஓபிஎஸ்ஸை வெளியேற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு நகர்த்திவிட்டார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

 மூல காரணம்

மூல காரணம்

பாஜகவுடன் கூட்டணி சேர்வதால் தமிழகத்தில் உள்ள 10 - 15% சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவிற்கு எதிராகச் சென்றுவிடுகிறது, அது அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்துகிறது. அந்த நிலையை உடைக்கவேண்டும் என ஈபிஎஸ் உறுதியெடுத்து விட்டார். அதற்கு பாஜகவை வெளியேற்ற வேண்டும், ஆனால், ஓபிஎஸ் இருக்கும்வரை அது நடக்காது என்பதன் காரணமாகவே முதலில் ஓபிஎஸ்ஸை நகர்த்தி விட்டார், அதுதான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதலுக்கு மூல காரணம் என்கிறார் பத்திரிகையாளர் மணி.

தீவிரமடைந்த பாஜக எதிர்ப்பு

தீவிரமடைந்த பாஜக எதிர்ப்பு

ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் ஏற்பட்டது முதல் ஓபிஎஸ் பாஜக தலைமையை ஒட்ட ஆரம்பித்ததால், எடப்பாடிக்கும் பாஜக தலைமையை அணுக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தற்போது அதில் இருந்தும் விடுபட்டு, பாஜகவை எதிர்க்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள். அமித்ஷாவை சந்திக்காமல் புறக்கணித்தது, குஜராத் செல்லாமல் புறக்கணித்தது, அமித்ஷாவை சந்திக்காததற்கு எடப்பாடி சொன்ன காரணம் என அனைத்துமே பாஜகவுக்கு எதிரான நகர்வுகளை எடப்பாடி தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தான் என்கிறார்கள்.

மெயின் டார்கெட்டை நோக்கி நகர்ந்த ஈபிஎஸ்

மெயின் டார்கெட்டை நோக்கி நகர்ந்த ஈபிஎஸ்

தற்போது இது இன்னும் தீவிரமடைந்துள்ளது. சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, பொன்னையன் போன்ற சீனியர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, பாஜகவையும், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்துப் பேசத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைச் சீண்டுவதன் மூலம், பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்க ஈபிஎஸ் அணி கங்கணம் கட்டிக் களமிறங்கி விட்டது என்றே தெரிகிறது. ஓபிஎஸ்ஸை வெளியேற்றிய கையோடு, பாஜகவை வெளியேற்றும் தனது பிரதான டார்கெட்டை நோக்கி ஈபிஎஸ் நகர்ந்துவிட்டார் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+