இதான் மர்மமா இருக்கு! ஓபிஎஸ் பற்றி வாயே திறக்காத எடப்பாடி! மீட்டிங்கில் என்னாச்சு? அவங்க வந்தது ஏன்?
சென்னை: நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கியமான ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் நிலவி வரும் ஒற்றை தலைமை மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிட்டாலும், இதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. முக்கியமாக தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் நேரடியாக முறையிட்டு உள்ளதால், ஒற்றை தலைமை விவகாரம் இப்போதைக்கு முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
இந்த நிலையில்தான் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் அடையாறில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

அதிமுக கூட்டம்
நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் எம்எல்ஏ பலமும் வெளிப்படையாக தெரிந்தது. மொத்தம் 62 எம்எல்ஏக்கள் நேற்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 62 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிமுக கட்சி கூட்டத்தில் எதிர்பார்க்காத விதமாக பாஜக எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஆர்.காந்தி ஆகிய 3 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

முடிவு எடுக்கவில்லை
அதிமுக கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சித் துணை தலைவரை தேர்வு செய்யும் முடிவு எடுக்கப்படும் என்றே கூறப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணை தலைவராக இருக்கிறார். தற்போது அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால், அந்த பதவி அதிமுகவில் வேறு எம்எல்ஏவிற்கு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் குறித்து நேற்று அதிமுக கூட்டத்தில் எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏன் முடிவு எடுக்கவில்லை?
நேற்று முழுக்க முழுக்க குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி மட்டுமே ஆலோசனை செய்துள்ளனர்.குடியரசுத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி ஆலோசனை செய்துள்ளனர். பின்னர் கட்சியின் பொதுவான சில விஷயங்கள் பற்றி பேசி உள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் இருந்ததால் உட்கட்சி தொடர்பான விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வம் பற்றியும் அவர்கள் ஆலோசனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

முறைப்படி சொல்லுவார்கள்
அதோடு எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவது என்றால் அதற்காக சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இன்னும் எடப்பாடி தரப்பு இதற்கான கோரிக்கையை வைக்கவில்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது.

பரிசீலனை
ஓ. பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகரும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் இப்போது ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடப்பாடி தரப்பு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளதால், தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு பின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக எடப்பாடி தரப்பு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் மர்மம்
அதே சமயம் நேற்று அதிமுக கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், அதிமுக கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசனை செய்யப்பட்டாலும், இது ஒரு கட்சி எம்எல்ஏ கூட்டம். அதில் எப்படி பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள முடியும். இவர்கள் அப்படி ஆலோசனை செய்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதான் அரசியல் வட்டாரத்தில் கடந்த 24 மணி நேரமாக மர்மமாக இருந்து வருகிறது,












Click it and Unblock the Notifications